full screen background image

சாமான்யன் – சினிமா விமர்சனம்

சாமான்யன் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் V.மதியழகன் தயாரித்துள்ளார்.

கிட்டத்தட்ட 12 வருட கால இடைவெளிக்குப் பிறகு மக்கள் நாயகன்’ நடிகர் ராமராஜன் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாகவே தமிழ் சினிமாவில் மறுபிரவேசம் செய்கிறார்.

இந்த படத்தில் லியோ சிவக்குமார், நக்சா சரண், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், கே.எஸ்.ரவிக்குமார், போஸ் வெங்கட், வினோதினி வைத்தியநாதன், ஸ்முருதி வெங்கட், ராஜாராணி பாண்டியன், மைம் கோபி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இசைஞானி இளையராஜா இசை அமைக்க, ஒளிப்பதிவை அருள்செல்வன் மேற்கொள்ள, படத் தொகுப்பை  ராம்கோபி கவனிக்கிறார்.. சண்டை காட்சிகளை மிரட்டல் செல்வா வடிவமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்களை சினேகன் மற்றும் விஜேபி ஆகியோர் எழுத. இவர்களுடன் பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் முதன்முறையாக இந்த படத்திற்காக ஒரு  பாடலை எழுதியுள்ளார்.

இந்த படத்தை இயக்குநர் ராகேஷ் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘தம்பிக்கோட்டை’, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ ஆகிய  படங்களை இயக்கியவர்.

சாமான்யன் என்றாலே காமன்மேன்தான். ஆனால், இந்த ‘சாமான்யன்’ காமன்மேன் அல்ல.. அசாதாரணமானவன். கிராமத்தில் இருக்கும் ஒரு நல்ல மனிதர், சூழ்நிலை காரணமாக ஒரு நேரத்தில் திடீரென குணம் மாறினால் என்ன ஆகும் என்பதுதான் இந்தப் படம்.

கிராமத்தில் இருந்து சென்னைக்கு ஒரு நாள் வந்து சேர்கிறார்கள் ராமராஜனும், எம்.எஸ்.பாஸ்கரும். வந்தவர்கள் ராதாரவியின் வீட்டுக்கு விருந்தினர்களாக வந்திருக்கிறார்கள்.

தன் பேத்தியின் பிறந்த நாளுக்காக வந்திருப்பதாகச் சொல்லும் ராமராஜன், அந்தப் பகுதி இன்ஸ்பெக்டரின் மகனான போட்டோகிராபரை அழைத்துக் கொண்டு ஒரு வங்கிக்குப் பணம் எடுப்பதாகச் சொல்லிப் போகிறார்.

அதே நேரம் எம்.எஸ்.பாஸ்கர் தனது மகள் வீட்டுக்குச் செல்கிறார். அந்த வீடு பூட்டிக் கிடப்பதால் எதிர்வீட்டில் இருக்கும் வங்கி மேனேஜரான போஸ் வெங்கட்டின் வீட்டில் அடைக்கலமாகிறார்.

ராதாரவியோ ரொம்ப நாள் பழக்கமான பக்கத்து வீட்டில் வசிக்கும் வங்கியின் துணை மேனேஜரின் வீட்டுக்குச் சென்று ச்சும்மா பேசிக் கொண்டிருக்கிறார்.

ராமராஜன் சென்ற அந்த வங்கியில் கொள்ளையடிக்க நான்கு இளைஞர்கள் திட்டமிட்டுள்ளார்கள். அதில் ஒருவனும் அன்றைக்கு வங்கிக்குள் நுழைந்துள்ளான்.

வங்கிக்குள் வந்தவுடன் ராமராஜன் கையோடு கொண்டு வந்திருக்கும் சூட்கேஸில் டைம்பாம் இருப்பதாகச் சொல்லி அந்த வங்கியைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார்.

