ஸ்ரீவீனஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.எஸ்.பாலமுருகன் தயாரிக்கும் முதல் படம் ‘தபால்காரன்.’
இப்படத்தில் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடிக்கிறார். நிஹாரிகா நாயகியாக நடிக்கிறார்.
மேலும் ‘லொள்ளு சபா’ சாமிநாதன். பேராசிரியர் ஞானசம்பந்தன், டெல்லி கணேஷ், முனீஷ்காந்த், ‘எங்கேயும் எப்போதும்’ வினோதினி, ரேகா சுரேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு- ஜி.செல்வகுமார், இசை- நீரோ பிரபாகரன் எடிட்டிங் சங்கர். இப்படத்தை டி.உதயகுமார் இயக்குகிறார். இவர் ‘கேடயம்’, ‘அழைப்பிதழ்’ படங்கள் இயக்கிய ராஜ்மோகனிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். ‘வானம்’ படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் கிரிஷிடமும் பணியாற்றியவர்.
படம் பற்றி பேசிய இயக்குநர் டி.உதயகுமார், “இது ஒரு அஞ்சல் நிலையத்தின் பின்னணியில் உருவாகும் படம். வெளிநாடு போகிற கனவில் இருக்கும் நாயகனுக்கு அரசு வேலை கிடைக்கிறது. வேண்டா வெறுப்பாக விருப்பமில்லாமல் அந்த வேலையில் சேர்கிறான். அங்கு அவனுக்கு பல தவறுகள் தென்படுகின்றன. அதனால் பல முதியோர் பாதிக்கப்படுகின்றனர். அந்தச் சவாலை எதிர்கொண்டு எப்படி தீர்வு காண்கிறான் என்பதே கதை.
இப்படத்தில் காதல், காமெடி, செண்டிமெண்ட் என எல்லாமும் இருக்கும். இது ஒரு முழு நீள வணிகப் படம். பொழுதுபோக்கில் சமூகக் கருத்தும் சொல்லப்பட்டு இருக்கும்..” என்றார்.
இப்படத்தின் பூஜை – தொடக்க விழா இன்று காலை போரூரில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.