full screen background image

‘நண்பேன்டா’ படத்திற்கு வரிவிலக்கு இல்லை – வழக்கு தொடர்ந்தார் உதயநிதி ஸ்டாலின்..!

‘நண்பேன்டா’ படத்திற்கு வரிவிலக்கு இல்லை – வழக்கு தொடர்ந்தார் உதயநிதி ஸ்டாலின்..!

‘நண்பேன்டா’ படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கு, நோட்டீசு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், தனது ரெட் ஜெயிண்ட் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனத்தின் மூலம் ‘நண்பேன்டா’ என்ற படத்தை தயாரித்து, அதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் நேற்று வெளியானது.

இந்த படத்துக்கு கேளிக்கை வரி சலுகை கேட்டு, தமிழக அரசிடம் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் விண்ணப்பம் செய்தது. ஆனால், கேளிக்கை வரி விலக்கு அளிக்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் சார்பில் உதயநிதி ஸ்டாலின் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், “தமிழில் தலைப்பு வைத்துள்ள, தமிழ் கலாசாரத்தை வளர்க்கும்விதமாக தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படங்களுக்கு தமிழக அரசு கேளிக்கை வரி விலக்கு அளிக்கிறது.

எங்களது நிறுவனம் தயாரித்திருக்கும் ‘நண்பேன்டா’ படத்துக்கு வரிவிலக்கு கேட்டு கடந்த மார்ச் 20-ம் தேதி விண்ணப்பம் செய்தோம். இதையடுத்து எங்களது படத்தை பார்த்த நிபுணர் குழு, ‘நண்பேன்டா’ படத்தில் ஆபாசம், வன்முறை காட்சிகள் இருப்பதாகவும், ஆங்கில சொற்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி வரி விலக்கு அளிக்க மறுத்து விட்டது.

ஆனால் இந்த படத்துக்கு சென்சார் போர்டு அனைத்து தரப்பினரும் பார்க்க கூடிய படம் என்ற முறையில் யுனிவர்சல் சான்றிதழ் (யு) வழங்கியுள்ளது. இதனை கருத்தில் கொள்ள அந்த நிபுணர் குழு தவறிவிட்டது.

எனவே, ‘நண்பேன்டா’ படத்தைப் பார்க்க வக்கீல் கமிஷனர் ஒருவரை இந்த நீதிமன்றம் நியமித்து, அவரது அறிக்கையைப் பெற்று இந்த படம் கேளிக்கை வரி விலக்கு பெற தகுதியுள்ளதா என்பதை முடிவு செய்ய வேண்டும். தமிழக அரசு உள்நோக்கத்துடன், இந்த வரிச் சலுகையை வழங்க மறுக்கிறது. எனவே, வரிச்சலுகை வழங்க மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். வரிச் சலுகை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்..” என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான உதயநிதி ஸ்டாலின் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, “நண்பேன்டா’ படத்தில் ஆபாசம், வன்முறை எதுவும் இல்லை. பேச்சுவழக்கில் உள்ள ஆங்கில வார்த்தைகளை மட்டுமே இந்த படத்தில் பயன்படுத்தியுள்ளனர்.

‘3’ என்ற படத்தில் ஆங்கிலம் வார்த்தை கொண்ட பாடல் இருந்தது. ‘மான் கராத்தே’ படத்திலும் ‘ஓப்பன் தி டாஸ்மாக்’ என்ற ஆங்கில கலப்பு கொண்ட பாடல்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், அந்த படங்களுக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்திருக்கும்போது, ‘நண்பேன்டா’ படத்துக்கு அந்த சலுகை வழங்காதது உள்நோக்கம் கொண்டது…” என்று வாதிட்டார்.

இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி எஸ்.வைத்தியநாதன் உத்தரவிட்டார், மேலும், ‘நண்பேன்டா படத்துக்கு வசூலிக்கப்படும் கேளிக்கை வரியானது, இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது..’ என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் ஏப்ரல் 7-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். 

Our Score