அதே நேரம் எம்.எஸ்.பாஸ்கர், துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அதே வங்கியின் மேனேஜரான போஸ் வெங்கட்டின் மனைவியான வினோதினியையும், துணை மேனேஜரின் மனைவியான ஸ்முருதி வெங்கட்டை ராதாரவியும் பணயக் கைதியாக்குகின்றனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் கே.எஸ்.ரவிக்குமார் தனது படை, பரிவாரங்களுடன் வங்கியை முற்றுகையிடுகிறார். ராமராஜன் தன்னுடைய கோரிக்கையாக 2 லட்சத்து சொச்சம் ரூபாயை ஒரு அக்கவுண்ட்டிலும், 3.50 லட்சம் பணம் மற்றும் அதற்கு 13 சதவிகித வட்டியை 3 வருஷத்துக்கும் சேர்த்து ஒரு அக்கவுண்ட்டிலும் போட வேண்டும் என்றும், ஒரு முகவரியை சொல்லி அந்த வீட்டில் இருப்பவரை வெளியேற்றிவிட்டு, மதுரையில் இருக்கும் ஒரு குடும்பத்தினரை அழைத்து வந்து அந்த வீட்டில் குடி வைக்க வேண்டும் என்றும் வித்தியாசமான நிபந்தனைகளை விதிக்கிறார்.

முதல் இரண்டு நிபந்தனைகளை வங்கியில் உடனேயே நிறைவேற்றுகிறார்கள். ஆனால் மூன்றாவது நிபந்தனையை நிறைவேற்ற ராமராஜன் சொன்ன மதுரை முகவரிக்குச் சென்றால் அங்கே மூன்று சமாதிகள் மட்டும்தான் இருக்கிறது.

அந்த சமாதிகள் யாருடையது..? அதற்கும் ராமராஜனுக்கும் என்ன சம்பந்தம்..? 3-வது நிபந்தனையை நிறைவேற்றினார்களா..? முடிவு என்னானது..? என்பதுதான் இந்த ‘சாமான்யன்’ படத்தின் திரைக்கதை.

12 ஆண்டுகள் வனவாசத்தைக் கழித்துவிட்டு திரும்பவும் கேமிரா முன்பாக வந்து நின்றிருக்கிறார் ராமராஜன். அவர் கோலோச்சிய காலக்கட்டத்திலேயே அவருடைய படங்கள் ஓடியதற்குக் காரணம் ராமராஜனின் நடிப்பல்ல. பாடல்களும், காமெடியும், தலைவலி தராத திரைக்கதையும், இயக்கமும்தான்.

அதனால் ராமராஜனின் நடிப்பைப் பற்றி இப்போதும் நாம் விமர்சிக்க வேண்டாம். ஒரு சாதாரண ‘குமரேசன்’ என்னும் ராமராஜன் தன் வீட்டில் என்ன பேசுவாரோ, செய்வாரோ, எப்படி கோபப்படுவாரோ.. அப்படியேதான்.. அதையேதான்.. இந்தப் படத்திலும் செய்திருக்கிறார்.

விபத்தில் சிக்கியதால் அவருடைய உடலில் ஏற்பட்டுள்ள மாற்றம் ஸ்கிரீனிலும் நன்றாகவே தெரிகிறது. அதனால் அவரை ரொம்பவும் கஷ்டப்படுத்தாமல் சண்டை காட்சிகளில்கூட தொழில் நுட்பத்தின் உதவியால் அவரை ரொம்பவே காப்பாற்றியிருக்கிறார்கள். ஆனால் அந்த சண்டை காட்சிகளெல்லாம் காமெடி காட்சிகள் இல்லாத குறையைப் போக்கிவிட்டன என்பதையும் நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

 ஆம்னி பஸ்களை நட்ட நடுராத்திரியில் பாத்ரூம் வசதிகூட இல்லாத இடங்களில் நிறுத்தி, பகல்  கொள்ளைபோல் ராத்திரி கொள்ளையடிக்கும் ஹோட்டல்காரர்களின் அராஜகத்தைத் தட்டிக் கேட்கும் குணமுள்ளவராகத் துவக்கத்திலேயே ராமராஜனின் கேரக்டர் ஸ்கெட்ச்சை இயக்குநர் காண்பித்துவிட்டதால், அடுத்த சில காட்சிகளில் வங்கியில் ஒரு போராளியாக உருவெடுக்கும் ராமராஜனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

“உன் டவுசரை அவிழ்த்து உட்கார வைச்சிருவேன்..” என்று மிரட்டும் கே.எஸ்.ரவிக்குமாரிடம்,  “என் வாழ்க்கையே டவுசரோடதான் தொடங்குச்சு. இன்னிக்குவரைக்கும் அதுவே நல்லபடியாத்தான் போயிட்டு இருக்கு, அதனால் எனக்கு அது பெரிய விசயமே இல்லை” என்று ராமராஜன் கொடுக்கும் பதிலடிக்கு மொத்தத் தியேட்டரும் கை தட்டுகிறது. 

