full screen background image

“பாகுபலி’ படம் ஹாலிவுட் படங்களுக்கு ஒரு சவால்..” – நடிகர் சூர்யாவின் பாராட்டு..!

“பாகுபலி’ படம் ஹாலிவுட் படங்களுக்கு ஒரு சவால்..” – நடிகர் சூர்யாவின் பாராட்டு..!

நேற்று முன்தினம் நடைபெற்ற ‘பாகுபலி’ திரைப்படத்தின் டிரெயிலரை வெளியிட்டு படக் குழுவினரை வாழ்த்தி பேசினார் நடிகர் சூர்யா.

அவருடைய பேச்சில் இருந்து சில பகுதிகள் :

Bahubali Tamil Trailer Launch Pics (19)

“ராஜமவுலி திறமையான இயக்குநர். அவர் இயக்கியிருக்கும் இந்த ‘பாகுபலி’ படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது அந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதையே பெருமையாக நினைக்கிறேன்.

கலைக்கு மொழி கிடையாது. தமிழ் படம், தெலுங்கு படம், இந்தி படம் என சினிமாவை பிரித்து பார்க்க்க்கூடாது. எல்லாமே இந்திய படங்கள்தான். இந்திய சினிமாவை மகிமைப்படுத்தும்விதமாக காட்ட நம்மால் மட்டும்தான் முடியும். தற்போது நமது இந்திய படங்கள் ஹாலிவுட் தரத்தில் தயாராகின்றன. அதற்கு சாட்சிதான் இந்த ‘பாகுபலி.’

முன்பெல்லாம் ஹாலிவுட்காரர்கள் இந்திய படங்களை சாதாரணமாக பார்ப்பார்கள். இனி அப்படி அவர்கள் பார்க்க முடியாது. ஹாலிவுட் படங்களைகூட ‘பாகுபலி’ படம் போல் உள்ளது என்று ஒப்பிடும் அளவுக்கு நாம் உயர்ந்துள்ளோம்.  TROY, BENHUR போன்ற ஹாலிவுட் படங்களுக்கு நமது பதில்தான் இந்த ‘பாகுபலி’.

அவர்களது திரைப்படங்களில் ஒரே உணர்வை வைத்துதான் தயாரித்திருப்பார்கள். ஆனால், நமது படங்களில் பல உணர்வுகள் இருக்கும். ‘பொன்னியின் செல்வன்’, ‘மகாபாரதம்’, ‘ராமாயணம்’ ஆகியவற்றில் உள்ள உணர்வுகள் எவ்வளவுக்கு எவ்வளவு இப்படத்தில் வைக்கலாம் என்று பார்த்து, பார்த்துதான் இப்படத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தப்  படம் பட்ஜெட் விஷயத்தில் மட்டும் பெரிய படம் கிடையாது. உழைப்பிலும் பெரிய படம்தான். இந்திய சினிமாவே பெருமைகொள்ளும்விதமாக இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். வரும் காலத்தில் இந்தியா எவ்வளவு பணக்கார நாடாக இருந்தது என்பதை இப்படத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்பதுபோல ஒவ்வொரு சிறப்பான தொழில் நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்.

ஒரு படத்தில் நடிகர்கள் இரண்டரை வருடம் இப்படி தொடர்ந்து நடிக்க முடியுமா என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. பிரபாஸ், ராணாவிடம்கூட உங்களுக்கு கொஞ்சம்கூட சலிப்பே வரவில்லையா என்றுகூட கேட்டேன்.  படம் இவ்வளவு சிறப்பாக இருக்கும்போது எப்படி சலிப்பு வரும்..? இப்படத்தில் ஒவ்வொரு கேரக்டர்களில் நடித்தவர்களும் தன்னுடைய கேரக்டர்தான் பெஸ்ட் என்று சொல்கிறார்கள்.

ஒரு நாள் இந்த படத்தோட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய் இருந்தேன். ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு அனைவரும் என்னிடம் பேச வந்துவிட்டார்கள். திரும்பிப் பார்த்தால் அவ்வளவு பேர்.. அவ்வளவு வேலைகள்.. இன்னும் கொஞ்ச நேரம் நாம் அங்க இருந்தால் நம்மால் இவங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் நஷ்டமாகும் என்று புரிந்து கொண்டு ஓடி வந்துவிட்டேன் .

ராஜமௌலி சார் இயக்கிய தெலுங்குப் படத்தைதான் தமிழில் கார்த்தியை வைத்து ‘சிறுத்தை’  என்ற பெயரில் எடுத்தோம் . அந்தப் படம் முடிந்தவுடன்  ராஜமௌலி சாருக்கு படம் பிடிக்க வேண்டுமே என்று நினைத்தேன். ஆனால் அவர் ‘சிறுத்தை’யைப் பார்த்து விட்டுப் பாராட்டியபோது சந்தோஷமாக இருந்தது. இப்போது அவர் இயக்கிய படத்தை நேரடியாக தமிழில் கொண்டு வருவதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கிறது.

எங்களிடம் நிறைய இளம் இயக்குநர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் இப்படத்தை எப்படி உருவாக்கினார்கள் என்று தெரிய வேண்டும். ராஜமெளலி ஸார் அவர்களுக்காக ஒரு நாள் வகுப்பு எடுக்க வேண்டும், அது அவர்களின் கேரியருக்கு பெரிய உதவியாக இருக்கும்.

8 கோடி பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் என்றால், அவர்களில் 40 லட்சம் பேர் திரையரங்கிற்கு வந்து படத்தைப் பார்க்கிறார்கள். கண்டிப்பாக அனைவருமே திரையரங்கிற்கு வந்து பார்க்க கூடிய படமாக ‘பாகுபலி’ இருக்கும்..” என்று பாராட்டித் தீர்த்தார்.

Our Score