“இளையராஜா என்னும் இசைக் கடலில் கண்டெடுத்த முத்துதான் அனிருத்” – நடிகர் விவேக்கின் புகழாரம்..!

“இளையராஜா என்னும் இசைக் கடலில் கண்டெடுத்த முத்துதான் அனிருத்” – நடிகர் விவேக்கின் புகழாரம்..!

“இளையராஜா என்னும் இசைக் கடலில் கண்டெடுத்த முத்துதான் அனிருத்…” என்று அனிருத்தே எதிர்பார்க்காத அளவுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் நடிகர் விவேக்.

‘ஆல் இன் பிச்சர்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திராவின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சாய் பரத் இயக்கியிருக்கும் படம் ‘ரம்.’

இந்தப் படத்தில் ஹரி ஷிகேஷ், ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன் மற்றும் விவேக் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த ‘ரம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ‘ஹயாத்’ ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது.

பிரம்மாண்ட முறையில் நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, முன்னணி தயாரிப்பாளர்களுள் ஒருவரான ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா, எழில்மிகு காட்சிகளை யதார்த்தமாக படமாக்கும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா மற்றும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம், நடிகர் ஆதவ் கண்ணதாசன், ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் கதாநாயகன் கோகுல் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ‘ரம்’ திரைப்படத்தின் படக் குழுவினர்களான தயாரிப்பாளர்   ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜய ராகவேந்திரா, இயக்குநர் சாய் பரத், இசையமைப்பாளர் அனிரூத், ஹரி ஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, நரேன், விவேக், அம்ஜத், அருண் சிதம்பரம், பாடகர் சிட் ஸ்ரீராம்,  பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேக் வேல்முருகன் மற்றும் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்.

thiruttu-payale-pooja-stills-37  

“ரம் திரைப்பட குழுவினரை போன்ற இளம் கூட்டணியோடு பணியாற்றியது, எனக்கு புது உற்சாகத்தை அளித்ததோடு மட்டுமில்லாமல், என்னை மீண்டும் இளமையாகவும் மாற்றியிருக்கிறது. நம்முடைய இளைஞர்களின் மனதை இசையால் கவருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால், அதை தன்னுடைய மனதை வருடும் இசையால் செய்திருக்கிறார் அனிருத்.

நான் தீவிரமான இளையராஜாவின் ரசிகன். வேறு யாரையும் இசையமைப்பாளர்னு ஒத்துக்கவே மாட்டேன். பல வருடங்களுக்கு முன் இயக்குநர் சிகரம் பாலசந்தர்கூட ஒரு நாள் கார்ல போயிட்டிருந்தேன். அப்போ கார்ல ஒரு பாடலை போட்டு அதைக் கேட்க சொன்னார். நானும் கேட்டேன். ‘எப்பிடிடா இருக்கு..?’ என்றார் கே.பி. ‘இதென்ன சார்… சின்னப் பசங்க ரைம்ஸ் பாடுற மாதிரி இருக்கு’ன்னு சொன்னேன். ‘எளிமையா இருக்குல்ல..? அதுதான் வேணும்’னு சொன்னார். அன்று அவர் போட்டுக் காட்டிய பாடல், திலீப் என்கிற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ‘ரோஜா’ படத்தின் பாடல். அப்பவே ரஹ்மான் ஒரு பெரிய இடத்தை பிடிப்பார் என்று நான் உறுதியாக நம்பினேன். அதேபோல் நடந்துவிட்டது.

அவர் மட்டுமில்லாமல் அப்படி நான் நம்பிய பலரும் இன்று சினிமாவில் முக்கிய இடத்திலிருக்கிறார்கள். அனிருத் இன்று இளைஞர்களின் உலகத்தை கலக்கிக் கொண்டிருக்கிறார். என்னோட செல்லம் அவர். இந்தப் படத்தில் அனிருத்துங்கிற ஒருத்தர் இருப்பதுதான் முதல் பெருமை.. இளையராஜாவின் அடியொற்றி அனிருத்தும் இப்போ வளர்ந்துட்டாரு..!

அனிருத் எளிமையானவர் என்பதற்கு உதாரணமா ஒரு விஷயத்தை சொல்லணும். நான் நடித்த ஒரு படத்தில் ஒரு பாடல் பாடணும்னு சொல்லி அவரை கூப்பிட்டேன். கார் அனுப்புங்க வர்றேன் என்று சொல்லாமல், அவரே தேடிப் பிடிச்சு அந்த இடத்துக்கு வந்துட்டார். அப்படியொரு மனசு அவருக்கு..” என்று சொல்லி புகழாரத்தை முடித்தார் விவேக்.

aniruth-1

“பொதுவாக பேய் படங்கள் என்றாலே எனக்கு பயம். அதுமட்டுமன்றி, 13-ம் நம்பர் என்பது பேய்களை குறிக்கும் எண் என்பதால், அந்த எண்ணின் மீதும் எனக்கு பயம்தான். ஆனால் தற்போது நான் இசையமைத்திருக்கும் இந்த ‘ரம்’ திரைப்படம், என்னுடைய 13-வது படம். அதுவும் பேய் படம். இதுவே பயங்கர காமெடியா இருக்கு..” என்றார் இசையமைப்பாளர் அனிருத்.

k-e-gnanavelraja-1  

“ஒரு திரைப்படத்தை தயாரித்துவிட்டு, அதை வியாபாரம் செய்வதுதான் மிகவும் கடினமான காரியம். ஆனால் அந்த வியாபாரத்தை, தன்னுடைய கடின உழைப்பால் சிறப்பான விதத்தில் செய்து முடித்திருக்கும்  இளம் தயாரிப்பாளர்  ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜய ராகவேந்திராவை பாராட்டுகிறேன். இந்த ‘ரம்’ திரைப்படம் அமோக வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்..” என்று வாழ்த்தினார் ‘ஸ்டுடியோ கிரீன்’ தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.

Our Score