full screen background image

“கரகாட்டக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் வருமா?” – நடிகர் ராமராஜன் பதில்!

“கரகாட்டக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் வருமா?” – நடிகர் ராமராஜன் பதில்!

பல வெற்றிப் படங்களை கொடுத்த ‘கிராமத்து நாயகன்’ ராமராஜன் கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அவர் இப்போது மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.

எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் V.மதியழகன் தயாரிப்பில் ‘சாமானியன்’ என்ற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்.

அதுமட்டுமல்ல. ராமராஜனின் திரையுலக பயண வெற்றியின் பின்னணியில் தூணாக இருந்து இனிமையான பாடல்களை கொடுத்த இசைஞானி இளையராஜா, தற்போது 23 வருடங்களுக்கு பிறகு இந்த ‘சாமானியன்’ படத்தின் மூலம் மீண்டும் ராமராஜனுடன் கை கோர்த்துள்ளார். இந்தப் படத்தை ஆர்.ராகேஷ் இயக்கி இருக்கிறார்.

இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது இதையொட்டி, நடிகர் ராமராஜன் நிருபர்களை சந்தித்து படம் பற்றி பல தகவல்களை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசும்போது, “நான் எப்போதுமே சினிமாவை விட்டு விலகியதில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஏன் நடிக்கவில்லை என்றால், எனக்கு ஏற்ற கதை வரவில்லை. அல்லது கேட்ட கதைகள் எனக்கு பிடிக்கவில்லை.

அதோடு  2010-ம் ஆண்டு நான் ஒரு மிகப் பெரிய கார் விபத்தை சந்தித்தேன். அதில் இருந்து மயிரிழையில் உயர் தப்பினேன் என்று சொன்னால் சரியாக இருக்கும். அதிலிருந்து மீண்டு நான் உயிரோடு இருப்பேன் என்றோ, மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என்றோ நினைத்துகூட பார்த்தது இல்லை.

இப்படி ஒரு படத்தில் நடித்திருப்பது உலக அதிசயம் போல நடந்திருக்கிறது. இதற்கு காரணம், என்னுடைய ரசிகர்களின், தமிழக மக்களின் பிரார்த்தனைதான். இந்த ரசிகர் மன்றங்களுக்கு நான் எதுவும் செய்ததில்லை. ஆனால் எனக்காக உயிரை தரக் கூடிய அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார்கள்.

இந்த சாமானியன் படத்தில் ஏன் நடித்தேன் என்றால் இயக்குநர் ராகேஷ் சொன்ன கதைதான் காரணம். இதுவரையிலும் நான் நடிக்காத கதை இது. இதுவரை திரை உலகம் சந்தித்திராத கதை இது. படத்தின் கதை என் காலக்கட்டத்திற்கு ஏற்ற கதையாகவும், அதே சமயம் இப்போதைய காலக்கட்டத்துக்கு ஏற்ற கதையாகவும் இருக்கும்.

குடும்பமும் இருக்கும். குதூகலமுமிருக்கும், நகைசுவையும் இருக்கும். நளினமும் இருக்கும். எல்ல அம்சமும் கூடிய கதை இது. இதனால்தான் இப்படத்தை தேர்ந்தெடுத்தேன். இந்தப் படத்தின் திரைக்கதையை உலகில் பிறந்த எவரும் கடக்காமல் போகவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு அருமையான கதை இது.

படம் பார்த்து விட்டு வரும்போது தாய்மார்கள் மட்டுமல்ல, என்னுடைய ரசிகர்களும் ஆண்களும்கூட கண்ணீர் விட்டு ஃபீல் பண்ணும் அளவிற்கான கதை இது. ஆனால், இப்படத்தில் என் ரசிகர்களுக்கு சின்ன வருத்தம் வரும்.

அது என்னவென்றால், என்னுடைய திரையுலக புகழுக்கு காரணம் இசைஞானி இளையராஜாவின் இசைதான். அவர் இல்லாமல் நான் இல்லை. இந்த 23 வருடங்களிலும் என்னை ராமராஜன் என்று சொல்கிறார்கள் என்றால், அதற்கு இசைஞானி இளையராஜாவின் பாட்டுதான் காரணம். அதுதான் என்னை இப்போதுவரையிலும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இன்றும் பல இடங்களில் இசைஞானி இளையராஜா, ராமராஜன் பாடல்களைத்தான் கேட்கிறேன் என்கிறார்கள்.

ஆனால் இப்படத்தின் கதைப்படி இப்படத்தில் எனக்கு ஜோடி இல்லை. அதோடு பாட்டும்  இல்லை. அதனால் இசை அமைப்பாளராக யாரை போடுவது என்பதில் பட ஆரம்பத்தில் சிறு குழப்பம் இருந்தது. பட்ஜெட்டும் இடித்தது. ஆனால் ராமராஜன் என்றால் இசைஞானி இளையராஜா இருந்தால்தான் நன்றாக இருக்கும் என பலரும் சொல்லவே, ராஜாவிடம் சென்றோம்.

அவர் கதையைக் கேட்டதுமே, ‘‘ஏம்பா… ராமராஜனும் நானும் சேர்ந்தால் பாட்டுதானேப்பா… ஆனால், பாட்டு இல்லாம ஏங்கிட்ட வந்து இருக்கீங்களே..‘‘ என்று ஆதங்கப்பட்டார். “கதை அப்படிண்ணே..” என்றோம். பிறகு எனக்காக ஒரு பாட்டை படத்தில் சேர்த்தார். ஆனால் இசைஞானி இப்படத்துக்குள் வந்த பிறகு படத்தின் எதிர்பார்ப்பு எகிறிவிட்டது.

இப்படத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன். நான் கேட்டவரையிலும் மேலும் இரண்டு கதைகள் எனக்கு பிடித்து இருக்கிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவைகளின் அறிவிப்பு வெளிவரும்.

இப்படத்தில்தான் எனக்கு ஜோடி இல்லையே தவிர, இனி வரும் படங்களில் என் படங்களில் கண்டிப்பாக ஜோடி இருக்கும். டூயட்கூட பாடலாம் என இருக்கிறேன். கதை நன்றாக இருந்தால் ரசிகர்கள் ஏற்று கொள்வார்கள்.

போகிற இடங்களிலெல்லாம் ‘கரகாட்டக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகம் வெளி வருமா என கேட்கிறார்கள். இயக்குநர் கங்கை அமரன்கூட ‘கரகாட்டக்காரன்’ இரண்டாம் பாகம் எடுக்கலமா? என்று கேட்டார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். “கரகாட்டக்காரனிலேயே எல்லா ஆட்டத்தையும் ஆடியாச்சு. பாட்டையும் பாடியாச்சு. இனி என்ன ஆட்டம் ஆடுறது. அதனால் வேண்டாம் சார்..” என சொல்லிவிட்டேன்…” என்றார்.

Our Score