“பாடியே பால் கறந்ததெல்லாம் பழைய கதை. இப்பவும் அதையெல்லாம் செய்ய முடியாது.. காலம் மாறிப் போச்சு..” என்று எதார்த்தமாகவும் தனது பழைய சினிமா வாழ்க்கையைத் தொட்டுத் தடவியிருக்கிறார் ராமராஜன். 

மகள் மீது கொள்ளைப் பாசம், நண்பன் பாஸ்கர் மீது பாசம்.. பொதுமக்கள் மீது பாசம்.. அக்கறை.. மீடியாக்கள், வங்கிக்காரர்கள், அரசுகள் என்று அனைவரையும் விளாசித் தள்ளியிருக்கும்விதம்.. இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தால் தனது இத்தனையாண்டு கால இடைவெளியை இந்த ஒரு படத்திலேயே ராமராஜன் வசனத்தாலேயே(நடிப்பால் அல்ல!) கொட்டித் தீர்த்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

மருமகனாக நடித்திருக்கும் லியோ சிவக்குமாரின் தன்மையான முகமும், நடிப்பும் அவருடைய கேரக்டருக்குப் பொருந்தியிருக்கிறது. நக்சா சரணின் இயல்பான நடிப்பும், அப்பா, மாமா  மீது காட்டும் பாசமும், மைம் கோபி மீது காட்டும் வெறுப்பும், ஆத்திரமும் கச்சிதமாக இருக்கிறது.

படபடவென பொரிந்து தள்ளும் மனைவியாக வினோதினியும், அமைதியான கர்ப்பிணி மனைவியாக ஸ்முருதி வெங்கட்டும் குறையில்லாமல் நடித்துள்ளனர். பக்கத்து வீட்டில் வசிக்கும் பாசக்கார அக்காவாக தீபாவும் தன் பங்குக்கு திரைக்கதைக்கு பெரிதும் உதவியிருக்கிறார்.

சம்பந்தியாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கரும், நண்பனின் துயரம் என் துயரம் என்று நினைத்து ராமராஜனுக்குக் கை கொடுக்கும் ராதாரவியும் இந்தப் படத்தில் கொஞ்சம் அடக்கித்தான் வாசித்திருக்கிறார்கள்.

வில்லன்களாக காட்டப்படும் போஸ் வெங்கட்டும், மைம் கோபியும் வில்லத்தனத்தில் பாதி, பாதியை மட்டுமே காண்பித்திருக்கிறார்கள். மைம் கோபியின் முடிவு பரிதாபம்தான்.. ஆனாலும் அவருடைய பழி வாங்குதல் திரைக்கதையில் இந்தப் படத்தை சாதாரணமான ஒன்றாக ஆக்கிவிட்டது.

இந்தப் படத்தில் இருக்கும் கே.எஸ்.ரவிக்குமார் மாதிரியான போலீஸ் கமிஷனரை இந்தியாவிலேயே எங்கு தேடினாலும் பார்க்க முடியாது. ராமராஜன் படத்தில் எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும் கவுண்டமணியை போல இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமாரை ஆக்கிவிட்டார் இயக்குநர்.

அறந்தாங்கி நிஷா ஒரேயொரு காட்சியில் பழைய ராமராஜன் ரசிகர்களை உசுப்பிவிடும் வேலையை மட்டும் செய்துவிட்டுப் போயிருக்கிறார். இதுவே படத்தை தரை மட்டத்துக்கு இழுத்துவந்து விட்டுவிட்டது.

