“ஷங்கரிடம் வேலை கேட்கத்தான் வந்தேன்..” – ஹாலிவுட் நடிகர் அர்னால்டின் பேச்சு..!

“ஷங்கரிடம் வேலை கேட்கத்தான் வந்தேன்..” – ஹாலிவுட் நடிகர் அர்னால்டின் பேச்சு..!

நேற்று இரவு நடைபெற்ற 'ஐ' படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பேசியதில் இருந்து சில பகுதிகள் :

“நான் இந்த விழாவில் இறுதியாகத்தான் பேச வேண்டியிருந்தது. ஆனால் இப்போதே பேசி விடுகிறேன். எப்போதும் என் விருப்பம் எதுவோ, அதைத்தான் செய்வேன்.

இந்த விழாவில் நான் பார்த்த ‘பாடி பில்டர்’கள் அனைவரும் தங்களது உடலை நன்றாக வைத்துள்ளனர். அவர்கள் தங்கள் உடற்கட்டை நன்றாக வைத்திருக்கிறார்கள். நானும் அவர்களை போல் ஆணழகனாக இருந்து கதாநாயகனாக உயர்ந்தவன். ‘பாடி பில்டர்’களுக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்திருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதில் எனக்கு மகிழ்ச்சி. ஏனென்றால் நானும் ஒரு ‘பாடி பில்டர்’தான்.

ஷங்கர் ஓர் அற்புதமான இயக்குநர். அவரது படங்கள் அனைத்தும் உலகளவில் குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெற்று வருகின்றன. இன்று நான் வந்தது ‘ஐ’ பட விழாவில் சீப் கெஸ்ட்டாக கலந்து கொள்வதற்காக மட்டுமல்ல. டைரக்டர் ஷங்கர் உங்களிடம் நான் வேலை கேட்டு வந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். என்னை வைத்து நீங்கள் எப்போது படம் எடுக்க போகிறீர்கள்...? நான் ஷங்கர் படத்தில் நடிக்க விரும்புகிறேன். ‘கெனன் தி கிங்’ என்ற படத்தை என்னை வைத்து எடுக்க தயாரா…? (‘Canon The Barbarian’ என்ற படம்தான்  ஹாலிவுட் படம்தான் அர்னால்டை ஹாலிவுட்டில் பெரிய ஸ்டாராகவும், உலகமறிந்த நடிகராகவும் உருவாக்கிய படம்).

சென்னை ஒரு அற்புதமான இடம். இதற்கு முன் இந்தியாவுக்கு பல முறை வந்திருந்தாலும் இப்போது முதல்முறையாக சென்னைக்கு வந்திருக்கிறேன். சென்னை மக்களின் பாசம், இந்த நகரத்தின் அழகு, ரசிகர்களின் அன்பு என்னை நெகிழ வைக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் மீண்டும் வருவேன்…” என்றார் அர்னால்டு.