ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நடிகை அசின்.
அப்படத்தைத் தொடர்ந்து ‘சிவகாசி’, ‘மஜா’, ‘வரலாறு’, ‘போக்கிரி’, ‘கஜினி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார் அசின். ‘கஜினி’ இந்தியில் ரீமேக் செய்யப்பட்டபோது தமிழில் நடித்த அதே பாத்திரத்தில் இந்தியிலும் நடித்தார். மேலும் தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார்.
‘கஜினி’ இந்தி ரீமேக்கைத் தொடர்ந்து, இந்தியில் பல வாய்ப்புகள் வரவே அங்கேயே நடித்து வந்தார். அப்போது பிரபல மைக்ரோமேக்ஸ் செல்போன் நிறுவனத்தின் அதிபர் ராகுல் சர்மாவுக்கும் அசினுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவிக்க கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி இதைப் பற்றி அசின் அதிகாரப்பூர்வமாக பத்திரிகைளுக்கு தெரிவித்தார்.
தற்போது ராகுல் சர்மா – அசின் இருவரின் திருமணமும் அடுத்த மாதம் 26-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார்கள். டெல்லியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இத்திருமணம் நடைபெற இருக்கிறது. திருமணத்துக்கு இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருக்கிறார்களாம்.
நவம்பர் 27-ம் தேதி டெல்லியில் உள்ள பண்ணை வீட்டில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மும்பையிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
ஒரு தங்க மங்கை விடைபெறுகிறார். வாழ்த்தி வழியனுப்புவோம்..!