அருள் செல்வனின் ஒளிப்பதிவில் குறைவில்லை. வங்கிக்குள் நடக்கும் சம்பவங்களை பரபரப்பாக்க முனைந்திருக்கிறார். ஆனால் மற்றைய துறைகளின் ஒத்துழைப்பு இல்லாததால் அது பாதியிலேயே முடிந்திருக்கிறது. கிராமத்துச் சூழலையும், பாடல் காட்சியையும் மட்டும் தனித்த அடையாளத்துடன் பதிவு செய்திருக்கிறார்.

இசைஞானி இளையராஜா இசையில் இரண்டு பாடல்கள். சுமாராக அமைத்திருக்கிறார். தத்தி வா.. தத்தி வா.. தத்தைக் கிளியே’ பாடல் கேட்கும் ரகம். அவைகளைவிடவும் முன்பு ராமராஜனுக்குப் போட்டிருந்த பாடல்கள் இப்போதும் பொருத்தமான இடங்களில் ஒலிப்பது சிறப்பு.

வங்கியின் உள் கட்டமைப்பை கவரும் வகையில் அமைத்திருக்கும் கலை இயக்குநருக்கு பாராட்டும், சுமாரான சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் சண்டை இயக்குநருக்கு ஒரு ஷொட்டும் உண்டு.

இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு பெரும் பிரச்சினையாக இருப்பது அவசரத்தனமாக பல்வேறு வழிகளில் கடன் பெற்று அதைத் திருப்பிக் கட்ட முடியாமல், இ.எம்.ஐ. என்னும் அரக்கனிடம் மாட்டிக் கொண்டு முழிப்பதுதான்.

இதைச் சொல்ல வந்த இயக்குநர் மக்களுடைய ஆசைகளும் நியாயமாக இருக்க வேண்டும். அரசுகள் மற்றும் வங்கிகளின் நிபந்தனைகளும் நியாயமாக இருக்க வேண்டும் என்பதை இந்தப் படத்தின் மூலமாகத் தனக்குத் தெரிந்த வகையில், முடிந்தவரையில் சொல்லியிருக்கிறார்.

அளவோடு ஆசைப்படுங்கள் என்பதைச் சொல்லிய இயக்குநர் அதை எப்படி என்பதையும் சொல்லியிருக்க வேண்டும். இந்தப் படத்தில் சொல்லியிருக்கும் கதையின்படி வங்கியும், பில்டரும் திட்டம் போட்டு, ஏமாற்றி வீட்டினை வாங்க வைத்துள்ளனர் என்ற கூற்றே அடிபட்டுப் போகிறது.

வீடு வாங்குவதற்காக எந்த வங்கியும் இப்போது 100 சதவிகித பணத்தையும் கடனாகத் தருவதில்லை. சேலரி ஸ்லிப்பை பார்த்துக் குறிப்பிட்ட சதவிகித பணத்தைத்தான் கடனாகத் தருவார்கள். அதுவும் அவரால் கடனைத் திருப்பிக் கட்ட முடியுமா என்பதை யூகித்துதான் தருவார்கள். அது அவர்களின் உரிமை.

100 சதவிகித கடனில் வீடு வாங்க முனைந்த நாயகன், நாயகியின் திட்டமே தவறானது என்பதை இயக்குநர் இதில் அழுத்தமாகச் சொல்லியிருக்க வேண்டும். 60 சதவிகிதத் தொகையைக் கையில் வைத்துக் கொண்டு, 40 சதவிகிதத் தொகையைக் கடனாக வாங்குவதுதான் சிறந்த திட்டம்.

எப்போதும் வீட்டுக் கடன் தொகைக்கான வட்டி 3 மாதங்களுக்கு ஒரு முறை மாறும் வகையைக் கொண்டது. நிலையான வட்டியைக் கொண்ட முறையும் உள்ளது. ஆனால், இதில் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். அதனால் தன்னால் கடனைத் திருப்பிக் கட்ட முடியுமா.. முடியாதா.. என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு, கணக்குப் போட்டுப் பார்த்துவிட்டுத்தான் யாராக இருந்தாலும் கடன் பெறத் துணிய வேண்டும். இதையும் இயக்குநர் தன் கருத்தாகப் பதிவு செய்திருக்க வேண்டும்.

