full screen background image

‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ – சினிமா விமர்சனம்

‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ – சினிமா விமர்சனம்

மூன்று சம்பவங்கள் ஒரு புள்ளியில் வந்து நிற்கும் கதை. இது போன்ற கதைகள் பல இதற்கு முன்பு வந்திருந்தாலும் இப்போது வந்திருப்பது அவற்றில் இருந்து சற்று வித்தியாசமாக..!

எலக்ட்ரானிக்ஸ் துறையில் மிக அதீத ஆர்வமும், அறிவும் கொண்டு எதையாவது புதுசு, புதுசாக கண்டுபிடிக்க வேண்டும் என்கிற வெறியில் இருக்கும் ஒரு ஹீரோ நகுல். இந்த நகுலிடம் காலேஜ் பிராஜெக்ட் வாங்க வந்து அவனுடைய அபரிமிதமான அறிவுத்திறனை பார்த்து அவன் மேல் காதல் கொண்டு நிற்கும் ஒரு ஹீரோயின் ஐஸ்வர்யா..

எதையாவது சொல்லி கட்டிய வீட்டை கஸ்டமர் தலையில் கட்டிவிட்டு சம்பாதிக்கத் துடிக்கும் ஹீரோ தினேஷ். தனது சிறிய வயதில் தற்கொலை சம்பவத்தால் தனது குடும்பத்தையே இழந்துவிட்டதால் இப்போது அந்த மாதிரி எண்ணம் கொண்டவர்களை காப்பாற்றும் நோக்கோடு அவர்களுக்கு பகுதி நேரமாக கவுன்சிலிங் செய்து வரும் பிந்து மாதவி.. இவர்கள் இருவரும் தற்செயலாக சந்தித்து பேச துவங்கி அது வழக்கம்போல காதலில் சென்று முடிய காத்திருக்கிறார்கள்..

இன்னொரு பக்கம் டாக்ஸி டிரைவர் சதீஷ்.. நல்ல பொண்ணா.. கெட்ட பொண்ணா என்பதே தெரியாத அளவுக்கான கேரக்டர் ஸ்கெட்ச்சில் இருக்கும் ஒரு பெண்ணை நம்பி தன் வாழ்க்கையைத் தொலைக்க காத்திருக்கிறார்.

நாடெங்கும் குண்டு வெடிக்கச் செய்யும் கும்பலின் அஸைன்மெண்ட்படி சதீஷின் டாக்ஸியில் குண்டு வைக்கப்பட்டு அது அரசு அலுவலகத்திற்குள் அனுப்பப்படுகிறது. மிக சரியாக அதே நேரம் காந்தப் புயலால் சூரிய மண்டலத்தில் காற்று வீச்சு தடைபட்டு நகரம் முழுவதிலும் செல்போன்கள் செயல் இழந்து போகின்றன.

இது போன்ற சூழலில் என்ன செய்தால் செல்போன்கள் வேலை செய்யும் என்கிற ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறார் நகுல். தன் காரில் குண்டு வைத்திருப்பது தெரியாமலேயே சதீஷ் காரில் தனது காதலியுடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். வில்லன் அவரது காரை பாலோ செய்து வருகிறார்.

இன்னொரு பக்கம் தினேஷை பார்க்க வந்த பிந்து மாதவி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொள்ள.. அவரை குழிக்குள் தள்ளி மேலே தகர கதவுகள் சூழ்ந்துகின்றன. அவரது தலைக்கு மேலே 75 டன் எடையுள்ள பிரமாண்டமான கல் தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஒரு பக்கம் தினேஷ் பிந்து மாதவியைத் தேடுகிறார். இன்னொரு பக்கம் நகுலின் ஆராய்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டு அந்த செல்போன் நிறுவனத்தின் தலைவர், கல்லூரியின் முதல்வர் மற்றும் பிராஜெக்ட்டை காட்டிய மாணவர்களுடன் நகுலின் வீட்டுக்கே வந்திருக்கிறார்கள். நகுலின் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

காரில் வெடிகுண்டு இருப்பதே தெரியாமல் சதீஷ் தன் காதலியுடன் ஊரைச் சுற்றிக் கொண்டிருக்க.. பின்னாலேயே வில்லன் துரத்துகிறான்.  செல்போன் மீண்டும் இயங்கத் துவங்கினால் குண்டு வெடிப்பு நடக்கும். நகுல் தன் முயற்சியில் தீவிரமாக இருக்க.. பிந்து மாதவி தப்பிக்கத் துடித்துக் கொண்டிருக்க.. பிந்துவைத் தேடி தினேஷ் அலைந்து கொண்டிருக்க.. என்ன நடக்கிறது என்பதுதான் படம்..!

