நடிகர் விஜய்யின் நடிப்பில் முதன்முறையாக தெலுங்கு, தமிழ் என ஒரேசமயத்தில் உருவாகியுள்ள படம் ‘வாரிசு’. தற்போது வெளியாகி வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
ஏற்கனவே தமிழில் ‘தோழா’ என்கிற உணர்வுப்பூர்வமான படத்தை கொடுத்த இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இந்த முறை விஜய்க்கும் அதேபோன்று ஒரு குடும்பப் பாங்கான நெகிழ்ச்சியான படத்தை கொடுத்துள்ளார். இந்தப் படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ‘தில்’ ராஜு தயாரித்துள்ளார்.
விஜய் படங்களை பொறுத்தவரை அவருடன் அந்த படத்தில் இணைந்து நடிக்கும் அத்தனை நட்சத்திரங்களும் ரசிகர்களிடம் கவனம் பெறுவார்கள். அந்த வகையில் இந்த வாரிசு படத்தில் சரத்குமார், பிரபு, ஷாம், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், யோகிபாபு என பல முக்கிய நட்சத்திரங்கள் இதில் இணைந்து நடித்துள்ளனர்.
குறிப்பாக படத்தில் விஜய்யின் அண்ணன் கதாபாத்திரத்தில் படம் முழுவதும் அவருடன் இணைந்து பயணித்துள்ள நடிகர் ஷாம் கவனிக்க வைத்துள்ளார். இடையில் சில காலம் திரையில் தென்படாமல் இருந்த ஷாம், இந்த ‘வாரிசு’ படம் மூலமாக மீண்டும் லைம் லைட்டிற்கு வந்துள்ளார்.
‘வாரிசு’ படத்தின் வெற்றியாலும், அதற்கு கிடைத்துவரும் வரவேற்பினாலும் உற்சாகமடைந்துள்ள நடிகர் ஷாம், ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் குறித்து பல சுவாரசியமான செய்திகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.
“20 வருடங்களுக்கு முன்பு ‘குஷி’ படத்தில் விஜய்யுடன் ஒரே ஒரு காட்சியில் இணைந்து நடித்து இருந்தேன். ‘குஷி’ படத்தில் ஒரு சிறிய காட்சியில் மட்டுமே அவருடன் நடித்திருந்தாலும், அதன் பிறகு சில வருடங்கள் கழித்து நான் ‘12 பி’ படத்தில் நடித்தபோது அதை பார்த்துவிட்டு எனக்கு வாழ்த்து தெரிவித்தார். தெலுங்கில் நடித்த ‘கிக்’ படத்தில் நன்றாக நடித்திருப்பதாக அந்த சமயத்திலும் அழைத்து வாழ்த்தினார்.
அதன் பிறகு இப்போது இந்த ‘வாரிசு’ படத்தில் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும்விதமாக அவரது சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.
இந்தப் படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஸ்ரீகாந்த் என பல சீனியர்கள் நடித்திருப்பதால் இந்த வாரிசு குடும்பத்தில் நான்தான் ஜூனியர் என்றுகூட சொல்லலாம்.
‘மாஸ்டர்’, ‘பீஸ்ட்’ படங்களுக்கு பிறகு குடும்பக் கதைகளுக்கான ரசிகர்களையும் கவரும்விதமாக ஒரு படம் பண்ண வேண்டும் என விஜய் சார் நினைத்தார். அதைத் தொடர்ந்தே அவர் வம்சி பைடிப்பள்ளியை அழைத்து கதை கேட்டார். அவர் கூறிய கதை பிடித்துப் போகவே, உடனே ஒப்புக்கொண்டு விட்டார் விஜய்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பில் நிறைய விஷயங்களை விஜய் சாரிடம் இருந்து கற்றுக்கொண்டேன். படப்பிடிப்பில் உடன் நடிக்கும் எந்த நடிகர்களையும் ஈகோ இல்லாமல் பார்த்துக் கொண்டார்.
எந்த ஒருவரை பற்றியும் தவறாக ஒரு வார்த்தை பேச மாட்டார். படப்பிடிப்பின்போது அவர் போனை பயன்படுத்தவே மாட்டார். அப்படியே யாரிடமாவது பேச வேண்டும் என்றாலும் உணவு இடைவேளையில் மட்டுமே பேசுவார். அதை பார்த்துவிட்டு நானும் படப்பிடிப்பு சமயங்களில் எனது போனை தூக்கி போட்டுவிட்டேன்.
படப்பிடிப்பு சமயத்தில் எல்லோருடனும் கலகலப்பாக பேசுவார். மற்ற நேரங்களில் பெரும்பாலும் அடுத்து நடிக்கக் கூடிய காட்சிகளை பற்றியே தான் அவர் அசை போட்டுக் கொண்டிருப்பார். அதேபோல எந்த ஒரு காட்சிக்கும் ரிகர்சல் பார்க்க மாட்டார். என்னுடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில் என்னிடம் அது பற்றி சிறிதாக கலந்துரையாடுவார். அதன் பிறகு நேரடியாக டேக் போய்விடுவார் அப்போது ஒரு மேஜிக் நடத்துவார் பாருங்கள். நிச்சயம் நம்மால் பிரமிக்காமல் இருக்க முடியாது.
விஜய்யிடம் பேசும்போது, “எப்படிங்கண்ணா நாளுக்கு நாள் இளமை ஆகிக்கிட்டே போறீங்க..! இதற்காக என்ன உணவு கட்டுப்பாடு மேற்கொள்கிறீர்கள்..?” என கேட்டால், “தினசரி பூரி, பொங்கல்தான் சாப்பிடுகிறேன்.. எப்பவாவது உடற்பயிற்சி செய்வேன்…” என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.
படப்பிடிப்பு முடிவடைந்ததும் எங்களையெல்லாம் அவரது வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்து அசத்தினார். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு பிடித்தமான உணவு அயிட்டங்களை அந்த விருந்தில் சேர்த்து இன்னும் ஆச்சர்யப்படுத்தினார். அப்போது தன் வீட்டில் உள்ள பணியாளர்களை எல்லாம் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு தன் கையாலேயே அனைவருக்கும் பார்த்து பார்த்து பரிமாறினார்.
விஜய் சாரிடம் பேசும்போது “நம்ம படத்தோட துணிவும் வருதே..?” என்று சொன்னபோது “ஹை ஜாலி.. ரெண்டு படமும் வரட்டும்.. பார்ப்போம்…” என்று அதையும் பாசிட்டிவாகத்தான் அணுகினார்.
நான் அடுத்ததாக இயக்குநர் விஜய் மில்டனின் டைரக்ஷனில் நடித்து வருகிறேன். அதைத் தொடர்ந்து சோலோ ஹீரோவாக நடிக்கவுள்ள ஒரு படமும் தயாராக இருக்கிறது…” என்றார் நடிகர் ஷாம்.










