நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புக்குத் தடை..!

நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புக்குத் தடை..!

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கவிருக்கும் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் படப்பிடிப்புக்கு பெப்சி அமைப்பு தடை விதித்துள்ளது.

நடிகர் சிம்பு தற்போதுதான் ‘மாநாடு’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் முடிவதற்குள்ளாக அடுத்து தான் கவுதம் மேனன் இயக்கத்தில் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற புதிய படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவித்திருந்தார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மே 5-ம் தேதியன்று துவங்குவதாக இருந்தது. ஆனால் அதற்குள்ளாக அந்தப் படத்தின் படப்பிடிப்பில் பெப்சி ஊழியர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று பெப்சி அமைப்பு, அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு கடிதம் எழுதியுள்ளதாம்.

நடிகர் சிம்பு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படத்திற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை அதன் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பனுக்கு இன்னமும் கொடுக்காததால் அந்தத் தொகையைக் கொடுத்த பின்புதான் சிம்பு அடுத்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாம்.

இதையொட்டி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பெப்சி அமைப்புக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையிலேயே சிம்புவின் இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்புக்கு பெப்சி தடை விதித்திருப்பதாகத் தெரிகிறது.

மாநாடு’ படத்தின் ரிலீஸ் சமயத்தில் மைக்கேல் ராயப்பனுக்குரிய நஷ்ட ஈட்டுத் தொகையை தான் தந்துவிடுவதாக சிம்பு ஏற்கெனவே கூறியிருந்தாராம். ஆனால் அதற்கான பேச்சு ஏதும் இப்போது இல்லாததால்தான் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர் கவுன்சிலில் மீண்டும் புகார் கொடுத்து சிம்புவின் புதிய படத்தை முடக்கியிருப்பதாக தயாரிப்பாளர் கவுன்சில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இரு தரப்பினருக்குமிடையே பேச்சு வார்த்தை இன்று நடக்கவிருப்பதாகவும் தகவல் வந்துள்ளது.

 
Our Score