படத்தின் துவக்கத்திலேயே கதையைச் சொல்லி விடுகிறார் இயக்குநர். இதனாலேயே பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஆனால் பரபரப்பை கூட்ட வேண்டிய நேரங்களில் அது தேமே என்று இருப்பதுதான் சற்று மந்தமாக இருக்கிறது. இரண்டாம் பாதியில் அளவுக்கதிகமான டெக்னிக்கல் வார்த்தைகள் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் சம்பந்தமான பேச்சுக்கள் அதிகமாக இருக்க.. அப்சர்வேஷன் செய்யவே சற்று நேரமாகிறது..!

குண்டு வெடித்தால் என்கிற பதைபதைப்பும், அந்த பிரமாண்டமான கல் கீழே விழுந்தால் என்கிற படப்படப்பையும் இயக்குநர் நமக்குத் தந்திருக்க வேண்டும். கொஞ்சம் மிஸ்ஸிங்காகிவிட்டது.. ஆனாலும் இறுதிவரையில் ஒரு எதிர்பார்ப்பை கொண்டு சென்றிருக்கிறார். கிளைமாக்ஸ் எதிர்பாராதது.. என்றாலும் சினிமாத்தனம்தான்..

நகுலுக்கு இந்தப் படத்தில் காஸ்ட்யூமே இல்லை என்று சொல்ல்லாம். வெரி சிம்பிளாக இருக்கிறார். இயல்பாக நடித்திருக்கிறார். சண்டை காட்சிகள் இல்லை.. டூயட்டுகளிலும் மாண்டேஜ் ஷாட்டுகள் என்பதால் அதிலேயே கதையைச் சொல்லி நகர்த்தியிருக்கிறார்கள்.. நகுல் இது போன்று தொடர்ந்து கதைகளுக்கேற்ற படங்களில் நடித்தால் அவரது கேரியருக்கு நல்லதுதான்..!

பிந்து மாதவி.. வழக்கம்போல அழகில் அசர வைக்கிறார். அவரை அறிமுகப்படுத்தும் காட்சியில் பின்னணியில் ஒலிக்கும் இசையே அசத்தல்.. கண்களிலேயே பாதி கதையை பேசிவிட்டுப் போகிறார். தினேஷ் இவரிடம் என்னை நல்லா திட்டிருங்க. அதுக்கப்புறம் நான் இனிமே வர மாட்டேன் என்று சொல்ல திட்டுவதற்காக அவர் டிரெயினிங் எடுத்து பழகிப் பார்த்து முடியாமல்.. நிசமாகவே திட்ட வேண்டிய சூழலில் பொங்கி எழுந்து பேசும் காட்சிகளில் அவரது நடிப்பை பலே என்று சொல்ல முடிகிறது..! இன்னும் கொஞ்சம் இயக்கத்தில் முயற்சி செய்திருந்தால் பிந்து மாதவி தன் நடிப்பு பற்றி சிலாகிக்க இந்தப் படத்தை உதாரணமாகச் சொல்லியிருக்க முடியும்..!

தினேஷின் தலை சுற்றல் இந்தப் படத்திலும் நிற்கவில்லை போலும். விமலுக்கு அடுத்து தனது தலை அசைவிலேயே நடிப்பைக் காட்டி வருவது தினேஷ்தான். இதோடு விட்டுவிட்டால் நமக்கும் நல்லது.. கஸ்டமர்களின் வீட்டை விற்கும்போது பீலா விட்டு அது உடனே பொய் என்று தெரிய வர சமாளிப்புத் திலகமாக மாறி நகைக்க வைக்கிறார். இவருடைய போர்ஷனில் காதல் உடைந்து பின் மீண்டும் உண்டாகியிருக்கும் காட்சிகளை கட் டூ கட் போர்ஷனாக இடைவேளைக்கு பின்பு சொல்லியிருக்கும் விதம் ரசிப்புக்குரியது.

