full screen background image

“ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதானாரா..?”- இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு வக்கீல் நோட்டீஸ்..!

“ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதானாரா..?”- இயக்குநர் பா.ரஞ்சித்திற்கு வக்கீல் நோட்டீஸ்..!

சார்பட்டா பரம்பரை’ படத்தில் உண்மைக்குப் புறம்பான காட்சிகளை காட்டியிருப்பதாக இந்தப் படம் வெளிவந்த புதிதில் அதிமுக கட்சியினரே குற்றம் சாட்டினார்கள்.

இந்தப் படத்தின் ஒரு காட்சியில் அப்போது தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த தி.மு.க. ஆட்சி எமர்ஜென்சியை முன்னிட்டு கலைக்கப்பட்டுவிட்டதாக ஒரு வசனம் இடம் பெற்றுள்ளது. இன்னொரு இடத்தில் “தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்” என்ற வசனமும் இடம் பெற்றுள்ளது. இதைத்தான் அ.தி.மு.க. கட்சியினர் கண்டித்துள்ளனர்.

ஏனெனில், “ஸ்டாலின் சாதாரணமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை சட்டத்தின் கீழ்தான் கைது செய்யப்பட்டார். ‘மிசா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை” என்று பல வருட காலமாக அ.தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். ஆனால் கலைஞர் கருணாநிதி தான் எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’ நூலில் ‘மிசா’ சட்டத்தின் கீழ்தான் ஸ்டாலின் கைதானார்…” என்று எழுதியிருக்கிறார்.

அ.தி.மு.க.வினர் தங்களுக்கு ஆதாரமாக மிசா கொடுமைகளை விசாரிப்பதற்காக ஷா என்ற நீதிபதியின் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனைச் சுட்டிக் காட்டுகிறார்கள். மிசா காலத்தில் தமிழகத்தின் சிறைச் சாலைகளில் நடைபெற்ற அத்துமீறல்கள், சித்ரவதைகளைப் பற்றி விசாரித்த இந்தக் கமிஷன் 3 பாகங்கள் அடங்கிய 525 பக்கங்களுக்கு ஒரு அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் கைது, செய்யப்பட்டிருந்த மிசா கைதிகளின் பட்டியலில் மு.க.ஸ்டாலின் பெயரே இல்லை. இதனால்தான் “ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை” என்று அ.தி.மு.க.வினர் தொடர்ச்சியாக சொல்லி வருகின்றனர்.

ஆனால் இந்த ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் “மு.க.ஸ்டாலின் ‘மிசா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்” என்ற வசனம் இருக்கிறது. இதைத்தான் அ.தி.மு.கட்சியின் பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டியுள்ளனர். அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சரும், செய்தித் தொடர்பாளருமான ஜெயக்குமாரும் இது குறித்து கண்டனக் குரல் எழுப்பினார்.

தற்போது அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான பாபு முருகவேல் இது குறித்து ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அந்த நோட்டீஸில், “சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ஒரு வரலாற்றுப் படம் என்று கூறிவிட்டு உண்மைக்குப் புறம்பான காட்சிகளைக் கொண்டு மக்களிடம் பொய்ச் செய்தியை பரப்பியிருக்கிறீர்கள்.

இப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை இதில் பதிவு செய்திருக்கிறீர்கள். நீதிபதி ஷா கமிஷன் வெளியிட்ட ‘மிசா’ கைதிகள் பட்டியலில் மு.க.ஸ்டாலினின் பெயரே இல்லை. அப்படியிருக்கும்போது வரலாற்றை இப்படி திரித்துச் சொல்லலாமா..? இது சட்டப்படி குற்றம்.

ஆகவே, “இது தொடர்பான காட்சிகள் அனைத்தும் பொய்யானவை” என மக்களிடம் படக் குழுவினராகிய நீங்கள் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்த உண்மையை நீங்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால் உங்கள் மீது சட்டப்படி குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்..” என்று எச்சரித்துள்ளார்.

இந்த நோட்டீஸை அனுப்பியிருக்கும் பாபு முருகவேல் முதலில் தே.மு.தி.க.வில் இருந்தவர். அந்தக் கட்சியின் சார்பில் ஆரணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானவர். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளராகப் பணியாற்றியவர்.

ஓ.பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியபோது அவருக்கு ஆதரவளித்தார். இதன் காரணமாக தே.மு.தி.கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். உடனேயே பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக மாறினார். பின்பு பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இணைந்து துணை முதலமைச்சரான பின்பு இவர் அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டார்.

18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கப்பட்ட வழக்கில் அ.தி.மு.கழகத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடியவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score