ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரியை விஜய் செலுத்திவிட்டாராம்

ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரியை விஜய் செலுத்திவிட்டாராம்

நடிகர் விஜய் தன்னுடைய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை கட்டிவிட்டதாக வணிக வரித்துறை தெரிவித்துள்ளதாம்.

நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ்’ காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதுடன் விஜய்க்கு 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில், “அபராத தொகையை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும்” என்றும், “வரி என்பது நன்கொடை அல்ல; கட்டாய பங்களிப்பு. நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல், ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும்…” என்றும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விஜய்க்கு அறிவுரை கூறியிருந்தார். 

நீதிபதியின் இந்த விமர்சனம் மற்றும் தீர்ப்பு குறித்து அதிருப்தி அடைந்த நடிகர் விஜய், சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதி மன்றம் கடந்த ஜூலை 27-ம் தேதி, விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூலிக்க இடைக்கால தடை விதித்தது.

அப்போது, “தனி நீதிபதியின் கருத்துகளை நீக்குவது பற்றி நான்கு வாரங்களுக்குப் பின்னர் விசாரணை நடத்தப்படும். தற்போது மனுதாரர் விஜய் காருக்கு செலுத்த வேண்டிய மீதமுள்ள 80 சதவிகித வரியை, வணிக வரித்துறை ஒரு வாரத்தில் கணக்கிட்டுச் சொல்ல வேண்டும். அடுத்த ஒரு வாரத்தில் மனுதாரர் அதனை முறைப்படி அரசுக்குச் செலுத்த வேண்டும்” எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதையடுத்து விஜய் தன் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியாக, பாக்கியிருந்த தொகையான 40 லட்சம் ரூபாயில் பாக்கியிருந்த 32 லட்சம் ரூபாயை நேற்றைக்கு கட்டிவிட்டதாக வணிக வரித்துறை தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Our Score