தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா இன்று காலை சங்க மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 25 லட்சம் ரூபாய் செலவில் 3,250 நடிகர் மற்றும் நடிகைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. வேஷ்டி, சட்டை, சேலை மற்றும் இனிப்பு ஆகியவைகள் இந்தப் பரிசுப் பட்டியலில் இருந்தன. சென்னையில் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களான 2000 நபர்களுக்கு இந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், பொதுச் செயலாளர் நடிகர் விஷால், துணைத் தலைவர் பொன்வண்ணன், பொருளாளர் கார்த்தி, மற்றும் செயற்குழு உறுப்பினர்களான சோனியா போஸ், உதயா, எஸ்.வி.சேகர், ஸ்ரீமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் விஷால் பேசும்போது, “நாங்கள் வெற்றி பெற்ற உடனேயே நடிகர் சங்கத்தின் உறுப்பினர்கள் எல்லோருக்கும் ஸ்வீட் பாக்ஸ் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்து இருந்தோம். இந்த தீபாவளி பரிசினால் மகிழ்ச்சியடைந்துள்ள நமது சங்க உறுப்பினர்களை பார்க்கும்போது மிகவும் பெருமையாக உள்ளது.
எப்படி எல்லோரும் திரண்டு வந்து தேர்தலில் வாக்களித்தார்களோ.. அதே போல் அவர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களுக்கு இந்த பரிசு பொருட்களை வழங்கி உள்ளோம்.
இந்த நடிகர் சங்க நிலத்தில் அமர்ந்து இதை போன்ற ஒரு நிகழ்ச்சியை பார்க்க வேண்டும் என்பது அவர்களது நீண்ட நாள் ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றத்தான் நாங்கள் இதை செய்துள்ளோம். துணை நடிகர்கள், நாடக நடிகர்கள் என்று எந்தவித பிரிவும் இல்லாமால் எல்லோரும் ஒரே குடும்பமாக இங்கு திரண்டுள்ளது நல்ல விஷயம்.
இங்கே அனைவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கும்போதே மனதுக்கு திருப்தியாகவுள்ளது. இதெல்லாம் அவர்களுக்கு மறக்க இயலாத நினைவுகளாக நிலைத்திருக்கும் என்பது உறுதி.
இதற்கு அடுத்தபடியாக அவர்கள் அனைவரும் ஆசைப்பட்டதுபோல் இங்கே நடிகர் சங்க கட்டிடம் வரும், கட்டிடம் வந்ததும் இங்கே நிறைய நிகழ்ச்சிகள் நடக்கும்…” என்றார்.