சமீபத்தில் ‘ஏ-1’ என்ற படத்தின் வெற்றியை ருசித்த கையோடு, நடிகர் சந்தானம் தனது அடுத்தப் படத்தைத் துவக்குகிறார்.
இப்படத்தை ‘அறம்’, ‘குலேபகாவலி’, ‘ஐரா’ ஆகிய படங்களை தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டியோஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் கோட்டப்பாடி ஜே.ராஜேஷ் தயாரிக்கிறார்.
இந்த நிறுவனம் தற்போது சிவகார்த்திகேயனின் நடிப்பில் ‘ஹீரோ’ என்கிற படத்தையும், விஜய் சேதுபதி-ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘க.பெ.ரணசிங்கம்’ என்கிற படத்தையும் தயாரித்து வருகிறது.
இவரோடு சேர்ந்து ‘சோல்ஜர் பேக்டரி’ நிறுவனத்தின் தயாரிப்பாளரான கே.எஸ்.சினிஸும் இப்படத்தின் தயாரிப்பில் பங்கு பெறுகிறார். இவர் ஜெய்-அஞ்சலி நடிப்பில் வெளியான ‘பலூன்’ என்கிற படத்தை இயக்கியவர்.
இந்தப் படத்தில் சந்தானம் மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்கவிருக்கிறார் என்பது ஹைலைட்டான விஷயம்.
திறமை வாய்ந்த தொழில் நுட்பக் குழுவும், திறமை மிக்க நடிகர், நடிகையர் குழுவும் இப்படத்தில் இணைய இருக்கிறார்கள்.
இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளான படமாக இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார் என்பதோடு இப்படத்தை இயக்க இருப்பவர் எழுத்தாளர் கார்த்திக் யோகி என்பதும்தான். கார்த்திக் யோகி தமிழ் சினிமாவில் பல வெற்றிகரமான திரைக்கதைகளுக்கு உதவியாக இருந்தவர்.
“இத்திரைப்படம் மிக, மிக வித்தியாசமான கிரியேட்டிவான படமாக இருக்கும். இப்படத்தில் சந்தானத்தின் மூன்று கதாபாத்திரங்கள் எதிர்பார்க்காத கேரக்டர் ஸ்கெட்ச்சுடன் இருக்கும். சயின்ஸ் பிக்ஷன் பின்னணியில் உருவாகவுள்ள இப்படத்தின் கன்டெண்ட் முழுக்க, முழுக்க ரசிர்களை சிரித்து மகிழ வைக்கும். இதுவரைக்கும் தனது நடிப்பில் வெளியான படங்களின் நகைச்சுவைகளில் இது உச்சத்தைக் காட்டும்…” என்கிறார் சந்தானம்.
வெகு விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. பிரம்மாண்டமான செலவில் தயாராகும் இத்திரைப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் பெயர் வரும் செப்டம்பர் 5-ம் தேதி மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட இருக்கிறது.