சமீபத்தில் இந்தியாவையே பரபரப்பாக்கிய தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளின் முதல் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. இதில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர்கள் மற்றும் 22 செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். சரத் அணியைச் சேர்ந்த இயக்குநர் டி.பி.கஜேந்திரன் மற்றும் நடிகை நளினி மட்டும் கலந்து கொள்ளவில்லை.
இந்த செயற்குழு கூட்டத்திற்குப் பின் பாண்டவர் அணியைச் சேர்ந்த புதிய நிர்வாகிகள் அனைவரும் செய்தியாளர்களை வடபழனி கிரீன்பார்க் ஹோட்டலில் சந்தித்தனர்.
தேர்தலின்போது சரத்குமார் அணியை ஆதரித்த கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளும், விக்ரமன் தலைமையிலான இயக்குநர்கள் சங்க நிர்வாகிகளும், சிவா தலைமையிலான பெப்சி நிர்வாகிகளும் இச்செய்தியாளர்கள் சந்திப்பின்போது நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கு பொன்னாடைகள் போர்த்தி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்தக் கூட்டத்தில் தலைவரான நடிகர் நாசர், பொதுச் செயலாளரான விஷால், பொருளாளரான கார்த்தி, துணைத் தலவர்களின ஒருவரான பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்களான ஜே.கே.ரித்தீஷ் மற்றும் நடிகர் ஐசரிவேலன் ஆகியோர் பேசினர்.
பொதுச் செயலாளர் விஷால் பேசும்போது, “நடிகர் சங்க தேர்தலுக்கு முன் இரண்டு அணிகளாக செயல்பட்ட நாங்கள், இனிமேல் ஒரே அணியாக செயல்படுவோம். தேர்தல் பற்றியோ, நடந்து முடிந்த சம்பவங்கள் குறித்தோ இனிமேல் நாங்கள் எதுவும் பேசப் போவதில்லை.
இன்று முதல் எங்களது பணியினைத் தொடங்கவிருக்கிறோம். தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிச்சயம் செயல்படுத்துவோம். எங்களது அணியின் பெயரை யாரோ தவறாகப் பயன்படுத்துவதாகக் கேள்விப்பட்டோம். இனிமேல் அது போன்று பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம். தென்னிந்திய நடிகர் சங்கம் திரைப்படத் துறை சம்பந்தமான அனைத்து சங்கங்களுடனும் இணைந்து செயல்படும்.
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவது தொடர்பாக எஸ்.பி.ஐ. சினிமாஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக இன்றைய செயற்குழு கூட்டத்தில் எதுவும் பேசப்படவில்லை. அடுத்த கூட்டத்தில்தான் அதைப் பற்றி விவாதிப்போம்.
அந்த ஒப்பந்தம் ரத்தானது குறித்து முன்னாள் தலைவர் சரத்குமார் காட்டிய அந்த ஒப்பந்த ஆவணம் இன்னமும் சங்கத்தின் கைக்கு வந்து சேரவில்லை. எனவே அது புதிய நிர்வாகத்தின் கைகளுக்கு வந்து சேர்ந்த பின்புதான், அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதைப் படித்துப் பார்த்துவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று முடிவு செய்வோம்.
எதிர்வரும் காலங்களில் அரசியல் தொடர்பான எந்தவொரு நிகழ்ச்சிகளிலும் தென்னிந்திய நடிகர் சங்கம் கலந்து கொள்ளாது.
கட்சி, அரசியல் தொடர்பானவர்கள் நடிகர் சங்கத்தின் பொறுப்பில் இருக்கக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறோம். தவிர, சங்கமும் முந்தைய காலங்களை போல அரசியல் தொடர்பான உண்ணாவிரதம், போராட்டங்களில் ஈடுபடாது.
தமிழக அரசு அந்தப் பிரச்சினைகளை கவனமாகக் கையாளுகிறது. காவிரி பிரச்சினை உள்ளிட்ட பொதுமக்கள் பிரச்சினைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது.
நடிகர் சங்கம் இனிமேல் அது மாதிரியான பொதுப் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்தாது. நல்ல நோக்கத்துக்காக நிதி தேவைப்பட்டால் அதனை திரட்டிக் கொடுப்போம்.
கட்டிடம் கட்டுவதற்கு கலை நிகழ்ச்சி நடத்தும் திட்டம் ஏதுமில்லை. ஆனால் அதற்கு பதிலாக இளம் நடிகர்கள் ஒன்று சேர்ந்து சினிமா தயாரித்து வெளியிட்டு பணம் திரட்டுவோம். மேலும் நட்சத்திர கிரிக்கெட் போட்டிகள் நடத்தி சங்கத்திற்கு நிதி திரட்டுவோம்.
