full screen background image

விஜய் சேதுபதி-ராஷி கண்ணா நடித்திருக்கும் ‘ஃபார்ஸி’ இணையத் தொடர்

விஜய் சேதுபதி-ராஷி கண்ணா நடித்திருக்கும் ‘ஃபார்ஸி’ இணையத் தொடர்

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பாலிவுட்டின் முன்னணி நட்சத்திர நடிகரான ஷாஹித் கபூருடன் இணைந்து நடித்துள்ள அமேசான் ஒரிஜினல் தொடரான ‘ஃபார்ஸி’ எனும் வலைத்தளத் தொடரின் முன்னோட்டம் இன்று வெளியாகி உள்ளது.

இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் தொடரில் ஷாஹித் கபூர் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ளது.

மேலும் இத்தொடரில் கே.கே.மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சீதா ஆர்.மேனன் மற்றும் சுமன் குமார் ஆகிய இருவரும், இயக்குநர்கள் ராஜ் & டி.கே.வுடன் இணைந்து, இந்த ‘ஃபார்ஸி’ தொடருக்கான கதையை எழுதியுள்ளனர்.

விரைவில் வெளியாகவிருக்கும் அமேசான் ஒரிஜினல் சீரிஸ் – ஃபார்ஸியின் முன்னோட்டத்தை இன்று பிரைம் வீடியோ வெளியிட்டது. இந்த தொடர், உணர்ச்சிகரமான க்ரைம் டிராமாவாக உருவாகியுள்ளது.

ஒரு கச்சிதமான மோசடியை செயல்படுத்தி அதில் பயணிக்கும் சன்னி, திடீரென தான் ஒரு இருண்ட பகுதிக்குள் நுழைகிறோம் என்பதை உணர்கிறான். அதிகம் அறியப்படாத ஒரு ‘காமன் மேன்’ உடைய வாழ்க்கையின் ஒரு கண்ணோட்டத்தை இதன் முன்னோட்டம் காட்சிப்படுத்துகிறது.

இருப்பினும் அவனால் தேசத்துக்கு விளையக்கூடிய ஆபத்துக்களை களைந்தே தீருவது என்ற குறிக்கோளுடன், வழக்கத்துக்கு மாறாக செயல்படும் அனல் தெறிக்கும் மிடுக்கான ஒரு அதிரடிப்படை அதிகாரியாக (மக்கள் செல்வன் விஜய் சேதுபதி) வலம் வருகிறார்.

இயக்குநர்கள் ராஜ் மற்றும் டி கே‌ வின் அடையாளமாகத் திகழும் நகைச்சுவை காட்சிகள் நிறைந்த ‘ஃபார்ஸி’ எட்டு அத்தியாயங்கள் கொண்ட தொடராக உருவாகி இருக்கிறது.

அடுத்தடுத்து நிகழும் விறுவிறுப்பான அதிரடிக்காட்சிகளுடன், செல்வந்தர்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பிற்கு பாடம் கற்பிக்க நினைக்கும் சமூகத்தில் பின்தங்கிய நிலையிலிருக்கும், ஒரு தெருக் கலைஞனை சுற்றி கதைப் பின்னப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ராஜ் பேசும்போது, “இத்தொடர் எங்களுக்கு கடினமான ஒன்றாக இருந்தது. கோவிட் காலத்தில் இதை நாங்கள் படமாக்கினோம். அதில் சில சிக்கல்கள் இருந்தது, அதையும் தாண்டித்தான் இதை நாங்கள் உருவாக்கினோம். நமக்குள் இருக்கும் உண்மையை அடிப்படையாக வைத்துதான் இந்த தொடர் உருவாக்கப்பட்டது. நடுத்தர வர்க்கத்து மக்களின் எண்ண ஓட்டத்தை இந்த கதை பிரதிபலிக்கும். தொடரை பார்த்துவிட்டு, உங்கள் கருத்தை கூறுங்கள்..” என்றார்.

