நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

நடிகர் விவேக்கிற்கு எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

மாரடைப்பு காரணமாக வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் விவேக்குக்கு தற்போது மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரபல நகைச்சுவை நடிகரான விவேக், கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார்.

நேற்றைக்கு கொரோனா நோய்த் தடுப்பு ஊசியைப் போட்டுக் கொண்ட விவேக், மற்றவர்களையும் விரைவாகச் சென்று ஊசி போட்டுக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் இன்று காலை தனது வீட்டில் குடும்பத்தாருடன் பேசிக் கொண்டிருந்த விவேக் திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு முதல் கட்ட சோதனையில் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள விவேக்கின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் விவேக்குக்குத் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. விவேக்கின் இதயச் செயல்பாட்டை சீர் செய்யவே இந்த எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நடிகர் விவேக்கிற்கு நாளை ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பல திரையுலகப் பிரபலங்கள் விவேக் உடல் நலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்று தங்களது சமூக வலைத்தளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Our Score