full screen background image

“ராதாரவியை சும்மா விடமாட்டேன்..” – நடிகர் விஷாலின் கோபக்குரல்..!

“ராதாரவியை சும்மா விடமாட்டேன்..” – நடிகர் விஷாலின் கோபக்குரல்..!

திரையில்தான் வில்லன்களும், ஹீரோக்களும் சவால்விட்டு மோதிக் கொள்வார்கள் என்று பார்த்தால், இப்போது நிஜமாகவே தெருவில் மேடை போட்டு  திட்டித் தீர்த்துள்ளார்கள்.

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான ராதாரவியும், துணைத் தலைவர் காளையும் திருச்சியில் நடைபெற்ற நாடக நடிகர்களுக்கான உதவியளிப்பு விழாவில் பேசிய பேச்சுக்கள், நடிகர் சங்கத்தின் இளைய தலைமுறை நடிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

சமீப காலமாகவே நடிகர் சங்கத்தின் கட்டட விவகாரத்தில் விஷால் தலைமையிலான சில நடிகர்களுக்கும், சங்கத்தின் தலைமையில் இருக்கும் பெரிய நடிகர்களுக்கும் இடையில் கடும் மனக்கசப்பு. சென்ற முறை நடந்த பொதுக்குழுவிலும் இது எதிரொலித்தது..

இதன் எதிரொலியாக சென்ற வாரம் திருச்சியில் நடந்த கூட்டத்தில் பேசிய ராதாரவி, “நான் நிறைய கெட்ட வார்த்தை பேசுவேன். எது எல்லாருக்கும் தெரியும். ஒரு தடவை நாசரை பார்த்து ‘போடா என் மசுரு’ன்னு சொன்னேன். நடிகர்களெல்லாம் பிளாக்ல எவ்வளவு வாங்குறாங்க.. ஒயிட்ல எவ்வளவு வாங்குறாங்கன்னு எனக்குத் தெரியும். பொன்வண்ணன்கிட்ட ‘உன் வொய்ப் நடிக்கிறா.. நீயும் சம்பாதிக்கிற.. உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?’ன்னு சொன்னேன்..” என்று பேசியிருக்கிறார்.

மேலும் சங்கத்தின் துணைத் தலைவரான காளை பேசும்போது, “அடுத்தாண்டு ஜூலையில் சங்கத் தேர்தல் நடைபெற இருக்கிறது. உங்களிடம் ஓட்டுக் கேட்டு வரும் சில நாய்களை நீங்கள் அடித்து விரட்டவேண்டும். இந்த நடிகர் சங்கத்தில் இரண்டே ஜாதிதான். ஒன்று நாடக ஜாதி. இன்னொன்று சினிமா ஜாதி. இப்போ சங்கத்துல நடக்குற கதையெல்லாம், ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டின கதையா இருக்கு..” என்று பேசியிருக்கிறார்.

ராதாரவி தன் பேச்சில் இது மட்டுமன்றி மேலும் பலரையும் கிண்டல் செய்யும்விதமாகவே பேசியிருக்கிறாராம்.

சிவாஜியை பற்றிச் சொல்லும்போது, “உலகம் உருண்டைன்றதே அவருக்கு ரொம்ப லேட்டாத்தான் தெரியும்..” என்று கிண்டலடித்திருக்கிறார். ரஜினியை பற்றிக் குறிப்பிடுகையில், “இப்போகூட ரஜனி படத்துல நடிச்சுக்கிட்டிருக்கேன். ரஜினிகிட்ட பேசும்போது ’16 வருஷம் கழிச்சு இப்பத்தான் உங்ககூட நடிக்கிறேன்’னு சொன்னேன். ‘ஏன் நீங்க அப்பவே சொல்லலை?’ என்று கேட்டார் ரஜினி. ‘உங்ககூட நடிக்கணும்னா, எங்கப்பா என்னை பெத்துப் போட்டாரு?’ன்னு கேட்டேன். அதுக்கு ரஜினி, ‘உங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?’ன்னு கேட்டுட்டு போயிட்டாரு.

விஜயகாந்த் பற்றி குறிப்பிடுகையில், “அலெக்ஸ் உங்க ஊர்க்காரர்ன்னு சொல்லித்தான் அவன்கூட திரியறியா’?ன்னு விஜி ஒரு தடவை கேட்டாரு. ‘உங்க ஊர்ல யாரு அறிவாளியா இருக்கான்னு சொல்லுங்க.. கூட சேர்ந்துக்குறேன்..’னு சொன்னேன்..” என்று பேசியிருக்கிறார்.

இப்படி தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் செயலாளரும், துணைத் தலைவரும் பொது மேடையில் பேசியது இளைய தலைமுறை நடிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

இது பற்றி ‘குமுதம் ரிப்போர்ட்டரு’க்கு பேட்டியளித்துள்ள விஷால் “ராதாரவியையும், காளையையும் சங்கத்தைவிட்டு நீக்க வேண்டும்..” என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார்.

