நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த மகனான ராம்குமாரும், சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மூத்த மகனுமான துஷ்யந்தும் நாளை மாலை பா.ஜ.க.வில் இணையவிருக்கிறார்கள் என்பது அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் செய்தி.
இந்தச் செய்தியை உறுதிப்படுத்திய நடிகர் பிரபு, “அண்ணனும், அவர் மகனும்தான் பி.ஜே.பி.ல சேர்றாங்க. நானோ, என் மகன் விக்ரம் பிரபுவோ சேரலை. நாங்க எந்தக் கட்சியிலேயும் இல்லை. அண்ணனுக்கு மோடி மேல கடந்த இரண்டு வருடமாகவே பயங்கர பாசமா இருக்கார். அவருடைய ரசிகராவே மாறிட்டார். இப்போ கட்சில சேர்ந்து கட்சிக்காக உழைக்கப் போறேன்னு சொல்லிட்டாரு. அண்ணனுக்கு எனது வாழ்த்துகளைச் சொல்லிக்கிறேன்..” என்று சொல்லிவிட்டு ஒதுங்கிவிட்டார்.
ராம்குமாரோ, “எங்கப்பா நடிகர் திலகம் சிவாஜி கணேசனை காங்கிரஸ் கட்சில இருந்து அவமானப்படுத்தி வெளியேத்தினாங்க. அவர் கடைசில சாகும்போது காங்கிரஸ் கட்சிலேயே இல்லை. சிவாஜி ரசிகர் மன்றத்துல பல மதத்தவர்களும் பொறுப்புல இருந்திருக்காங்க. அப்பாவுக்கு ரசிகர்களா இருக்காங்க. அதுனால நான் பி.ஜே.பி.ல சேர்றதுனால அவங்களுக்கு எதுவும் பிரச்சினை வராது. இது என்னுடைய சொந்த முடிவு. மோடி குஜராத் முதலமைச்சராக இருக்கும்போதே எனக்கு அவர் மேல ரொம்ப மரியாதை உண்டு. இப்போ அது பல மடங்கு அதிகரிச்சிருக்கு. அதனால்தான் அந்தக் கட்சியில் சேர்றேன்..” என்று சொல்லியிருக்கிறார்.
நடிகர் திலகம் சிவாஜியின் ரசிகர்களை ஒன்றிணைத்து அவருடைய பெயரிலேயே சமூக நலப் பேரவையை நடத்தி வரும் சிவாஜியின் தொண்டரான சந்திரசேகர், தற்போது காங்கிரஸ் கட்சியின் கலைப் பிரிவில் செய்தித் தொடர்பாளராக இருக்கிறார்.
அவர் இன்று காங்கிரஸ் கட்சியின் கலைப் பிரிவின் சார்பில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் ராம்குமாரின் இந்த நடவடிக்கை சிவாஜியின் புகழுக்கு பங்கம் விளைவிப்பதாகக் கண்டித்திருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் திலகம் சிவாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியிருந்தாலும் கர்ம வீரர் காமராஜரின் சீடராக, பக்தராக கடைசிவரையிலும் வாழ்ந்து மறைந்தவர். அவருடைய புதல்வரான ராம்குமார், அதே பெருந்தலைவரைக் கொல்ல முயன்ற கூட்டத்தில் சேர்வது என்பது நடிகர் திலகத்தின் புகழுக்குப் பெருமை சேர்க்காது..” என்று கண்டித்திருக்கிறார்.