முனைவர் V.விஜய் ஆனந்த் ஸ்ரீராம் இயக்கத்தில் ஜோ ஸ்டார் எண்ட்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பாக கோடீஸ்வர ராஜு தயாரித்துள்ள திரைப்படம் ‘ஆகம்’.
இத்திரைப்படக் குழு மறைந்த மாமேதை அப்துல் கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஒரு பாடலை பதிவு செய்ய திட்டமிட்டுள்ளது.
இன்றைய கல்வியின் நிலையை பற்றியும், கற்ற கல்விக்கான வேலை வாய்ப்புகளின் தரத்தைப் பற்றியும் நேரடியாக சொல்லும் கதைதான் ‘ஆகம்’.
ஒவ்வொரு தனி மனித தேவையும், சமூதாய நிலையும் இன்றைய காலக்கட்டத்தில் வேலை வாய்ப்புக்கான தேடலை அதிகப்படுத்தியுள்ளது. உலகெங்கும் கொட்டிக் கிடக்கும் வாய்ப்புகளை எட்டிப் பிடிக்க நினைக்கும் இன்றைய சமூதாயத்தின் வெளிநாட்டு மோகமும், தான் நிலை பெற வேண்டும் என்ற எண்ணமும் இன்று பல இளைஞர்களை உலுக்கி வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான கோடி ஊழலும், மனித வளத் துறையில் நிகழ்ந்து வருகிறது.
சுதந்திரத்துக்கு முன் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற முழக்கங்கள் ஓங்கி ஒலித்திருந்தன. அதேபோல் இன்று இந்தியாவை வளர்ச்சி பாதையில் இட்டுச் செல்ல ‘இந்தியனே வெளியேறாதே’ என்ற முழக்கம் ஒவ்வோரு மாணவனுக்கும் எட்டும் வகையில் ஒலிக்க செய்ய வேண்டியிருக்கிறது. இத்தகைய சிக்கல்களும் அதனை நிவர்த்தி செய்யும் வழி வகைகளையும் ஆராயும் படம்தான் ‘ஆகம்’.
நாட்டின் முன்னேற்றத்தை தன் முழு மூச்சாக கொண்டிருந்த திரு அப்துல் கலாம் அவர்களைப் பற்றிய ஒரு பாடலை எங்கள் படத்தில் அமைத்துள்ளோம். அதை அவருக்கு திரையிட்டு காட்டவும் திட்டமிட்டுமிருந்தோம்.
காலத்தின் கட்டளையால் இந்த நாடே அவரை இன்று இழந்து தவிக்கிறது. நாட்டு மக்களின் அன்பையும், ஆதர்ஷத்தையும் பெற்ற திரு.கலாம் அவர்களை பற்றி இயற்றிய பாடல் கொண்டே அந்த மாமேதையின் உன்னத ஆன்மாவிற்கு அஞ்சலி செய்ய எங்கள் படக் குழு திட்டமிட்டுள்ளது…” என்று கண்கள் கலங்க கூறினார் முனைவர் V. விஜய் ஆனந்த் ஸ்ரீராம்.