“நயன்தாரா முன்பைவிட இப்போது கூடுதலான அழகுடன் இருக்கிறார்..” என்கிறார் நடிகர் சூர்யா.
ஏ.ஜெகதீஷ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடிக்கும் படம் ‘நண்பேன்டா’. இந்த படத்தை ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.
‘நண்பேன்டா’ படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கத்தில் சமீபத்தில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், நடிகர்கள் சூர்யா, எஸ்.ஜே.சூர்யா, ஆர்யா, இயக்குனர் ராஜேஷ், பாடலாசிரியர் பா.விஜய், இயக்குனர்கள் விஜய், திருக்குமரன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியம், பாடலாசிரியர் மதன் கார்க்கி உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர்.
‘நண்பேன்டா’ படத்தின் திரை முன்னோட்டத்தை இயக்குநர் ராஜேஷ் வெளியிட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் பெற்றுக் கொண்டார். அதேபோல், ‘நண்பேன்டா’ படத்தின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடை நடிகர் சூர்யா வெளியிட நடிகர் ஆர்யா பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் நடிகர் சூர்யா பேசும்போது, “உதயநிதி ஸ்டாலின்தான் என்னுடைய ‘பாஸ்’. ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், நான் நடித்த இரண்டு படங்களுக்கு முதலாளி அவர்தான். ஆகையால் நான் அவரை எப்போதும் ‘பாஸ்’ என்றுதான் கூப்பிடுவேன்.
படத்தில் நயன்தாரா மிகவும் அழகாக இருக்கிறார். முன்பு இருந்ததைவிடவும் தற்போது நல்ல மெருகூட்டிய அழகுடன் காட்சியளிக்கிறார்.
பிரபலங்களின் வாரிசாக இருந்தாலும் கடுமையான உழைப்பு, முயற்சி மற்றும் திறமை ஆகியவை இருந்தால் மட்டுமே ரசிகர்களின் அன்பு நமக்கு கிடைக்கும்.
சந்தானம் மற்றும் உதயநிதி கூட்டணி பற்றி சொல்லவே வேண்டியதில்லை. இரண்டு பேருமே சரியான மிகவும் கலகலப்பான கூட்டணியை தருபவர்கள். இந்த முறையும் ஒரு சூப்பர்ஹிட் வெற்றியை இந்தப் படம் மூலம் தருவார்கள் என்றே நம்புகிறேன்..” என்றார் சூர்யா.









