நேற்று இரவு நடைபெற்ற ‘ஐ’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் பேசியதிலிருந்து சில பகுதிகள் :
ஒவ்வொரு நடிகனும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கத்தான் விரும்புவார்கள். சில கதாபாத்திரங்களைக் கனவு என்பார்கள். “ஐ’ படத்தில் எனக்கு கிடைத்த கதாபாத்திரம் நான் கனவிலும் நினைத்துப் பார்க்காத கதாபாத்திரம்.
இப்படி ஒரு கதாபாத்திரம் கிடைக்கும்போது பசி, வலி, இவையெல்லாம் ஒரு விஷயமே கிடையாது. கடந்த 2 ஆண்டுகளாக உடலை வருத்தி இந்த கதாபாத்திரத்தில் நடித்தது சிரமமாகத்தான் இருந்தது. 20 கிலோவை கூட்டி… குறைச்சு ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்.. 2 வருஷமா வீட்டை விட்டு வெளில எங்கேயும் போகலை.. எந்த நிகழ்ச்சிலேயும் தலை காட்டலை.. பிரெண்ட்டுகளைகூட பார்க்கப் போகலை. என் வீட்டுல என் அம்மா, மனைவி, குடும்பத்தினர் என்னை பார்த்து பயந்துட்டாங்க.. அப்படியொடு டெடிகேஷனோட இதுல உழைச்சேன்.
எனக்கு டிரெயினிங் கொடுத்த பரத்.. ஊக்கம் கொடுத்த ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ஸார்.. அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் எல்லாரும் எனக்கு ஒத்துழைச்சாங்க.. ஷங்கர் ஸார் போன்ற இயக்குனரின் படைப்புகள்ல நடிக்கக் கிடைக்கற வாய்ப்புக்கு முன்னாடி நான் பட்ட இந்தக் கஷ்டமெல்லாம் ஒண்ணுமே இல்லை. ஷங்கரின் ஸாரின் உழைப்புதான் இந்தக் கதாபாத்திரத்தை முன்னெடுத்து வந்தது. இதைவிட என் உடலைப் பற்றி ஏன், எப்படி என்ற கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது அதைவிட கஷ்டமாக இருந்தது. இப்போ அதையெல்லாம் நினைச்சா சந்தோஷமாத்தான் இருக்கு.
இந்த விழாவுக்கு இவ்ளோ பேரு ஆர்வமா வந்து எங்களா வாழ்த்த வந்ததற்கு நன்றி.. இந்தப் படத்தை கூடிய சீக்கிரமே திரைக்குக் கொண்டு வந்திருவோம்.. இன்றுபோல் அன்றும் நீங்க பெரிய ஆதரவு தரணும்.. இங்க எங்களுக்காக வந்து வாழ்த்திய ரசிகர்களுக்கு எங்களது மிகப் பெரிய நன்றி..” என்றார் விக்ரம்.