full screen background image

‘கத்தி’ பட சர்ச்சை – நடிகர் விஜய்க்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம்..!

‘கத்தி’ பட சர்ச்சை – நடிகர் விஜய்க்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டம்..!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘கத்தி’ படத்திற்கு சிக்கல்கள் கூடிக் கொண்டே செல்கின்றன.

‘கத்தி’ படத்தின் உண்மையான தயாரிப்பாளர் லைகா மொபைலின் துணை அமைப்பான லைகா புரடெக்சன்ஸ்தான் என்பதை மிகச் சமீபத்தில்தான் அவர்களே ஒப்புக் கொண்டார்கள். அதிலும் வெளிப்படையாகச் சொல்லாமல் விளம்பரத்தில் அதனை வெளியிட்டு அனைவரையும் பார்க்க வைத்தார்கள்.

இப்போது லைகா மொபைல் நிறுவனத்திற்கும், இலங்கை அரசுக்கும், ராஜபக்சே குடும்பத்தினருக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் உண்டு என்பதற்கான அடுக்கடுக்கான ஆவணங்கள் இணையத்தில் வெளியாகிவிட்டன.

இத்தனை நடந்தும் 15 கோடி ரூபாய் சம்பளத்திற்காக ஏ.ஆர்.முருகதாஸ் இந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்தப் படத்திற்காக ஈழ ஆதரவு கட்சிகளின் தலைவர்களிடம் ஆதரவு திரட்டும் வேலைகளைச் செய்து வருகிறார் முருகதாஸ். இப்போதுவரையிலும் இவருக்கு ஆதரவு கொடுத்திருப்பது சீமான் மட்டும்தான்..

திருமாளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‘கத்தி’ படத்தினை வெளியிடுவதை எதிர்ப்பதாகச் சொல்லியிருக்கிறது. முருகதாஸால் இன்னமும் வைகோவை சந்திக்க முடியவில்லை.  இந்த நேரத்தில் தமிழீழ ஆதரவு மாணவர் அமைப்புகளின் கூட்டமைப்பும் இந்தப் படத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ந.பிரதீப்குமார், செம்பியன் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது இது :

“ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து வரும் படமான ‘கத்தி’யைத் தயாரிக்கும் லைகா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு நெருக்கமாக உள்ள நிறுவனம். எனவே, இந்த நிறுவனம் தயாரிக்கும் “கத்தி’ படத்தைத் தமிழகத்தில் திரையிடக் கூடாது.

இதேபோல் “புலிப் பார்வை’ திரைப்படத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தியும், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் போரில் ஈடுபட்டதைப் போன்றும் சித்திரித்துள்ளனர். சிறுவர்களைப் போரில் ஈடுபடுத்தியதைப் போன்று தவறான பிரச்சாரத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தையும் தடைசெய்ய வேண்டும்.

இதையும் மீறி திரையரங்குகளில் இந்தப் படங்கள் வெளியிடப்பட்டால் எங்களது மாணவர் கூட்டமைப்பின் சார்பில் அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்துவோம் .

‘கத்தி’ படத்திற்கு எங்களது எதிர்ப்பை வெளிக்காட்டும்விதமாக நடிகர் விஜய் வீட்டு முன்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்..”

இவ்வாறு அந்த மாணவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

Our Score