மதுரை மாவட்டம் உசிலபட்டி மேலப்புதூர் ஆதிமூலத் தேவர், மஞ்சுவாணி தமபதியினருக்கு 1945-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி மூத்த மகனாக பிறந்தவர் வினு சக்கரவர்த்தி. இவருடன் பிரேமகாந்தன் என்கிற தம்பியும், குண்டலகேசி என்கிற தங்கையும் பிறந்தனர்.
சென்னை இராயப்பேட்டையில் உள்ள வெஸ்லி பள்ளியில் படித்தார். மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி, மற்றும் சென்னை பல்கலைக் கழக்கத்திலும் பட்டப் படிப்பு படித்தவர்.
ஆரம்பத்தில் ஆறு மாத காலம் காவல்துறை அதிகாரியாக ஐஸ்ஹவுஸ் பகுதியில் பணியாற்றினார். தென்னக ரயில்வேயில் நான்கு வருடங்கள் பணிபுரிந்தபோது நாடகம், இலக்கியம் என்று நாட்டம் வரவே, அதில் ஈடுபட ஆரம்பித்தார்.
‘டான்ஸ் மாஸ்டர்’, ‘வியட்நாம் வீடு’, ‘தங்கப் பதக்கம்’, ‘யாரோ இவர் யாரோ’ போன்ற மேடை நாடகங்களில் நடித்து வந்தார்.
மறைந்த கன்னட இயக்குநரும், எழுத்தாளருமான புட்டன்னா கனகலிடம் உதவியாளராக சேர்ந்த இவர், சினிமா பற்றி அவரிடம் தெரிந்து கொள்ளஆரம்பித்தார்.
1977-ல் திருப்பூர் மணி தயாரிப்பில் சிவக்குமார் நடித்த நூறாவது படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்திற்கு திரைக்கதை எழுதி, அதில் ஒரு வேடத்திலும் நடித்து நடிகராக அறிமுகமானார்.
மணிவண்ணன் இயக்கிய ‘கோபுரங்கள் சாய்வதில்லை’, பாரதிராஜா இயக்கிய ‘மண்வாசனை’ ஆகிய இரு படங்களும் இவரது சினிமா வாழ்க்கையில் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகள் பேச தெரிந்த இவர், மலையாளத்தில் 30, தெலுங்கில் 5, படுக மொழியில் ஒரு படம் என நான்கு மொழி படங்களிலும் சேர்த்து மொத்தம் 1003 படங்களில் நடித்திருக்கிறார்.
‘வண்டிச் சக்கரம்’, ‘கோயில் புறா’, ‘இமைகள்’, ‘பொண்ணுக்கேத்த புருஷன்’ போன்ற படங்களில் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இணை இயக்குநராகவும் பணியாற்றி இருக்கிறார்.
நடிகை சில்க் ஸ்மிதாவை ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் நடிக்க வைத்து தமிழ்ச் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவரும் இவரே.
ரஜினியுடன் மட்டும் 25 படங்களில் நடித்திருக்கிறார். இவர் கடைசியாக 2014-ம் ஆண்டு ‘வாயை மூடிப் பேசவும்’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்துள்ளது.
இவருக்கு கர்ணபூ என்கிற மனைவியும், சண்முகப் பிரியா என்கிற மகளும், சரவண ப்ரியன் என்கிற மகனும் உள்ளனர்.
சாலிகிராமத்தில் வசித்து வந்த இவர் கடந்த சில தினங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வடபழனி விஜயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று இரவு 7 மணிக்கு காலமானார்.
அவரது உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
நாளை மதியம் போரூர் மின் மயானத்தில் இறுதிச் சடங்கு நடைபெறும்.