full screen background image

கொம்பன் – சினிமா விமர்சனம்

கொம்பன் – சினிமா விமர்சனம்

டாக்டர் கிருஷ்ணசாமி என்னும் அரசியல்வாதி கொளுத்திப் போட்ட வெடியினால் இந்தப் படத்தைப் பார்க்கும் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. ஆனால் டாக்டர் எதிர்பார்த்த காட்சி ஒன்றுகூட படத்தில் இல்லை என்பதுதான் அவருக்கு ஏமாற்றமான செய்தி.

இராமநாதபுரம் மாவட்டத்தில் வீட்டுக்கு வீடு அரிவாளை பெருமைக்குரிய விஷயமாக வைத்திருக்கிறார்கள். அரிவாளை பயன்படுத்தாமலேயே வைத்திருக்கும் ஆண்களை இளக்காரமாகப் பார்க்கும் ஒரு சமூகக் கலாச்சாரமும் இந்தப் பகுதி மக்களிடையே இருக்கும் குணம். இது வழி, வழியாக வந்து கொண்டேயிருக்கிறது..

இப்படிப்பட்ட ஒரு பிரதேசத்தில் மூன்று கிராமங்களைச் சேர்ந்தே ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களுக்குள் நடக்கும் அக்கப்போர் மற்றும் சண்டை சச்சரவுகள்தான் படமே..!

பெத்த தாயையும், பொறந்த மண்ணையும் எவன் கேவலப்படுத்தினாலும் தூக்கிப் போட்டு மிதிப்பேன் என்று சொல்லும் கொம்பையா பாண்டியன் என்னும் கார்த்திக்கு முன் கோபம் கூடவே பொறந்தது. சில வார்த்தைகளை நல்லவிதமாக சொல்லிவிட்டு பதில் மரியாதை அதேபோல கிடைக்காவிட்டால் உதைத்து ‘கச்சேரி’யைத் துவக்குவது இவரது வழக்கம்.

இப்படியாகப்பட்டு பல சண்டைகளில் பங்கெடுத்து தனது வீரத்தைக் காட்டியிருப்பதால் குளத்தூர் முன்சீப் கோர்ட்டில் இவர் மீது பல வழக்குகள் பெண்டிங். அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்று இன்னமும் அடங்காத காளையாக தனது தாய் மாமன் தம்பி ராமையாவுடனும், ஊர்க்கார பெரிசு வேல ராமமூர்த்தியுடனும் சுற்றி வருகிறார் கார்த்தி.

மூன்று ஊர்களுக்கும் பொதுவான அரச நாட்டின் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வர ஆசைப்படுகிறார் மாரிமுத்து. இவரது மாமனாரான குண்டன் ராமசாமி என்னும் சூப்பர் சுப்பராயன் அநியாயமாக ஊர் நிலங்களை மிரட்டி, உருட்டி வாங்கி சொத்து சேகரித்து வைத்திருக்கும் ஒரு மகா திருடன். தனது மருமகனை பஞ்சாயத்து தலைவராக்க பல வேலைகளைச் செய்கிறார். ஆனால் அனைத்தும் கார்த்தியால் முறியடிக்கப்படுகிறது. போதாக்குறைக்கு குண்டன் ராமசாமியின் மகனையும் அடித்துவிட்டு அதன் பலனையும் அறுவடை செய்யக் காத்திருக்கிறார் கார்த்தி.

இந்த நேரத்தில் பாழாய்ப் போன காதலும் அவருக்கு குறுக்கே வருகிறது. ரதி போன்ற அழகுடன் பார்த்தவுடனேயே தூக்கிச் செல்ல வேண்டும் என்று நினைக்க வைக்கும் தோற்றத்துடனும் இருக்கும் லட்சுமி மேனனை பார்த்தவுடன் டிபிகல் சினிமா ஹீரோவாகிறார் கார்த்தி.

இவரது காதலை அரசல்புரசலாகத் தெரிந்து கொண்ட அண்ணன் கருணாஸ் இவர்களது காதலை வாழ வைக்க பெண் கேட்டுச் செல்கிறார். பெண்ணின் அப்பாவான முத்தையா என்னும் ராஜ்கிரண் தன்னுடைய ஒரே பெண் என்பதால் மாப்பிள்ளையை பற்றி தீர விசாரித்த பின்புதான் கல்யாணம் என்று சொல்லி தானே களமிறங்கி சிஐடி வேலை பார்க்கிறார்.

நாலு தெருவும், நாப்பது மரங்களும் மட்டுமே இருக்கும் அந்த ஊரில் வருங்கால மாமனாரின் இந்த விசாரிப்பு கார்த்தியின் காதுகளுக்குச் செல்கிறது. இதனை மரியாதைக் குறைவாகவே எடுத்துக் கொள்கிறார் கார்த்தி. ஆனாலும் கல்யாணம் கச்சிதமாக நடக்கிறது. அன்றைக்கும் மாப்பிள்ளை கார்த்திக்கு மாமனார் மீது மரியாதை இல்லாமலேயே இருக்கிறது.  கல்யாணத்திற்கு பின்பு மாமனார் இவர்கள் வீட்டுக்கே வந்துவிட இதுவும் கார்த்திக்கு பிடிக்காமல் போய் குத்தலும், குடைச்சலுமாக குடும்பம் நடத்துகிறார்.

