‘சண்டமாருதம்’ திருட்டு விசிடி விற்பனை – நடிகர் சரத்குமார் போலீஸில் புகார்..!

‘சண்டமாருதம்’ திருட்டு விசிடி விற்பனை – நடிகர் சரத்குமார் போலீஸில் புகார்..!

திரைக்கு வந்து 2 நாட்களே ஆன ‘சண்டமாருதம்’ திரைப்படத்தின் திருட்டு வி.சி.டி. தமிழ்நாடெங்கும் விற்பனை செய்யப்படுவதாக நடிகர் சரத்குமார், மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் மனு அளித்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் ஆர்.சரத்குமார் மற்றும் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு தலைமையில் துணை தலைவர்கள் பி.எல்.தேனப்பன், கதிரேசன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அமைந்துள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர். அங்கு சி.பி.சி.ஐ.டி. திருட்டு வி.சி.டி. தடுப்பு பிரிவு எஸ்.பி.ஜெயலட்சுமியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், “நடிகர் சரத்குமார் நடித்து சமீபத்தில் வெளிவந்துள்ள ‘சண்டமாருதம்,’ மற்றும் ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ ஆகிய திரைப்படங்களின் திருட்டு வி.சி.டி. வெளி வந்துள்ளதாக அறிகிறோம்.

மேலும் சில இணையதளங்களிலும் மேற்கண்ட திரைப்படங்கள் எந்தவித உரிமையும் பெறாமல் பகிரப்பட்டு வருகிறது. தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு பெரும் முதலீட்டில் தயாரித்திருக்கும் இத்திரைப்படங்கள் இப்படி திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளன.

இது போன்று திருட்டுத்தனமாக ஒளிபரப்பப்படும் வி.சி.டி.க்களாலும், இணையதளங்களாலும் எங்களது திரைப்பட தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சினிமாவை விட்டு விலகி நிற்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.

எனவே இந்த திருட்டு விசிடிகளை தயாரிப்பவர்கள், விற்பனை செய்பவர்கள், இணையத்தளங்களின் மீது தக்க நடவடிக்கை எடுத்து திரைப்பட தொழில் நசியாமல் பாதுகாக்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்..” என்று குறிப்பிடுள்ளனர்.

புகார் அளித்துவிட்டு வெளியே வந்த நடிகர் சரத்குமார் நிருபர்களிடம் பேசும்போது, “திருட்டு வி.சி.டி.யால் சினிமா உலகம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பிரச்சினையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ‘சண்டமாருதம்’ திரைப்படம் மட்டுமின்றி பல புதிய படங்களின் திருட்டு வி.சி.டி.க்களும் உடனே வெளியாகி வருவது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்…” என்றார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.தாணு நிருபர்களிடம் பேசும்போது, “தமிழகம் முழுவதும் திருட்டு வி.சி.டி. விற்பனை செய்பவர்களை கண்காணிக்க 32 மாவட்டங்களிலும் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் தலைமையில் குழுவொன்றை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் அமைத்துள்ளோம்.

சேரனின் ‘சினிமா டூ ஹோம்’ சி.டி. விற்பனை தொடர்பாக 24-ம் தேதி தயாரிப்பாளர் சங்கத்தில் ஆலோசனை நடத்த உள்ளோம். நடிகர் ரஜினிகாந்தின் ‘லிங்கா’ பட விநியோகஸ்தர்கள் பிரச்சினை தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முக்கிய முடிவு எடுக்கப்படும்…” என்றார்.

Our Score