full screen background image

நடிகை அனுஷ்கா – இசைஞானி இளையராஜா திடீர் சந்திப்பு..!

நடிகை அனுஷ்கா – இசைஞானி இளையராஜா திடீர் சந்திப்பு..!

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா இன்று காலை பீரசாத் ஸ்டூடியோவில் இசைஞானி இளையராஜாவை சந்தித்து ஆசி பெற்றார்.

actress-anushka-meet-illayaraja-stills-008

தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடவிருக்கும் ருத்ரம்மா தேவி படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளுக்காக இசைஞானி இளையராஜா நாளை லண்டன் செல்லவிருக்கும் சூழலில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இளையதளபதி விஜய் நடித்த சூப்பர்ஹிட் படமான கில்லி படத்தின் கதாசிரியரான குணசேகரன் தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கும் இந்த ருத்ரம்மா தேவி படம் இசைஞானி இளையராஜா இசையமைக்கும் 1001-வது படமாகும்.

சின்ன வயதில் இருந்தே இளையராஜாவின் தீவிர ரசிகையாக இருக்கும் அனுஷ்கா இளையராஜாவை சந்திக்க வேண்டும் என்று மிகவும் விருப்பப்பட்டிருக்கிறார். இசை வேலைகள் சம்பந்தமாக ருத்ரம்மா தேவியின் இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர் ஆகியோர் இசைஞானி இளையராஜாவுடன் இருக்கும் தகவலைக் கேட்டுவிட்டு அடுத்த விமானத்தை பிடித்து ஹைதராபாத்தில் இருந்து ஓடோடி வந்திருக்கிறார் அனுஷ்கா.

actress-anushka-meet-illayaraja-stills-003

முகமன் மலர அவரை வரவேற்ற இளையராஜா, அனுஷ்காவின் நடிப்பை வெகுவாக பாராட்டி வாழ்த்தியிருக்கிறார். இசைஞானியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர் அனுஷ்கா “இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்..” என்று உள்ளப் பூரிப்புடன் கூறினார்.

‘ருத்ரம்மா தேவி’ படம் முழுக்க முடிவடைந்து சமீபத்தில்தான் பாடல் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இது தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது. இதன் தமிழக தியேட்டர் ரிலீஸ் உரிமையை மறைந்த இயக்குநர் இராம.நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. இந்நிறுவனத்தின் சார்பில் இராம.நாராயணனின் மகனான முரளி என்.ராமசாமி இப்படத்தை வெளியிடவிருக்கிறார்.

அனுஷ்காவின் புகழைப் பரப்பிய கோடி ராமகிருஷ்ணா இயக்கிய ‘அருந்ததி’ படத்தையும் இதே நிறுவனம்தான் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் அனுஷ்காவுடன் ராணா டகுபதி, அல்லு அர்ஜூன் என்று இரண்டு ஹீரோக்கள் நடித்திருக்கிறார்கள். மேலும் கிருஷ்ணம்ராஜூ, ஆதித்ய மேன்ன், பாபா சாகேல், விஜயகுமார், சுமன், பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், கேத்தரின் தெரேசா, ஹம்ச நந்தினி, அதிதி செங்கப்பா மற்றும் பல பிரபலங்களும் நடித்திருக்கிறார்கள்.

அஜயன் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். ஏ.ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்திருக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கம் படைத்திருக்கிறார். நீட்டா லூல்லா உடையலங்காரப் பணியை மேற்கொண்டிருக்கிறார். பீட்டர் ஹெயின் சண்டை பயிற்சியை கையாண்டிருக்கிறார்.

முப்பரிமாண முறையில் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் இந்த கோடை விடுமுறையில் சிறுவர்களையும், குடும்பத்தினரையும் மகிழ்விக்க வரவிருக்கிறது..!

Our Score