வரும் 12-ம் தேதியன்று வெளியாகவுள்ளதாக இருந்த ‘ஏலே’ திரைப்படத்தின் வெளியீடு தற்போது பிரச்சினையாகியிருக்கிறது.
சென்ற ஆண்டு தமிழில் வெளியாகி சிறந்தத் திரைப்படமாக பலராலும் பாராட்டப்பட்ட ‘சில்லுக்கருப்பட்டி’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹலிதா சமீமின் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் திரைப்படம்தான் ‘ஏலே.’
இத்திரைப்படத்தினை Y Not Studios நிறுவனமும் Reliance Entertainment நிறுவனமும் இணைந்து வழங்குகிறது. S.சசிகாந்த் தயாரித்துள்ள இப்படத்தை சக்கரவர்த்தி ராமச்சந்திரா இணைந்து தயாரித்துள்ளார்.
படைப்பாளிகள் தம்பதியரான புஷ்கர் & காயத்ரி இருவரும் தங்களுடைய Wall Watcher Films நிறுவனத்தின் சார்பில் முதல் படைப்பாக இப்படத்தினை கிரியேட்டிவ் புரொடக்சன் செய்துள்ளனர். படத்தில் சமுத்திரக்கனி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படம் வரும் 12-ம் தேதியன்று திரைக்கு வரவிருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வந்த சூழலில் நேற்று திடீரென்று படத்தின் வெளியீட்டு வேலைகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
விசாரித்தபோது இத்திரைப்படம் வேறொரு சிக்கலில் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
வரும் 12-ம் தேதி ‘ஏலே’ திரைப்படம் திரைக்கு வந்தாலும் வரும் 27-ம் தேதியே ஓடிடியில் வெளியாகப் போகிறதாம். இதையறிந்த திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் “இந்தப் படத்தை தியேட்டரில் வெளியிட மாட்டோம்..” என்று கூறிவிட்டார்களாம்.
சமீபத்தில் கூடிய அந்தச் சங்கத்தின் செயற்குழு “பெரிய பட்ஜெட் படங்கள் தியேட்டரில் வெளியாகி 50 நாட்கள் கழித்தும், சின்ன பட்ஜெட் படங்கள் 30 நாட்கள் கழித்தும் ஓடிடியில் வெளியாகும் என்னும் உத்தரவாதக் கடிதத்தை படத்தின் தயாரிப்பாளர்கள் அளித்தால் மட்டுமே அந்தப் படங்களைத் திரையிட முடியும்” என்பதை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது.
எனவே அதுபோல இந்த ‘ஏலே’ படத்திற்கான சான்றிதழை படத் தயாரிப்பாளரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் கேட்டபோது அவர் தயங்கியிருக்கிறார். வரும் 27-ம் தேதியே ஓடிடியில் வெளியாக அனைத்து வேலைகளும் நடந்திருப்பதால் அவரால் அந்தச் சான்றிதழைத் தர முடியவில்லை.
இதனால் படத்தின் வெளியீட்டினை தியேட்டர் உரிமையாளர்கள் உறுதி செய்ய மறுத்துவிட்டார்களாம். இன்றைக்கு பத்திரிகையாளர்களுக்கு நடத்துவதாக இருந்த சிறப்புக் காட்சிகூட இதனாலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது.
படத்தின் இயக்குநர் ஹாலிதா ஷமீம்தான் பரிதவிப்பில் உள்ளார். ‘சில்லுக்கருப்பட்டி’ போலவே இந்த ‘ஏலே’ படத்தையும் சிறப்பாக உருவாக்கியிருப்பதால் இத்திரைப்படம் தியேட்டர்களுக்கு வந்தால்தான் தனக்குப் பெருமை கிடைக்கும் என்று நினைத்து தியேட்டர் ரிலீஸுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.
‘ஏலே’ படம் வெளியாகப் போவது தியேட்டரா.. ஓடிடியா.. என்பது நாளைக்குள் தெரிய வரும்..!