தமிழ்ச் சினிமாவின் காமெடி கிங்கான கவுண்டமணி இன்று ‘சிக்ஸர்’ என்ற படத்திற்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.
நடிகர் வைபவ், நடிகை பலாக் லால்வாணி நடிப்பில் அறிமுக இயக்குநரான சாக்சியின் இயக்கத்தில் நாளை வெளியாகவுள்ள திரைப்படம் ‘சிக்ஸர்’.
இந்தப் படத்தில் நாயகன் வைபவ் மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்திருக்கிறார். இதேபோன்ற ஒரு கேரக்டரில் ‘சின்னத்தம்பி’ படத்தில் கவுண்டமணி நடித்திருந்தார். அதில் கவுண்டமணி ஏற்றிருந்த ‘குக் கந்தசாமி’ என்கிற கேரக்டர் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான வசனமாகும்.
‘சின்னத்தம்பி’ படத்தில் கவுண்டமணி பேசும் புகழ் பெற்ற மூன்று வசனங்களை இந்த ‘சிக்ஸர்’ படத்தில் காப்பியடித்து வைத்திருக்கிறார்கள்.
மேலும் ‘சிக்ஸர்’ படத்தில் நாயகன் வைபவ்வின் தாத்தாவாக கவுண்டமணியின் புகைப்பட்டைக் காட்டுகிறார்கள். அந்தப் புகைப்படத்தைப் பார்த்து நாயகன் வைபவ், “தாத்தா… டேய் தாத்தா.. சிறப்பா பண்ணிட்டடா.. ராத்திரி என்னென்ன அக்கிரமம் பண்ணினியோ தெரியலை.. எனக்கு 6 மணிக்கு மேல கண்ணு தெரியாம போச்சுடா..” என்று பேசுவதைப்போல வசனம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், “ஒரு கோடி ரூபாய் கொடுத்தாக்கூட ஆறு மணிக்கு மேல வேலை பார்க்க மாட்டேண்டா..” என்ற வசனத்தையும், “முப்பது ரூபா கொடுத்தா மூணு நாளைக்கு கண் முழிச்சு வேலை பார்ப்பேண்டா…” என்கிற வசனத்தையும் ‘சிக்ஸர்’ படத்தில் வைத்திருக்கிறார்கள்.
இந்த வசனங்களும் ‘சின்னத்தம்பி’ படத்தில் கவுண்டமணி பேசும் வசனங்கள்தான். இந்த வசனங்களை வைத்து பலதரப்பட்ட செய்திகளில் மீம்ஸ்களை கிரியேட் செய்து உலாவிட்டிருக்கிறார்கள் உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழர்கள்.
இந்த நிலையில் தன்னிடம் அனுமதி பெறாமல் தனது புகைப்படத்தை நாயகனின் தாத்தாவாகப் பயன்படுத்தியதற்கும், “சின்னத்தம்பி’ படத்தில் தான் பேசிய வசனங்களை தன் அனுமதியில்லாமல் பேசியமைக்காகவும் ‘சிக்ஸர்’ படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநரும் தன்னிடத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மேலும் அந்தக் காட்சிகளையும் உடனடியாக படத்தில் இருந்து நீக்க வேண்டு்ம்…” என்று கோரியிருக்கிறார் கவுண்டமணி.
“இல்லையெனில் நீதிமன்றத்தில் சட்டப்படி நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடரப்படும்…” என்றும் அந்த வக்கீல் நோட்டீஸில் கூறியிருக்கிறார் கவுண்டமணி.
ஏதோ பசங்க.. ஒரு ஆர்வத்துல எடுத்து வைச்சுக்கிட்டதை இப்படி ஜென்மப் பகை போல பேசுறது கவுண்டருக்கு அழகல்ல..!
புள்ளைக நம்மளால பொழைச்சுப் போகட்டும்ன்னு விடுறதுதான் பெரியவங்களுக்கு அழகு..!