‘கத்தி’ படத்தின் கதை திருடப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், “இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய் உள்பட 5 பேர் அடுத்த மாதம் 23-ம் தேதி நேரில் தஞ்சை கோர்ட்டில் ஆஜராக வேண்டும்..” என்று தஞ்சை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படத்தை எதிர்த்து தஞ்சையை அடுத்த இளங்காடு கிராமம் கீழத்தெருவை சேர்ந்த அன்பு.ராஜசேகர்(வயது32) என்பவர் தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கத்தி படத்திற்கெதிராக 2 மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுக்களில், “திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘கத்தி’ திரைப்படம், நான் இயக்கிய ‘தாகபூமி’ என்ற குறும்படத்தின் கதையாகும். எனவே ‘கத்தி’ திரைப்படத்தை வேறு எந்த மொழியிலும் மொழியாக்கம் செய்ய தடை விதிக்க வேண்டும். தொலைக்காட்சியில் ‘கத்தி’ திரைப்படத்தை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். கதையை திருடியதற்காக உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்..” என்று கூறியிருந்தார்.
இந்த மனுக்களை நீதிபதி முகமதுஅலி விசாரணை செய்து, ‘கத்தி’ திரைப்படத்தை வேறு எந்த மொழியிலும் மொழியாக்கம் செய்ய தடை கோரும் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் ஜனவரி 7-ம் தேதிக்கு ஒத்தி வைத்து.
அன்றைய தினம் ‘கத்தி’ திரைப்பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், தயாரிப்பாளர்களான சென்னை தி.நகரை சேர்ந்த கருணாகரன், சுபாஸ்கரன் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் நஷ்டஈடு வழங்கக் கோரும் மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 23-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி முகமதுஅலி அன்றைய தினம் ‘கத்தி’ திரைப்பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் விஜய், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஆகிய 5 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.