full screen background image

“சிவக்குமார் வந்தா என்ன புடுங்கிருவாரு..?” – நடிகர் ராதாரவியின் காட்டமான கேள்வி..!

“சிவக்குமார் வந்தா என்ன புடுங்கிருவாரு..?” – நடிகர் ராதாரவியின் காட்டமான கேள்வி..!

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்திற்கு அடுத்த மாதம் தேர்தல் அறிவித்திருக்கிறார்கள். வரும் தேர்தலில் தற்போதைய நிர்வாகிகளான ராதாரவியும், சரத்குமாரும் மீண்டும் போட்டியிடப் போவது உறுதி.

அதே நேரத்தில் கட்டிடம் கட்டுவது தொடர்பாகவும், வேறு சில கவுரவப் பிரச்சினைகளுக்காகவும் ராதாரவி, சரத்குமாருடன் மோதும் விஷால் தலைமையிலும் ஒரு அணி நிச்சயம் போட்டியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தில் துவக்கத்தில் இருந்தே நாடக நடிகர்களும் சேர்க்கப்பட்டே வந்தார்கள். இப்போதும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வசிக்கும் நாடக்க் கலைஞர்கள் இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நடிகர் சங்கத்தின் கணக்குப்படி சென்னையில் வசிக்கும் சினிமாவில் நடித்து வரும் நடிகர், நடிகைகளைவிடவும் பிற ஊர்களில் வசிக்கும் நாடக நடிகர் நடிகைகளின் எண்ணிக்கைதான் அதிகம்.

இவர்களெல்லாம் இப்போதும், எப்போதும் ராதாரவியின் பக்கம்தான். ஏனெனில் மிகக் குறைந்த கட்டணத்தில் பல நாடகக் கலைஞர்களை சங்கத்தில் சேர்த்தவர். வருடத்தில் சில நாட்கள் ஊர், ஊராகச் சென்று நாடகக் கலைஞர்களின் கூட்டங்களில் கலந்து கொள்வார். சங்கத்தின் பொதுக்குழுவிற்கு பல்வேறு ஊர்களிலிருந்து வேன் பிடித்தும், பஸ் பிடித்தும்தான் உறுப்பினர்கள் வந்து செல்வார்கள்.

வரும் தேர்தலில் ராதாரவியை எதிர்த்து சிவக்குமார் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிவக்குமார், நாசர், விஷால் கூட்டணிதான் இப்போதைய நிர்வாகிகளை கடுமையாக எதிர்க்கிறதாம்.

இந்த நேரத்தில் கடந்த வாரம் மதுரை வந்த நடிகர் ராதாரவி மதுரை நாடக மன்றத்தில் கூடியிருந்த நாடக நடிகர்களிடம் தனது அணிக்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது அவர் பேசிய சில பேச்சுக்கள் பகீர் ரகம்.. அவற்றை இந்த வாரத்திய ‘நக்கீரன்’ பத்திரிகை வெளியிட்டிருக்கிறது.

அது இங்கே :

“சங்கத் தேர்தலில் சிவக்குமார் நிற்கிறார். ‘ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம் தர்றோம். எங்களுக்கு ஓட்டுப் போடுங்க’ன்னு சிலர் சொல்வதாக புதுக்கோட்டையில் கேள்விப்பட்டேன். பத்தாயிரம் ரூபா வாங்கிட்டு ஓட்டுப் போடுறதா இருந்தா போடு. அப்படி போட்டா உனக்கே நீ சவுக்கடி அடிச்சிக்கிறேன்னு அர்த்தம்.

உங்களுக்குத் தெரியாததல்ல.. 250 படங்களை நான் இழந்திருக்கிறேன். ஏன்னா அங்க இருக்கான் ஆயிரம் கெட்டவனுங்க(சினிமா நடிகர்கள். அவனுங்களால இழப்பு.. உங்களால எனக்கு இழப்பு கெடையாது. உங்களால எனக்கு என்ன இழப்புன்னா கொறைஞ்ச வெலையில உங்களை மெம்பராக்கினதுதான். அதைத்தான் சொல்றானுங்க. ‘ராதாரவி ஊழல் செஞ்சுட்டான்’னு.

ஆமாண்டா ஊழல் பண்ணினாத்தான் நிர்வாகத்துல இருக்க முடியும். நான் பண்ணாத ஊழலா..? இத நான் தைரியமா சொல்றேன். ஏன்னா என் பின்னால ஒரு பெரிய கூட்டம் இருக்கு(நாடக நடிகர்கள்). அதுனால நான் பயப்படுறதே இல்லை.