அறிமுக நடிகை ஐஸ்வர்யா தத்தா மூக்கும், முழியுமாக லட்சணமாக இருக்கிறார். கல்லூரி மாணவி கேரக்டருக்கு கனப் பொருத்தம். அதிகமாக நடிக்க வாய்ப்பில்லாததால் அதிகமாக பாராட்ட முடியவில்லை. ஆனால் ரசிக்க வைத்திருக்கிறார். அடுத்தடுத்து பார்ப்போம்..!

சதீஷின் காமெடிதான் படத்தின் முற்பாதியில் படத்தை பெரிதும் நகர்த்தியிருக்கிறது. அவரை மாப்பிள்ளை பார்க்க மாமனாரும், பெண்ணும் காரில் ஏறி அலப்பறை கொடுக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. அந்தப் பெண்ணின் கேரக்டர் ஸ்கெட்ச்சை கடைசிவரையிலும் நட்ட நடு நிலை சென்டராகவே காட்டி சதீஷை அலற வைத்திருக்கிறார் இயக்குநர்.

செல்போனை தொலைத்துவிட்டு தொலைத்தவனிடம் சதீஷ் பேசும் பேச்சுக்களெல்லாம் எந்தப் படத்திலும் பார்க்காதது. காமெடியன் காமெடியனாகவே இருக்கட்டும் என்று நினைத்துவிட்டார்கள் போலும்..!

ஒரு சில காட்சிகளே என்றாலும் ஊர்வசியின் அலப்பறை நடிப்பு இதிலும்.. வித்தியாசமான அம்மாவாக நகுலின் காதலியை பற்றி நேருக்கு நேராக விசாரிப்பதும், காதலிக்கு செல்போனில் மெஸேஜ் கொடுப்பதுமாக குறும்புத்தனமான அம்மாவெனில் அது ஊர்வசிதான் என்பது வேறு ஆல்டர்னேட் இல்லை என்றே சொல்லலாம்.

மனோபாலாவை காமெடிக்கு பயன்படுத்தியிருப்பது ஓகேதான் என்றாலும், இந்த அளவுக்காக ஒரு பொறியியல் கல்லூரியின் முதல்வரை கீழமைப்படுத்துவது..? கஷ்டகாலம்..! தவிர்த்திருக்கலாம்..!

தமனின் இசையில் இரண்டு பாடல்கள் ஓகே.. பிந்து மாதவிக்காக இசைத்திருக்கும் இசை டபுள் ஓகே..!  ஆனால் பின்னணியில் இரைச்சல்தான் காதை கிழிக்கிறது..!

இப்போதைய தமிழ்ச் சினிமாவின் டிரெண்ட்டு தீவிரவாதம்தான் போலிருக்கிறது. இந்தக் குண்டு வெடிப்பு கலாச்சாரத்தை மையமாக வைத்து சென்ற ஆண்டே கணக்கு வழக்கில்லாமல் படங்கள் வந்திருந்தன. இந்தாண்டு அதையும் மிஞ்சிவிடும் போலிருக்கிறது..!

குண்டு வெடிப்பு என்றாலும் அதனை முறியடிப்பது எப்படி என்றே பல படங்கள் கதை சொல்லி வருகின்றன. ஏன் வைக்கிறார்கள்..? அதன் முன் காரணங்கள் என்ன..? பின் விளைவுகள் என்ன என்பதை பற்றி யாரும் யோசிப்பதேயில்லை.. இதைப் பற்றி இந்தப் படம் பேசியிருந்தால் படமும் பேசப்பட்டிருக்கும்..!

‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’ என்ற டைட்டிலை வைத்துக் கொண்டு இந்த நம்பரை அழுத்தினால் வெடிக்கும் என்கிற கான்செப்ட்டே இல்லாமல், மூன்றாவது ரிங்கில் குண்டு வெடிக்கும் என்று வைத்தது ஏனோ..?

படம் முக்கால்வாசி பரபரப்பைத்தான் கொடுத்திருக்கிறது என்றாலும் இசையைத் தவிர வேறு தலைவலி தரக் கூடிய விஷயங்கள் இல்லையென்பதால் தாராளமாக பார்க்கலாம்..! அறிமுக இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பாவின் அடுத்தடுத்த படங்கள் மேலும் வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!

Our Score