full screen background image

வெறும் 2500 ரூபாய் செலவில் சினிமாவிற்கு இசையமைப்பு..!

வெறும் 2500 ரூபாய் செலவில் சினிமாவிற்கு இசையமைப்பு..!

‘ஆம்பள’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் பேசியதில் இருந்து சில பகுதிகள் :

”முதலில் தலைப்பு பற்றி எனக்குள் ஒரு பயம் வந்தது. இந்தப் படம் ஆரம்பிக்கும்போது எனக்கு இன்னொரு பயம் இருந்தது. ஏற்கெனவே சுந்தர் சி-யுடன் இயக்கத்தில் நடித்த ‘மத கஜ ராஜா’ படம் இன்னமும் வெளிவரவில்லை. சினிமாவில் செண்டிமெண்ட் அதிகம். அதனால் பலரும் கேட்டார்கள். ‘ஏற்கெனவே இப்படி இருக்கும்போது மறுபடியும் சுந்தர் சி-யுடனா படம் பண்ணப்போறே..?’ என்று பல பேர் கேட்டார்கள். இருந்தாலும் நான் தெளிவான முடிவோடு இருந்தேன்.

இந்த ‘ஆம்பள’ படத்தின் ஒன் லைன் எனக்கு முன்பே சொல்லப்பட்டதுதான். சுந்தர்.சி-க்கும் எனக்குமான நல்லுறவு நன்றாக இருக்கிறது. அது ஒரு சொத்து போன்றது.

செப்டம்பர் 20-ல் தொடங்கிய ஷூட்டிங் டிசம்பர் 26-ல் முடிந்துவிட்டது. மூன்றே மாதத்தில் முழுப் படத்தையும் முடித்தோம். எல்லாரையும் விரட்டி விரட்டி வேலை வாங்கினோம். பலரும் எனக்காக கஷ்டப்பட்டு உழைத்தார்கள். நெருக்கடியில் பதற்றத்துடன், டென்ஷனுடன் உழைத்திருக்கிறார்கள்.

எல்லாரையும் இப்படி சிரமப்படுத்தி கஷ்டப்படுத்துவது இதுவே கடைசியாக இருக்கட்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். இனியும் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு இப்படிச் செய்வது நல்லதல்ல.

ஆனாலும் சுந்தர்.சி சார் சீக்கிரம் முடித்தாலும் தரமாகவும் முடித்திருக்கிறார். இந்தப் படம் முடிந்த பின்புதான் அவர் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் பயணம் சென்றார்.

இந்தப் படமே ஜாலியான ஹாலிடே அனுபவமாக இருந்தது. டைரக்டர் அந்த அளவுக்கு டென்ஷன் இல்லாமல் எடுத்தார்.

இந்தப் படத்துக்கு இசையமைக்க மெட்டுப்போட 2500 ரூபாய்தான் செலவானது. ராஜாஅண்ணாமலைபுரத்தில் தங்கி இதை ஹிப் ஹாப் தமிழா மெட்டு போட்டுக் கொடுத்தார். பாங்காக், ஸ்பெயின் எல்லாம் போகவில்லை. பஜ்ஜி, டீ செலவுதான் பெரிய செலவு. இதை வெளியிடும் வி மியூசிக்கில் இதன் 6 பாடல்களும் பெரிய அளவில் வெற்றி பெறும்.

முதன்முதலில் ஹன்சிகா என்னுடன் நடித்து இருக்கிறார். ஹன்சிகா ஜோடி என்றதுமே எனக்குப் பயம். அவர் நல்ல வெள்ளை. நான் அட்ட கருப்பு. கேமராமேனுக்கு கஷ்டம் என்று நினைத்தேன். ‘நீ லண்டன் லட்டு, நான் மதுரை புட்டு’ என்று இந்தப் படத்தில் பாட்டே வரும். இருந்தாலும் அவர் சமாளித்து எடுத்தார்.

சினிமா என் தாய் மாதிரி. அதற்கு யார் கெடுதல் செய்தாலும் விடமாட்டேன். திருட்டு விசிடிக்காக தொடர்ந்து போராடுவேன்…” என்றார் விஷால்.

Our Score