full screen background image

2 மாதங்களுக்குள் நடிகர் சங்கத் தேர்தல் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2 மாதங்களுக்குள் நடிகர் சங்கத் தேர்தல் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தேர்தலை நடத்தும் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி இ.பத்மநாபனை நியமித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தேர்தல் ஜூலை 15-ந் தேதி நடைபெறும் என்று கடந்த ஜூன் 5-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். 

அந்த வழக்கு மனுவில், ‘நடிகர் சங்கத்துக்கு தேர்தல் ஜூலை 15-ந் தேதி புதன்கிழமை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது. வேலைநாட்களில் நடிகர்கள் படப்பிடிப்பில் இருப்பார்கள். எனவே, தேர்தலை மாதத்தின் 2-வது ஞாயிற்றுக்கிழமை நடத்தவும், வாக்காளர் விவர பட்டியலை எங்களுக்கு வழங்கவும் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிசந்திரபாபு, நடிகர்கள் சங்க தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து கடந்த ஜூன் 26-ந் தேதி இடைக்கால உத்தரவை பிறப்பித்தார். இந்த தடையை நீக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவி மேல்முறையீடு செய்தார். 

இந்த மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு கடந்த 7-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் துணை விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளதா? என்பதை சங்கங்களின் பதிவாளர் உறுதி செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சங்கங்களின் பதிவாளர் தன்னுடைய அறிக்கையை தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் நிர்வாகி தேர்தலை நடத்தும் அதிகாரியாக, ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி இ.பத்மநாபன் நியமிக்கப்படுகிறார்.

இவர், தேர்தல் தேதியை அறிவித்து, தேர்தலை நடத்தி, அதன் முடிவுகளையும் வெளியிட வேண்டும். இதற்காக தேவையான அனைத்து ஆவணங்களையும், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரிடம் இருந்து நீதிபதி பெற்றுக் கொள்ளலாம்.

விசாரணையை வருகிற அக்டோபர் 9-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்..” என்று கூறியுள்ளனர். 

Our Score