“நிஜமான ஆம்பள விஷால்தான்..” – புகழாரம் சூட்டிய சினிமா வி.ஐ.பி.க்கள்..!

“நிஜமான ஆம்பள விஷால்தான்..” – புகழாரம் சூட்டிய சினிமா வி.ஐ.பி.க்கள்..!

திருட்டு விசிடிக்காக தெருவில் இறங்கி, போலீஸ் ஸ்டேஷன்வரைக்கும்போய் பஞ்சாயத்து செய்து தான் நிஜத்திலும் ஹீரோதான் என்பதை நிரூபித்த விஷாலுக்கு நேற்று சத்யம் திரையரங்கில் நடைபெற்ற ‘ஆம்பள’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் வந்திருந்த வி.ஐ.பி.க்கள் அனைவரும் புகழ் மாலை சூட்டிவிட்டார்கள்.

தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது, “ஆம்பள’ தலைப்பு யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ நிச்சயம் விஷாலுக்குப் பொருந்தும். திருட்டு விசிடிக்காக தெருவில் இறங்கி தட்டிக் கேட்ட முதல் ஆம்பள அவர். வழக்கமா தயாரிப்பாளர்களே படம் எடுக்க பயப்படும் காலம் இது. ஆனால் பட்ஜெட் பற்றிக் கவலைப்படாமல் துணிச்சலாகப் படம் எடுக்கும்போது தயாரிப்பாளர்களில் விஷால் ஆம்பள. தன்னுடைய மனதில்பட்ட கருத்துக்ளை பயப்படாமல் சொல்வதிலும் இவர் ஆம்பள..” என்றார்.

தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் பேசும்போது, “மீசை வச்சவன் எல்லாம் ஆம்பள இல்லை. நீங்கள் மீசை வைக்கவில்லை என்றாலும் .சொன்ன தேதியில் படத்தை அறிவித்து வெளியிடும் நீங்கள் ஆம்பளதான். சுந்தர்.சி இன்னொரு ஆம்பள. இருவருக்கும் வாழ்த்துக்கள்..” என்றார். .

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, “திருட்டு விசிடிக்காக ரோட்டில் இறங்கிப் போராடி அடித்த விஷால் முதல் ஆம்பள. திருட்டு விசிடியை எதிர்க்கும் உணர்வை தந்திருக்கும் விஷால் நிஜ ஆம்பள.. “என்றார்.

இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும்போது, “நாங்கள் முன்பெல்லாம் பூஜையன்றே ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டுத்தான் படத்தைத் துவக்குவோம். பல ஆண்டுகளுக்குப் பின் இன்று அந்த வேலையை விஷால் செய்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்…” என்றார்.

ஆர்யா பேசும் போது, “விஷாலிடம் ‘என்ன மச்சான் படம் எப்போ ரிலீஸ்..?’ என்றேன். ‘பொங்கலுக்கு’ன்னு சொன்னான். ‘பொங்கலுக்கு என்றால் பெரிய படங்கள் வருமேப்பா..’ என்றேன். ‘எவனா இருந்தாலும் வெட்டுவேன்’ன்னு சொன்னான். விஷாலின் அந்த நம்பிக்கை எனக்குப் பிடித்தது…” என்றார்.

மன்சூர்அலிகான் பேசும்போது, “தயாரிப்பாளர் சங்கத் தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்தால் திருட்டு விசிடியை ஒரே நாளில் ஒழித்துக் காட்டுகிறேன். ஜெயிலுக்குப் போகிறவர்கள் என் பின்னால் வாருங்கள்.. ” என்றவர், விஷாலுக்கு ‘ஆக்சன் ஸ்டார்’ என்ற பட்டத்தையும் வழங்கினார்.

தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டி பேசும்போது, ”என் மகன் விஷால் கடுமையாக உழைக்கும் பையன்.. அவனை வேறு மாதிரி நடிகராக்க விரும்பினேன். ஆனால் ‘அவன் இவன்’ படத்துக்கு பிறகு அவன் விருப்பத்துக்கு விட்டுவிட்டேன். அதற்குப் பின் அவன் விஷயத்தில் தலையிடவில்லை..” என்றார்.

‘ஆம்பள’ படத்தை இயக்கியுள்ள சுந்தர்.சி பேசும்போது. “இது ஒரு பேமிலி எண்டர்டெய்னர். படமே திருவிழா போன்ற உணர்வை தரும். நான் வேகமாக ஓடுபவன். என்னையே விரட்டி விரட்டி வேலை வாங்கியவர் விஷால்…” என்றார்.

Our Score