நான் சண்டை போடாத ஹீரோ எவனாச்சும் தமிழ்ல இருக்கானா இப்போ..? கெடையாது. எல்லா ரவுடிகளிடமும் தகராறு பண்ணியிருப்பேன். ஏன்னா வாய்ப்புக்காக நான் எவன்கிட்டேயும் போனதில்ல. இந்த நாசர் எல்லாம் வாய்ப்புக்காக விஷால்கூட சேர்ந்துக்கிட்டிருக்கான். அந்த மாதிரி வாய்ப்பெல்லாம் எனக்கு தேவையே இல்லடா.

‘ரஜினி படத்துல நடிக்கிறதுக்காக எங்கப்பன் என்னைப் பெத்துப் போடலை’ன்னு நான்தான் சொன்னேன். அத நான் எங்கயோ ஒளிஞ்சிருந்து சொன்ன மாதிரி பத்திரிகைல எழுத வைச்சானுங்க. அட முட்டாளே.. அதை தனியா எங்கேயும் சொல்லலை. ரஜினியை வைச்சுக்கிட்டே அவருகிட்ட சொன்ன வார்த்தை அது.

பூச்சி முருகன்னு ஒருத்தன் ஸ்டே வாங்கிட்டான். சங்கக் கட்டிடத்தை கட்டி முடிச்சிட்டான்னா நாடக நடிகர்களுக்கு ராதாரவி எல்லா உதவியையும் செஞ்சிருவான். அப்புறம் அவனை அசைக்கவே முடியாதுங்கிறனாலதான். தேவரு பெயருல ஒரு சங்கத்தை நடத்துறவன்தான்(நடிகர் கருணாஸ்) தேவர் இனத்துக்கே தலீவரு. அவருக்கே நான் போன் போட்டேன். ‘நீ அருவா எடுத்தாலும் வெட்டும். நான் அருவா எடுத்தாலும் வெட்டும். அருவா செஞ்சவனே பார்த்துக்கிட்டு சும்மா இருக்கான். வாங்குன உனக்கு எதுக்குடா வீரம்..?’ இப்படி நாம கேட்போமில்ல..?

அதனால் என்கிட்ட இந்த மாதிரி மிரட்டுறது.. பயமுறுத்துறது.. சிவக்குமாரு வருவாருங்கிறதெல்லாம் கூடாது. ‘சிவக்குமார் வந்தா என்ன புடிங்கிருவாரு’ன்னு கேட்டேன். எனக்கென்ன பயம்..? நின்னா நின்னுட்டுப் போகட்டும். சங்கமென்ன எங்க அப்பன் வீட்டுச் சொத்தா..? எலெக்சன்ல நிக்கட்டும்டா.. நின்னாத்தானே தெரியும். நாங்க யார்ன்னு..?

சிவக்குமார் வர மாட்டார்ன்னு எனக்கு நம்பிக்கையிருக்கு. அவருக்குத் தெரியாதா இது தலைவலி புடிச்ச இடம்ன்னு.. விஷால்கிட்ட சொல்லுங்கடான்னு அவன் ஆளுங்ககிட்ட ஒரு விஷயத்தைச் சொன்னேன். என்னன்னா, அந்தத் தம்பிக்கு 18 கோடி கடன் இருக்கு. அத முதல்ல தீர்க்கச் சொல்லு. அவன் படத்தை ஓட வைக்கச் சொல்லு. அப்புறம் நடிக்கக் கத்துக்கச் சொல்லு. இதெல்லாம் விட்டுட்டு நடிகர் சங்கம் அது, இதுன்னு உங்க(நாடக நடிகர்கள்) பெருமைகளையெல்லாம் அவனுங்ககிட்ட நான் சொல்றதே இல்லை.

இங்க அவனுங்க வரணும். வந்து சரியா வாங்கிக் கட்டிக்கிட்டுப் போகணும். இவனுங்க சீசன் ஆரம்பிச்சிருச்சுன்னு வைச்சுக்க.. வக்காலி உங்களை மதிக்கவே மாட்டானுங்க. சரச் ஸார் தலைமையில 29 பேரை தேர்ந்தெடுப்போம்..” என்று பேசியுள்ளார் நடிகர் ராதாரவி.

சக கலைஞர்களை இப்படி ஒருமையில்.. அதுவும் சங்கத்தின் செயலாளராக இருப்பவரே பேசுவதையெல்லாம் பார்த்தால், ஆமை புகுந்த வீடும், அரசியல்வாதிகள் புகுந்த சங்கமும் உருப்படாது என்பதைத்தான் காட்டுகிறது..!

நன்றி : நக்கீரன் வார இதழ் – ஏப்ரல் 1-3 

Our Score