இயக்குநர் டி.கே. பேசும்போது, ”இந்தக் கதை நீண்ட காலமாக எங்களிடம் இருந்தது. எழுத்தாளர்கள் எங்களுடன் இணைந்து, மக்களுடன் எளிதாக தொடர்புபடுத்திக் கொள்ளக் கூடிய ஒரு கதையை எழுதியுள்ளார்கள். அனைவரது கூட்டு முயற்சிதான் இந்த தொடர். உங்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இந்த தொடர் இருக்கும்…” என்றார்.

நடிகர் ஷாஹித் கபூர் பேசும்போது, ”இந்த ஆண்டை இந்த ‘ஃபார்ஸி’ எனும் வலைதளத் தொடர் மூலம் துவங்குவது மகிழ்ச்சி. இப்போது அனைவரும் ஓடிடி எனும் டிஜிட்டல் தளங்களை ஒரு முக்கிய அங்கமாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்த நேரத்தில் ‘ஃபேமிலி மேன்’ எனும் வெற்றி பெற்ற தொடரை இயக்கிய கூட்டணி என்னை அழைத்தது, எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அதனால் எந்த தயக்கமும் இல்லாமல், ஓடிடியில் இணைய நானும் தயாராகிவிட்டேன். அவர்கள் இந்த கதையை ஒரு கூட்டணியாக இணைந்து அதிக கவனத்துடன் உருவாக்கி உள்ளனர். கதாபாத்திர வடிவமைப்பு ஒவ்வொன்றும் சிறப்பான வடிவில் வந்துள்ளது.

‘மக்கள் செல்வன்’ என்ற பெயருக்கு பொருத்தமானவர்தான் விஜய் சேதுபதி. அவர் இதயபூர்வமான நடிகர், அவரிடமிருந்து நிறைய கற்று கொள்ள விருப்பப்படுகிறேன். அவர் சிறப்பான பணியை இந்த தொடருக்காக கொடுத்துள்ளார். தொடரில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் தங்களது சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். பிரைம் வீடியோ உடன் இணைந்தது மகிழ்ச்சி. நன்றி..” என்றார்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசும்போது, “குறும்படமோ, தொடரோ அனைத்துமே காட்சிகளுக்கு உயிர் கொடுப்பதுதான். ராஜ் மற்றும் டிகே என் மீது முழு நம்பிக்கை வைத்திருந்தனர். ஒரு நடிகராக எனக்கு முழு சுதந்திரமும் இந்த தொடரில் இருந்தது.

ஷாஹித் கபூருடன் நடித்தது, சிறந்த அனுபவமாக இருந்தது. ராஷி கண்ணாவுடன் நடிக்கும்போது அந்த காட்சியே ஒரு தனித்துவமான ரிதமில் இருக்கும். அவருடன் திரையை பகிர்வது எப்பொழுதும் மகிழ்ச்சிதான். இந்த தொடர் ஒரு கூட்டு முயற்சியால் உருவாகியுள்ளது. தொடரை பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்.”என்றார்.

நடிகை ராஷி கண்ணா பேசும்போது, ”வெப் சீரிஸ்ஸை உருவாக்குவதில் ஏற்கனவே வெற்றி கண்டவர்கள் ராஜ் மற்றும் டி.கே. அவர்கள் இந்த தொடரை இயக்கும்போது, இது ஒரு முழுமையான தொடராக இருந்தது.

இத்தொடரில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி. விஜய் சேதுபதி போன்ற ஒரு சிறந்த நடிகருடன், நடிப்பதே மிகச்சிறந்த அனுபவம். ஷாஹித் கபூர் இந்த தொடரில் வித்தியாசமான கதாபத்திரத்தில் காட்சியளிப்பார்.

அனைத்து பெண்களும் எளிதாக புரிந்து கொள்ளக்கூடிய கதாபாத்திரமாக எனது கதாபாத்திரம் இருக்கும். ஆண்கள் நிறைந்திருக்கும் இந்த சமூகத்தில் ஒரு பெண் அடையும் வெற்றியை இந்தத் தொடரில் நீங்கள் பார்க்கலாம். அனைவரும் ரசிக்கும்படியான ஒரு தொடராக இந்த தொடர் இருக்கும்.” என்றார்.

Our Score