full screen background image

காங்கிரஸ் கட்சி நடத்திய ‘சுதந்திர தின விழா’வில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார்

காங்கிரஸ் கட்சி நடத்திய ‘சுதந்திர தின விழா’வில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார்

தமிழ்த் திரையுலகத்தின் மூத்த நடிகரான சிவக்குமார் இன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டார்.

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழாவையொட்டி நாடு முழுவதும் இன்று சுதந்திர தின கொண்டாட்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் காங்கிரஸ் கட்சியின் தலைமையகம் அமைந்திருக்கும் சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை வழக்கம்போல தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் தங்கபாலு உட்பட பல முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் திடீரென்று கலந்து கொண்டிருக்கிறார் தமிழ்த் திரையுலகத்தின் மூத்த நடிகரான சிவக்குமார். தலையில் காந்தி குல்லா அணிந்து பக்கா காங்கிரஸ் தொண்டர்போல் காட்சியளித்தார். அப்போது அங்கேயிருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட சிவக்குமார் அவர்களுடன் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

சிவக்குமார் இந்த விழாவில் கலந்து கொண்டது ஏன் என்று தெரியவில்லை. ஏற்கெனவே நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தினர் மீது மத்திய அரசும், மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசும் கடும் கோபத்தில் இருக்கின்றன. பல்வேறு பிரச்சினைகளில் சிவக்குமாரின் மகன்களான நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் பா.ஜ.க. அரசைக் கண்டித்து பேசியிருக்கிறார்கள். அறிக்கை விட்டிருக்கிறார்கள்.

நீட் தேர்வை ரத்து செய்தே தீர வேண்டும் என்று நடிகர் சூர்யாவும், வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்று கார்த்தியும் குரல் கொடுத்திருந்தனர். கூடுதலாக சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா தஞ்சாவூரில் நடந்த ஒரு படப்பிடிப்பின்போது கோவில்களுக்கு செய்யும் செலவுத் தொகையை அரசு மருத்துவமனைகளின் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாமே என்று கோரிக்கை வைத்தார். அவரையும் இந்த ஒரு காரணத்துக்காகவே பா.ஜ.கட்சியினர் அவரைத் திட்டித் தீர்த்தார்கள்.

இந்த நிலையில் தற்போது சிவக்குமார் சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் தலையைக் காட்டியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது.

நடிகர் சிவக்குமார் தரப்பில் இது குறித்து விசாரித்தபோது, “சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதற்கு கட்சிகளின் முகவரி எதற்கு..? காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரான கே.எஸ்.அழகிரி சிவக்குமாரின் நீண்ட நாள் நண்பர். அந்த வகையில் இன்றைய கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும்படி அழைத்ததால், சிவக்குமாரும் நட்பின் அடிப்படையில் அங்கே சென்று வந்தார்.. அவ்வளவுதான்..” என்றார்கள்.

ஓகே.. இப்படியே இருக்கட்டும்..!

Our Score