வங்கிக் கடனை திரும்பக் கேட்பது நியாயமானதுதான். ஏனெனில் வங்கிக் கடனாகக் கொடுப்பது அந்த வங்கியில் டெபாசிட் செய்துள்ள மக்களுடைய பணத்தைத்தான். ஆனால் கொடுத்தக் கடனைத் திருப்பிக் கேட்பதற்கும் ஒரு முறை இருக்கின்றது. இதை எதிர்த்து நாம் போராட நீதிமன்றம் போன்ற வேறு வழிகளும் இருக்கிறது. இதையும் இயக்குநர் சொல்லியிருக்கலாம்.

பில்டர்கள் எல்லாவிதமான பொய்யுரைகளையும் சொல்லித்தான் வீட்டினை நம் தலையில் கட்டுகிறார்கள். அதில் இருக்கும் ஓட்டைகளையும், பிரச்சினைகளையும் முன்பே கேட்டறிந்து பின்பு அதில் இறங்குவதுதான் படித்தவர்களுக்கு சிறப்பு.

சிலர் பத்திரிக்கை விளம்பரங்களையும், கமிஷனுக்கு ஆசைப்பட்டு தூண்டில் போடும் புரோக்கர்களின் வார்த்தைகளையும் நம்பி அவசரமாக வீட்டை வாங்கி பின்பு மாட்டிக் கொண்டு முழிப்பதெல்லாம் வாடிக்கைதான். அடுத்தவர்களைப் பார்த்தாவது நாம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இத்தனை தூரம் படித்தவர்களாக இருப்பவர்களுக்கு உற்றத் துணையாக, அறிவுரை சொல்ல.. நல்ல வழி காட்ட யாருமே சென்னையில் இல்லை என்பதுபோல அவர்கள் எடுக்கு முடிவு, அவசரத்தனமான, அரைவேக்காட்டுத்தனமான முடிவாக இருப்பதால் இது படம் பார்க்கும் யாரையும் பாதிக்கவில்லை என்பதுதான் உண்மை.

படமாகப் பார்க்கப் போனால் வங்கிக்குள் லாக்கர் எங்கேயுள்ளது என்பதைச் சொல்லும் இளைஞனிடம் ஓ.. நீ கொள்ளையடிக்க வந்தியா என்று நிமிடத்தில் ராமராஜன் கண்டு பிடிப்பதும், இத்தனை பேர் வங்கி ஊழியர்களாக இருந்தும் ஒத்தை ஆம்பளையைப் பிடிக்க முடியவில்லை என்று சீன் போடுவதும்.. துப்பாக்கியை அலட்சியமாக டேபிளில் வைத்துவிட்டுப் பேசிக் கொண்டிருக்கும் ராமராஜனிடம் தேமே என்று சமாதானம் பேசும் மேனேஜர் போஸ் வெங்கட்டின் நடிப்பும்,  ராமராஜனின் முந்தைய வாழ்க்கையை பில்டப்பாகக் காட்டுவதும், கிளைமாக்ஸில் போலீஸ் கமிஷனரே அவரை அம்போ என்று தப்பிக்க விடுவதும்.. ராமராஜன் தப்பிச் சென்று மைம் கோபியை கொலை செய்வதும்.. அப்பாடா.. ஐயையோ.. என்று நம்மை மூச்சுமுட்ட வைக்கும் லாஜிக் இல்லா திரைக்கதைகள்..!

வீட்டுக் கடன், இ.எம்.ஐ., வங்கிக் கடன் தொல்லை.. ஏமாற்றும் பில்டர்கள் என்று இப்போதைய சமுதாய பிரச்சினைகளை இந்தப் படம் பேசினாலும் சரியான தீர்வையும், வழிகாட்டுதலையும் சொல்லாமல், நம்முடைய தவறுகளை மூடி மறைத்தும் அரைகுறையாகப் பதிவு செய்திருப்பதாலும் படம் சொல்ல வந்த நீதியும், கிளைமாக்ஸில் செய்திருக்கும் மாபெரும் லாஜிக் ஓட்டையும் படத்தினை முற்றிலுமாகச் சிதைத்துவிட்டது என்றே சொல்லலாம்.

சாமான்யன் – ஸாரி இயக்குநரே..!

RATING : 3 / 5

Our Score