பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால் அதன் தயாரிப்பாளர்தான் நன்றியறிவிப்பு கூட்டம் நடத்துவார். ‘ஜிகர்தண்டா’ எக்குத்தப்பாக வெற்றி பெற்றும், அதன் தயாரிப்பாளரும், இயக்குநரும் அமைதியாக இருக்க.. அதில் ஹீரோவாக நடித்த சித்தார்த் பத்திரிகையாளர் சந்திப்பை நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடத்தினார்.
ஏற்கெனவே ‘சரபம்’ படம் ‘கேம்’ என்ற ஜப்பானிய படத்தின் அட்டர்காப்பி என்று தெரிந்ததும், ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்கிற கோபத்தில் இருந்தது மீடியா.. இந்த ஜிகர்தண்டா படமும் ‘Rough Cut’, ‘Dirty Carnival’ ஆகிய இரு கொரிய படங்களின் பாதிப்பில்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதும் தெரிய வர வாய்ப்புக்காக காத்திருந்தார்கள்..
சித்தார்த் தன்னுடைய பேச்சில் தான் இதுவரையில் கடந்து வந்த பாதையையும், இப்போது கிடைத்திருக்கும் வெற்றியையும் பற்றிப் பேசிவிட்டு.. இனிமேல் அடுத்தடுத்து ரிலீஸாகப் போகும் தனது படங்களின் வெற்றிக்கும் மீடியாக்களே காரணமென்றும் உணர்ச்சிபூர்வமாக பேசினார்.
“கடந்த முறை ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து உங்களை சந்தித்தேன். இந்த முறை ‘ஜிகர்தண்டா’வின் வெற்றிக்காக சந்திக்கிறேன். அடுத்த மாசம் ‘காவியத் தலைவன்’ ரிலீஸாகப் போகுது.. அடுத்த சந்திப்பும் இது போல் ஒரு சந்தோஷமான சந்திப்பாக இருக்கும்…’’ என்றார்.
தொடர்ந்து கேள்வி பதில் சீஸன் தொடங்கியது. கல்யாணத்துக்கு தான் ரெடியென்றும். இந்த வருடத்தில் தன்னுடைய திருமணம் நடைபெறுமென்றும் சொன்னார் சித்தார்த். ஆனால் மணப்பெண் யாரென்பதை சொல்ல மறுத்துவிட்டார். “காதல் கல்யாணமா? அரேஞ்சுடா?” என்ற கேள்விக்கும் “இப்போவரைக்கும் அது எனக்கே தெரியாது..” என்றார்.
இதோடு விட்டிருந்தால் பரவாயில்லை.. ‘ஜிகர்தண்டா’ படத்தின் திருட்டு விசிடிகள் பிடிபட்ட கதையையும் தானே கடைகளுக்குச் சென்று சோதனை செய்து பார்த்து போலீஸில் பிடித்துக் கொடுத்ததையும் சொன்னார் சித்தார்த்.
அடுத்த கேள்வி எதிர்பார்த்ததுபோலவே வந்து விழுந்தது..!
“திருட்டு விசிடியை தேடிப் போய் பிடிக்கிறீங்க.. நீங்க நடித்த இந்த ஜிகர்தண்டா படமே கொரியப் படத்தோட காப்பிதானே?” என்று எதிர்க் கேள்வியை எழுப்ப.. “எனக்குத் தெரிஞ்சு அப்படி தெரியலை..” என்று நழுவப் பார்த்தார்.
மீண்டும் விடாப்பிடியாக அவரது அறிவை சோதிக்கும் வண்ணமாக கேள்விகள் வர.. வேறு வழியில்லாமல், “நான் ஒரு ஹீரோ ஸார்.. என்கிட்ட ஒரு இயக்குநர் வந்து இப்படியொரு கதையைச் சொல்லும்போது எனக்குப் பிடிச்சிருந்தா நடிக்கத்தான் செய்வேன். அது மாதிரி இந்தக் கதையும் பிடிச்சிருந்தது. நடிச்சேன். அந்தக் கதை காப்பியான்றது எனக்குத் தெரியாது. இதை நீங்க படத்தோட இயக்குநர் கார்த்திக்கிட்டதான் கேக்கணும்.. அவர்கிட்ட கேளுங்க.. நிச்சயமா பதில் சொல்வாரு…” என்றார் தர்மசங்கடத்துடன்.
ஏன் மறைப்பானேன்… இப்படி சங்கடப்படுவானேன்..?!