நடிகர் சங்க ட்ரஸ்டுக்கு 9 பேர் டிரஸ்டிகளாக இருக்க வேண்டும். நடிகர் சங்கத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகிய 3 பேர், இவர்களைத் தவிர்த்து செயற் குழுவைச் சேர்ந்த 3 பேர், பொதுக் குழுவைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 9 டிரஸ்டிகள் இருக்க வேண்டும். நடிகர் கமல்ஹாசனை டிரஸ்டியில் ஒருவராக பணியாற்ற வரும்படி அழைத்தோம். அவரும் அந்தப் பணியை ஏற்றுக் கொள்ள ஒத்துக் கொண்டுள்ளார்.
இந்த நேரத்தில் நான் பலருக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களுக்கு எங்களது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் நல்லபடியாக நடைபெற ஒத்துழைப்பு அளித்த காவல்துறையினருக்கு நன்றி. தேர்தல் முடிந்த்தும் பள்ளியை சுத்தம் செய்து கொடுப்பதற்கு சிறிது தாமதம் ஏற்பட்டுவிட்டது. இதற்காக எங்களது வருத்த்த்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இந்த பாண்டவர் அணிக்கு பக்கபலமாக இருந்து ஒத்துழைப்பு கொடுத்த ஐசரிவேலன், ஜே.கே.ரித்தீஷ், ஸ்டூடியோ 9 சதீஷ் ஆகியோருக்கு எங்களது நன்றி.
இந்த நடிகர் சங்கத்தின் தேர்தலை சென்னையில் இருந்து நியூயார்க்வரையிலும் இடைவிடாத நேரலையில் தமிழ் மக்கள் கண்டுகளித்துள்ளனர். இந்த அளவுக்கு பரபரப்பாக்கிய ஊடகங்களுக்கும் எங்களது நன்றி..” என்றார்.
துணைத் தலைவர்களில் ஒருவரான பொன்வண்ணன் பேசும்போது, “இத்தேர்தலில் நாடக நடிகர்கள் சார்பில் போட்டியிட்ட கரூரை சேர்ந்த தண்டபாணி என்பவரும் நடிகை சிவகாமியும் செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எங்களது வாழ்த்துகள்.
தேர்தல் சமயத்தில் நாங்கள் கொடுத்த 41 வாக்குறுதிகளில் ஐந்தினை இப்போதே முடித்துவிட்டோம் அடுத்த இலக்கு கட்டிடம்தான்.
ஸ்பை சினிமாஸுடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது குறித்து அவர்களுடன் உட்கார்ந்து பேச வேண்டும். அந்தப் பணி முடிந்தவுடன் பூச்சி முருகன் நிச்சயமாக வழக்கனை வாபஸ் பெற்று விடுவார். அது சாதாரண நடைமுறைதான். உடனடியாக முடிந்துவிடும். இதன் பின்பு உடனடியாக புதிதாக கட்டிடம் கட்டுவது பற்றிய வேலைகளைத் துவக்கிவிடுவோம்.
அந்த இடத்தைச் சுற்றி 6 பள்ளிக் கூடங்கள் இருக்கின்றன. வணி வளாகங்கள் கட்டினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று சொல்லித்தான் பலரும் வழக்கு தொடர்ந்தார்கள். நாங்கள் நிச்சயமாக அங்கே வணிக நோக்கத்தில் எதையும் கட்டப் போவதில்லை. எனவே அந்த வழக்குகளும் நிச்சயம் தீர்ந்துவிடும்.
ஏற்கெனவே இருந்த சங்கரதாஸ் சுவாமிகள் நினைவரங்கம் போலவே ஒரு அரங்கத்தைக் கட்டி நாடகங்கள் போடுவதற்கு உதவி செய்ய இருக்கிறோம். மற்றபடி கட்டிட வாடகையில் கிடைக்கும் பணத்தை வைத்துத்தான் உறுப்பினர்களுக்கு சேவை செய்ய இருக்கிறோம்.
எங்களுடைய உறுப்பினர்களின் மருத்துவ சிகிச்சைக்காக எஸ்.ஆர்.எம். நிறுவனத்தின் தலைவர் பச்சைமுத்துவை நேரில் சந்தித்து உதவி செய்யும்படி கேட்டுள்ளோம். அவரும் நிச்சயம் ஆவண செய்வதாக கூறியுள்ளார்.