விஷால் தன் பேட்டியில், “என்னோட நோக்கம் அணி திரட்டுவதோ, தேர்தலில் அவர்களுக்கெதிராகப் போட்டியிடுவதோ அல்ல. இளைய தலைமுறை திரண்டதே சங்கத்துக்கு புது கட்டடம் கட்டும் நோக்கத்தில்தான்.. இதை செயற்குழுவில் நாங்கள் தெளிவுபடுத்தியபோது அனைவருமே கைதட்டி வரவேற்றார்கள்.

மேலும், நாடக நடிகர்களை ஒன்றுபடுத்த வேண்டும். அவர்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். முக்கியமாக நலிந்த கலைஞர்கள் என்று யாருமே இருக்கக் கூடாது. அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

இதைச் சீர்குலைக்கத்தான் ‘உதவிகள் வழங்குகிறேன்’ என்ற பெயரில் நாடகக் கலைஞர்கள் சிலர் முன்னிலையில் இப்படி அவதூறு பேசியிருக்கிறார் ராதாரவி. சங்கத்தின் துணைத் தலைவரான காளையும் எங்களை ‘நாய்கள்’ என்று பேசியிருக்கிறார்.

நான் ஏதாவது தவறு செய்திருந்தால் பொறுத்துப் போகலாம். இனி எதற்காக பொறுத்துப் போக வேண்டும்..? இனி வேறு மாதிரியான முடிவுகள்தான் எடுக்கப் போறோம்.  அவரையும், காளையையும் சங்கத்திலிருந்து நீக்க வேண்டும் என்று புகார் செய்யப் போகிறேன்.  குமரிமுத்து சங்கத்தை விமர்சித்து பேசினார் என்பதற்காக அவரை சங்கத்தைவிட்டே நீக்கினார்கள். அதேபோல் எங்களை இத்தனை அநாகரிகமாகப் பேசிய ராதாரவியையும், காளையையும் சங்கத்தைவிட்டு நீக்க வேண்டும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை போராடுவேன். அவர்களை இனி சும்மாவிட மாட்டேன்.

நான் ஒரு முடிவெடுத்துவிட்டேன். வரும் சங்கத் தேர்தலில் நிச்சயமாக நானும் போட்டியிடுவேன். எந்தப் பதவிக்கு என்று இப்போதைக்கு சொல்ல முடியாது. நான் மட்டுமல்ல என்னுடன் இருக்கும் இளம் ஹீரோக்களும் தேர்தலில் நிற்பார்கள். இனிமேலும் என்னால் பொறுக்க முடியாது. என்னை வேண்டுமென்றே சீண்டியிருக்கிறார்கள். என் ஆட்டத்தை இனிமேல் பாருங்கள்.

இது தொடர்பாக நாசரிடம் சரத்குமாரை தொடர்பு கொண்டு பேசச் சொல்லியிருக்கிறோம். சங்க ரீதியாக மட்டுமல்ல.. சட்ட ரீதியாகவும் இறங்கப் போகிறோம். ராதாரவி, காளைக்கு ஒரு சட்டம்.. குமரிமுத்துவுக்கு ஒரு சட்டமா என்பதை சரத்குமார் தெளிவுபடுத்த வேண்டும்..” என்று கேட்டுள்ளார் விஷால்.

இது குறித்து பேசியுள்ள நாசர், “நாங்கள் இதுவரையில் மிகவும் பொறுமையாகப் போராடினோம். காரணம் சக மனிதர்கள் மீது கொண்டிருக்கும் மனிதாபிமானமும், மரியாதையும்தான். ஆனால் எங்களை பொறுமையின் விளிம்புக்கே கொண்டு வந்து நிறுத்திவிட்டார் ராதாரவி. அவர் சொல்வது போல ஒரு விஷயம் நடக்கவே இல்லை. இது முழுக்க முழுக்க என்னை களங்கப்படுத்த முயற்சிக்கும் செயல். இதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்..” என்று சொல்லியிருக்கிறார்.

சங்கத்தின் தலைவரான சரத்குமாரிடம் இது பற்றி நாசர் புகார் தெரிவித்துள்ளாராம். இது பற்றி கமெண்ட் செய்திருக்கும் சரத்குமார், “நாசர் இது பற்றி என்னிடம் சொல்லிவிட்டார். ஆனால் இன்னும் அந்த வீடியோவை நான் பார்க்கவில்லை. வீடியோவை பார்த்த பிறகுதான் இது குறித்து நடிகர் சங்கத்தில் விவாதித்து முடிவெடுக்க முடியும்..” என்று சொல்லியிருக்கிறார்.

தென்னிந்திய நடிகர்களுக்காக முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்ட சங்கம் என்ற பெருமையுடைய அச்சங்கத்தின் பெயர், இதனால் சிறுமையடைந்துள்ளது என்பதை யார் உணரப் போகிறார்கள்..?

Our Score