full screen background image

“கே.ஜி.எஃப்.-சேப்டர்-2′ – ‘பீஸ்ட்’ மோதல் இல்லை-ரசிகர்கள் இரண்டு படத்தையும் பார்ப்பார்கள்”-நாயகன் யஷ்ஷின் சாதூர்யப் பேச்சு..!

“கே.ஜி.எஃப்.-சேப்டர்-2′ – ‘பீஸ்ட்’ மோதல் இல்லை-ரசிகர்கள் இரண்டு படத்தையும் பார்ப்பார்கள்”-நாயகன் யஷ்ஷின் சாதூர்யப் பேச்சு..!

ஹோம்பாலே பிலிம்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட் செலவில் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கே.ஜி.எஃப்.- சாப்டர்-2’

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த ‘கே.ஜி.எஃப்.சாப்டர்-2’ படத்தில் கதையின் நாயகனாக ‘ராக் ஸ்டார்’ யஷ்  நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார்.

இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

புவன் கௌடா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு, ரவி பர்சூர் இசை அமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

இந்தப் படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழா நேற்று மாலை பெங்களூரூவில் ஓரியன் மாலில் உள்ள பி.வி.ஆர். தியேட்டரில் நடைபெற்றது.

இந்த விழாவின் நிகழ்வை பாலிவுட்டின் முன்னணி இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர் தொகுத்து வழங்கினார்.

கே.ஜி.எஃப்.-சாப்டர்-2’ முன்னோட்ட வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் ஹோம்பாலே பிலிம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்ததூர் நன்றி தெரிவித்தார்.

இந்தப் பிரம்மாண்டமான விழாவில், கே.ஜி.எஃப்.’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முன்னோட்டம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியானது.

‘கே.ஜி.எப்.சாப்டர்-2‘ படத்தின் தமிழ் பதிப்பு முன்னோட்டத்தை பிரபல கன்னட நடிகரான சிவராஜ்குமார் வெளியிட்டார்.

இந்த விழாவில் படத்தின் நாயகன் யஷ் பேசுகையில், ”இப்போது புனித் ராஜ்குமாரை நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம். அவருக்கு எனது அஞ்சலி. ஹோம்பாலேயின் பயணம் புனித் அவர்களால் தொடங்கப்பட்டது. இதில் நானும் சிறிய அளவில் பங்களிப்பு செய்திருக்கிறேன்.

இப்படத்தின் மூலம் கிடைக்கும் எல்லா புகழும் என்னுடைய கன்னட சினிமாவுக்கும், தில் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் சேர வேண்டும். அத்துடன் ஹோம்பாலே பிலிம்ஸ்’ நிறுவனத்திற்கும் பேரும் புகழும் கிடைக்க வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் எங்களது கனவுகளை நனவாக்க நல்லதொரு வாய்ப்பை வழங்கினார்கள்.

இது பிரசாந்த் நீலின் படம். அதில் நான் ஒரு பகுதியாக இருந்தேன். அவ்வளவுதான். அவர் கதாநாயகர்களை நேசிக்கிறார். ஒவ்வொரு படைப்பாளிகளும் முன்னணி நடிகர்களை நேசிக்கும்போது அவர்களிடமிருந்து சிறந்தவற்றை பெறுகிறார்கள்.

ரவீனா தாண்டன் ஒரு அற்புதமான நடிகை. சஞ்சய்தத் ஒரு சிறந்த போராளி. தன்னுடைய உடல் நல சிக்கல்களுக்கு இடையில் சண்டைக் காட்சிகளில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி, படத்தை ஒப்பற்ற நிலைக்கு கொண்டு சென்றார். நான் அவரின் மிகப் பெரிய ரசிகன்.

எங்கள் மீது நம்பிக்கை வைத்து ஐந்து வருடங்கள் பொறுமையாக காத்திருந்த என் கதாநாயகி ஸ்ரீநிதி ஷெட்டிக்கு நன்றி. அவரின் முதல் படம் ஐந்து மொழிகளில் வெளியாகிறது என்பது அதிர்ஷ்டம்தான். படத்தில் பணியாற்றிய நடிகை மாளவிகாவிற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.

கே.ஜி.எஃப்.’ படமும், ‘பீஸ்ட்’ படமும் போட்டிக்காக ஒரே நாளில் வெளியாகவில்லை. இதில் ‘கே.ஜி.எஃப். Vs. பீஸ்ட்’ என்பதெல்லாம் கிடையாது. இதனை ‘கே.ஜி.எஃப்.’  மற்றும் ‘பீஸ்ட்’ என்றுதான் பார்க்க வேண்டும்.

இது ஒன்றும் தேர்தல் கிடையாது. தேர்தலில்தான் ஒருவரின் வாக்கை வாங்க சண்டை நடக்கும். இது சினிமா. சினிமாவில் என்னுடைய படத்தையும் பார்க்கலாம். விஜய் சாரின் படத்தையும் பார்க்கலாம். இத்தனை நாளாக மக்களை என்டர்டெயின் செய்து விஜய் சார் ஒரு பெரிய ஸ்டாராக உள்ளார். நாம் அனைவரும் அவரை மதிக்க வேண்டும். அவர் எனக்கு சீனியர். அவர் மீது எனக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு.

நாங்கள் ஒரு பான் இந்தியா படத்தை எடுத்துள்ளோம். மேலும், 8 மாதங்களுக்கு முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டோம். நாங்கள் திட்டமிட்ட தேதியில் எந்தப் படம் ரிலீஸ் ஆகும் என்று அப்போது எங்களுக்கு தெரியாது. எனவே ‘கே.ஜி.எஃப். Vs. பீஸ்ட்’  என்று ஒப்பிடுவதைவிட இரண்டு படங்களையும் பார்க்க வேண்டும் என்று சொல்லலாம்.

நானும் ‘பீஸ்ட்’ படத்தைப் பார்ப்பேன். விஜய் சாரின் ரசிகர்களுக்கும் ‘கே.ஜி.எஃப்.’ நிச்சயம் பிடிக்கும். அனைவரும் சேர்ந்து இரண்டு படங்களையும் பார்த்து இந்திய சினிமாவை கொண்டாடுவோம்…” என்று தெரிவித்துள்ளார்.

Our Score