மேலும் ஐசரிவேலன் அவர்களின் துணையோடு கல்வி வேந்தர்களான ஏ.சி.சண்முகம், ஜெகத்ரட்சகன் இருவரிடமும் பேசியுள்ளோம். அவர்கள் தங்களது கல்லூரிகளில் வருடத்திற்கு 100 சீட்டுகளை எங்களது சங்க உறுப்பினர்களுக்கு இலவசமாக தருவதாகச் சொல்லியுள்ளனர். மேலும் இலவச மருத்துவ சிகிச்சைக்கும் ஒத்துக் கொண்டுள்ளனர்..” என்றார்.
சங்கத்தின் பொருளாளரான நடிகர் கார்த்தி பேசும்போது, “நாங்கள் இப்போது பொறுப்புக்கு வந்த பிறகு கூடவே பயமும் வந்துவிட்டது. எங்களது கடமையை எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக செய்து முடிக்க நினைத்துள்ளோம். இதற்காக ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளோம்.
வங்கியில் இருக்கும் சங்கத்தின் சாதாரண அக்கவுண்ட்டில் 21 லட்சத்து 37 ஆயிரத்து 17 ரூபாய் 84 காசும், பிக்ஸட் டெபாஸிட்டாக 87 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும் மட்டுமே இருக்கிறது.
கடந்த 10 ஆண்டு கால சங்கத்தின் வரவு செலவுகளை ஆராய புதிதாக ஒரு ஆடிட்டரை இப்போது நியமித்திருக்கிறோம். அவர் இனிமேல்தான் கணக்கு வழக்குகளை ஆடிட்டிங் செய்வார். ஏதாவது தவறுகள் நடந்திருப்பது தெரிய வந்தால் அதனை கண்டிப்பாக மக்களுக்கும், உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்துவோம்.
இனி இந்த சங்கம் வேகமாகச் செயல்படும். உதவி பெற தகுதியானவர்கள் பட்டியல் வேகமாக தயாராகி வருகிறது. அவர்களுக்கு எந்த வகையில் உதவி செய்ய முடியுமோ அது அத்தனையையும் விரைவில் செய்து முடிப்போம். உறுப்பினர்களின் டேட்டாபேஸ் கலெக்சன் பற்றிய விஷயத்தையும் துவக்கியுள்ளோம். விரைவில் செய்து முடிப்போம்.
யாரையும் பழி வாங்குவது எங்களது நோக்கமல்ல. நடிகர் சங்க உறுப்பினர்கள் யார்..? உறுப்பினர் அல்லாதவர் யார் என்று வரைமுறைப்படுத்தும் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தேவையில்லாதவர்கள் தானாகவே வெளியில் சென்றுவிடுவார்கள்.
எங்களுக்கு எல்லாவகையிலும் உறுதுணையாக இருந்த சச்சு அம்மா, சத்யராஜ் ஸார், வடிவேலு ஸார், விவேக் ஸார்.. மற்றும் எங்களுக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் எங்களது நன்றி..” என்றார்.
“சங்கத்தின் பெயர் மாற்றப்படுமா…?” என்று துணைத் தலைவர் பொன்வண்ணனிடம் கேள்வி கேட்டதற்கு, “அது போன்ற கோரிக்கை ஏற்கெனவே ஒரு முறை சங்கத்திடம் வைக்கப்பட்டது அது தொடர்பாக ஒரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அப்போது அது பற்றி ராதாரவியிடம் நான்கூட கேட்டேன். அதற்கு அவர் ‘இதில் சில சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. அதனால்தான் செய்ய முடியவில்லை’ என்றார். அதற்கு மேல் நாங்களும் அதனை அப்போது வற்புறுத்தவில்லை.
இப்போது மறுபடியும் ரஜினி ஸார், பாரதிராஜா உள்ளிட்ட பலரும் இது பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் இது பற்றி சட்ட வல்லுநர்களிடம் கலந்தாலோசித்து முடிவு செய்வோம்.. எங்களுக்கும் விருப்பம்தான். ஆனால் சட்டச் சிக்கல்கள் இல்லாமல் இதனை செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். அதனால் கொஞ்சம் தாமதமாகலாம்..” என்றார் பொன்வண்ணன்.
சங்கத்தின் பெயரை மாற்றினால் நிச்சயமாக நமக்குப் பெருமைதான்..! சீக்கிரமா செய்யுங்க சாமிகளா..!













