“ரஜினி இனிமேல் பன்ச் வசனம் பேசினால் மக்கள் சிரிப்பார்கள்…” – நடிகர் எஸ்.வி.சேகரின் கருத்து

“ரஜினி இனிமேல் பன்ச் வசனம் பேசினால் மக்கள் சிரிப்பார்கள்…” – நடிகர் எஸ்.வி.சேகரின் கருத்து

நடிகர் ரஜினி “நான் இனிமேல் அரசியல் ஈடுபடப் போவதில்லை. கட்சியைத் துவக்கவும் போவதில்லை…” என்று அறிவித்ததன் பின்பு அவருடைய ஆதரவாளர்களும் பலரும் சோர்ந்துவிட்டனர்.

இந்த நிலையில் ரஜினியின் இந்த முடிவு குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் ‘டூரிங் டாக்கீஸ்’ யுடியூபு் சேனலுக்கு அளித்த பேட்டியில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இது பற்றி எஸ்.வி.சேகர் பேசும்போது, “ரஜினி ‘அரசியலுக்கு வர மாட்டேன்’ என்று சொன்னது ஏற்க முடியாததாக இருக்கிறது. இதன் மூலம் அவர் மீதான நம்பகத்தன்மை சுத்தமாகப் போய்விட்டது. அவர் என்னதான் தன்னுடயை உடல் நிலையைக் காரணம் காட்டினாலும் அரசியல் என்று வந்துவிட்டால் இதையெல்லாம் சொல்லவே கூடாது.

இன்றைக்கு இருக்கும் எத்தனையோ அரசியல் தலைவர்களுக்கு பல்வேறு நோய்கள் இருக்கின்றன. இருந்தும் அவர்கள் அரசியல் களத்தில் நின்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஒருவேளை தான் அரசியலுக்குள் நுழைந்து தோற்றுவிட்டால் ‘தோல்வியையே கண்டிராத தன் மரியாதை என்னாவது…?’ என்று அவர் யோசித்திருந்தால் அதுவும் தவறு. அவருடைய ‘நாட்டுக்கு ஒரு நல்லவன்’ திரைப்படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்த திரைப்படம். தமிழ்நாட்டில் வெறும் 2 நாட்கள் மட்டுமே ஓடிய படம்.

ஆக.. அவரும் தன் கலை வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தவர்தான். இந்த நிலைமையில் அவர் அரசியலுக்கு வராமல் பின் வாங்கியது அவருடைய வாழ்க்கையில் அவர் பெற்றிருக்கும்.. அவராலேயே அழிக்க முடியாத ஒரு கறை.

இனிமேல் அவருடைய சினிமாக்களில் அவர் பன்ச் வசனங்களை பேசினால் மக்கள் கேலியாகத்தான் பார்ப்பார்கள். அவர் முற்றிலும் நடிக்கவும் முடியாத அளவுக்கு உடல் நலனில் இல்லை என்றால்கூட ஒத்துக் கொள்ளலாம். ஆனால், இப்போது இந்த உடல் நலனுடன்தானே ‘கபாலி’, ‘காலா’, ‘பேட்டை’, ‘அண்ணாத்த’ என்று படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

அப்ப.. சினிமாவில் நடிப்பதற்கு மட்டும் உடல் நிலை ஒத்துக் கொள்ளுமா.. அரசியலுக்கு வருவதற்கு ஒத்துக் கொள்ளாதா என்ற கேள்வியெல்லாம் எழுகிறதே..? ‘அண்ணாத்த’ அட்வான்ஸையும் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போனால் அதுதான் மரியாதை என்று டிவிட்டரில் பல செய்திகளை போட்டிருக்காங்க.

ரஜினி இனிமேலும் மனசு மாறி திரும்ப வந்தாலும் அது சரியா இருக்காது. அவர் இல்லையென்றாலும், இங்கே தொடர்ந்து அரசியல் இயங்கிக் கொண்டுதான் இருக்கும்..” என்று சொல்லியிருக்கிறார் நடிகர் எஸ்.வி.சேகர்.

Our Score