சி.வி.குமாரின் தயாரிப்பில் விஷால் நடிக்கும் ‘நாளை நமதே’..!

சி.வி.குமாரின் தயாரிப்பில் விஷால் நடிக்கும் ‘நாளை நமதே’..!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் விஷால் சங்கம் தொடர்பான வேலைகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

கூடவே தன்னுடைய நடிப்பு கேரியரையும் தொடர்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறார். ஏற்கெனவே கார்த்தியுடன் இணைந்து பிரபுதேவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்போது திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான சி.வி.குமாரின் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இந்தப் படத்தை இயக்குநர் பொன்ராமின் உதவியாளரான வெங்கடேசன் இயக்குகிறார். இந்தப் படத்தில் விஷால் மூன்று வேடத்தில் நடிக்கிறாராம். அதனால் இதற்கு பொருத்தமாக எம்.ஜி.ஆர். படமான ‘நாளை நமதே’ தலைப்பை இந்தப் படத்திற்கு வைத்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவுள்ளார்கள் என்றும் அவர்களுடைய தேர்வு நடைபெற்று வருவதாகவும் தயாரிப்பாளர் சி.வி.குமார் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

தற்போது விஷால் 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', 'கறுப்பு ராஜா வெள்ளை ராஜா' ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.