full screen background image

“இவ்ளோ சீக்கிரம் நீ போயிருக்கக் கூடாது தலைவா…” – மணிவண்ணனை நினைத்து உருகும் நடிகர் சத்யராஜ்

“இவ்ளோ சீக்கிரம் நீ போயிருக்கக் கூடாது தலைவா…” – மணிவண்ணனை நினைத்து உருகும் நடிகர் சத்யராஜ்

இன்றைக்கு தமிழ்த் திரையுலகத்தில் பலருக்கும் குருவாகவும், முன்னணி இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்த மணிவண்ணன் இறந்த தினம்.

இதையொட்டி மணிவண்ணின் சீடர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இயக்குநர்-நடிகரான மணிவண்ணன் பற்றி தங்களது நினைவஞ்சலிகளை செலுத்தி வருகிறார்கள்.

மணிவண்ணனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் சத்யராஜ் மணிவண்ணனின் நினைவு தினத்தையொட்டி வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில்,

“இன்றைக்கு ஜூன் 15. என் தலைவன் மணிவண்ணனின் நினைவு நாள்ன்னு சொல்றாங்க. ஆனால், எனக்கு வருடத்தின் 365 நாளும் என் தலைவனோட நினைவு நாள்தான்.

ஏன்னா அந்த மணிவண்ணன் இல்லைன்னா இந்த சத்யராஜ் இல்லை. சத்யராஜ் பாணின்னு சொல்றாங்க பாருங்க.. அதுவே மணிவண்ணனின் பாணிதான்.

நான் மட்டுமில்ல.. தமிழ்ச் சினிமாவே இப்போதும் என் தலைவன் மணிவண்ணனை நினைச்சுக்கிட்டிருக்கு. அதற்கு உதாரணமா ‘மாஸ்டர்’ படத்துல தம்பி விஜய் ஒரு காட்சியில் ‘பெரிய அமைதிப்படை அமாவாசைன்னு நினைப்பா..?’ என்று ஒரு வசனத்தைப் பேசியிருக்கிறார்.

இதேபோல் தம்பி தனுஷ் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கியிருக்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்தில் ‘சோழர் பரம்பரையில் ஒரு லண்டன் தாதா’ன்னு வசனம் பேசியிருக்காரு.

இது மாதிரி என் தலைவன் மணிவண்ணனை இன்னமும் ஞாபகம் வைச்சிருக்கிறதுக்கு அவருடைய சார்பில் இந்த வசனங்களை பேசிய தம்பிகள் விஜய், தனுஷ், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் ஆகியோருக்கு எனது நன்றிகள்.

அந்தச் ‘சோழர் பரம்பரை’ வசனத்தைக் கேட்கும்போது ‘அமைதிப் படை’ படத்தில் நான் பேசிய ‘நாகராஜ சோழன்.. சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ.’ என்ற வசனம்தான் ஞாபகத்துக்கு வருது.

இதையெல்லாம் பார்த்தால் திரும்பவும் வில்லனா நடிக்கலாம்ன்னு ஆசை வருது. ஆனால் ‘அமைதிப்படை அமாவாசை’ மாதிரி ஒரு கேரக்டரை கிரியேட் செய்து தருவதற்கு என் நண்பன் மணிவண்ணன் மாதிரி ஒரு ஆள் வேணுமே..?

தலைவா.. இவ்வளவு சீக்கிரம் நீ போயிருக்கக் கூடாது தலைவா.. தலைவா ஹாட்ஸ் அப் யூ..” என்று உணர்ச்சி பொங்க பேசியிருக்கிறார் நடிகர் சத்யராஜ்.

 
Our Score