சென்ற வெள்ளிக்கிழமை மாலை அபுதாபி இந்தியன் சமூக மற்றும் கலாச்சார அரங்கில் ‘பாரதி நட்புக்காக’ அமைப்பு பொங்கல் மற்றும் ஆண்டு விழா நிகழ்வாக இயக்குநர் சிகரம் திரு.கே.பாலசந்தரின் நினைவைப் போற்றும் விதமாக ‘அபூர்வராகம்’ என்ற நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த நிகழ்வில் ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிராஜா, கலைமாமணி திரு. டெல்லி கணேஷ், திரு. யூகிசேது, கே.பி.யின் நிழல் என்றழைக்கப்படும் திரு, மோகன், வீணையில் ஜாலம் புரியும் வீணை கலைஞர் ராஜேஷ் வைத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முதலில் மேடைக்கு அழைக்கப்பட்ட கே.பியின் நிழல் திரு. மோகன் அவர்கள் அழைக்கப்பட்டார். 26 வருடங்கள் கே.பி.யுடன் நிழலாக இருந்திருக்கிறார். இவர் பேசும்போது வார்த்தைகள் வாயளவில் வராமல் மனசில் இருந்து வந்தன. மதுரைப் பேச்சு வழக்கில் கே.பி.யை அழகாய்… தொண்டையை அடைக்கும் துக்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.
“எங்க ஸார் இல்லாம நான் வந்திருக்கும் முதல் நிகழ்ச்சி… அதுவும் பெரிய ஆட்களுடன் என்னையும் அழைத்திருக்கிறீர்கள். மிக்க நன்றி..
நான் கே.பி. ஸார்கூட காலையில ஏழு மணியில இருந்து இரவு அவர் உறங்கும்வரை அருகில் இருப்பேன். அதுவும் அவுட்டோர் சூட்டிங் என்றால் இருபத்தி நான்கு மணி நேரமும் அவரோடு இருப்பேன். பாரதிராஜா சார்கூட ‘உன்னைய மாதிரி ஒரு ஆள் எனக்கு இல்லையேய்யா’ன்னு சொல்லுவாங்க.
‘கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் என்று சொன்னவனை, புஷ்பா அம்மா, ஐயாவின் மருமகள்கள் என எல்லோருடனும் பேசி எனக்குப் பெண் பார்த்து என் மாமனாரிடம் ‘என்னோட ஒரு மணி நேரம் வேலை பாக்க முடியாது… இவன் எங்கூட இத்தனை வருசமா இருக்கான். அதனால உங்க பொண்ணை நல்லாப் பாத்துப்பான்னு சொல்லி கல்யாணம் பண்ணி வைத்தார்…
ஐயா முடியாம இருக்கும்போது, ‘இதுவரை நீங்க பாத்தது எல்லாம் முக்கியமில்லை. இப்ப அவரு மருத்துவமனையில இருக்கார்… அவர் எழுந்து வரும்வரை நீங்க அங்கயே இருக்கணும்… இதுதான் முக்கியம்’ என்று என் மனைவி சொன்னாள். ஐயாவை நான் கை பிடித்து அழைத்துச் சென்றேன். இப்போ நான் தனியா… இனிமேல் என்னை ஐயா கைப்பிடிச்சி எல்லா இடங்களுக்கும் அழைத்துச் செல்வார்ன்னு நம்புகிறேன்..” என்றார்.
செய்திகளுக்கு நன்றி : http://vayalaan.blogspot.com/2015/02/1.html