இந்த நேரத்தில் கார்த்திக்கும்,  ராஜ்கிரணுக்கும் வீட்டில் நடக்கும் ஒரு அக்கப்போர் வாய்ச்சண்டையில் இருந்து தாவி கைகலப்பாகிறது. மாமனாரின் மண்டையை பதம் பார்த்துவிடுகிறார் மாப்பிள்ளை. இதனால் கோபித்துக் கொள்ளும் அம்மா கோவை சரளா மருமகள், ராஜ்கிரணுடன் அவர்களது ஊருக்கே போய்விடுகிறார்.

இடையில் லட்சுமியையும், ராஜ்கிரணையும் குண்டன் ராமசாமியின் ஆட்கள் தாக்க.. அவர்களை பதிலுக்குத் தாக்கிவிட்டு தப்பிக்கிறார் ராஜ்கிரண். இந்த வழக்கில் ராஜ்கிரண் ஜெயிலுக்கு போக அங்கேயே அவரை தீர்த்துக் கட்ட ஏற்பாடு செய்கிறார் குண்டன் ராமசாமி.

இப்போது மாமனார் தன் மீது வைத்திருக்கும் பாசத்தின் உண்மைத்தனம் அறிந்து நெகிழ்ந்துபோகும், மருமகன் கார்த்தி மாமனாரை காப்பாற்றத் துடிக்கிறார். செய்தாரா இல்லையா என்பதுதான் மீதிக் கதை.

ஒரு மாமனாருக்கும், ஒரு மருமகனுக்கும் இடையில் நடக்கும் பனிப்போர்தான் படத்தின் மையக்கரு. டாக்டர் கிருஷ்ணசாமி கவலைப்பட்டதுபோல படத்தில் எந்த காட்சியும் இல்லை. இரண்டு சமூகத்தினரின் கதையும் இல்லை. ஒருவேளை இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு மாமனார்-மருமகன் மோதலில் இருக்கும் வீடுகள் சிலவற்றில் அமைதி திரும்பலாம்.

இந்தப் படத்தை பார்க்காமலேயே படத்தின் வசனங்கள் மற்றும் காட்சிகளையெல்லாம் வெளியில் சொல்லி ஒரு பரபரப்பை ஊட்டிய கிருஷ்ணசாமி இந்தப் படத்தை இந்நேரம் பார்த்திருப்பார். என்ன நினைத்திருப்பாரோ தெரியாது.. ஆனால் நிச்சயம் அவரது மாமனாரை ஒரு நிமிடமாவது நினைத்துப் பார்த்திருப்பார் என்று நினைக்கிறோம்.

கேரக்டர் ஸ்கெட்ச்சுகளை மிகக் கவனமாகக் கையாண்டு உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் முத்தையா. தந்தையில்லாத.. தந்தை அருமை தெரியாமல் தாயையும் மதிக்கத் தெரியாமலேயே வளர்ந்து விட்ட மகன் கார்த்தி. தன்னை எதிர்த்து ஊரில் யாரும் பேசத் தயங்கும் நேரத்தில் தான் எதிர்ப்பேச்சு பேச முடியாத சங்கடத்தில் இருப்பதால் காரணமேயில்லாமல் மாமனாரின் மீது வன்மம் கொள்ளும் கேரக்டர் கார்த்தியுடையது.

அசப்பில் பருத்தி வீரனை ஞாபகப்படுத்தினாலும் அதனில் இருந்தும் சிறிது மாறியிருக்கிறார். தனது ஊர்ப் பெருமையையும், தனக்கான மரியாதையையும் கேட்டு வாங்கும் குணமுடையவர்.. கோர்ட்டில் தனது பங்காளிகளுக்காக நீதிபதியிடம் முன்பே பேசி வைத்து வழக்கை தள்ளி வைக்கச் சொல்லும் அளவுக்கு வளைந்து கொடுத்து போகவும் தயாராகவே இருக்கிறார்.

லட்சுமியை பார்த்தவுடன் காதல் கொள்ளும் இளைஞனும், இன்னமும் முரட்டுத்தனத்தைவிடாமலும், புரிந்து கொள்ளாத குணத்துடன் மூர்க்கத்தைக் காட்டும் கொம்பனுமாக வாழ்ந்திருக்கிறார் கார்த்தி. அவரது இயல்பான ஏற்ற இறங்க மாடுலேஷனும் அவ்வப்போது களத்தில் குதித்து அவரை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறது.

இவருடன் ஆக்ரோஷமாக மல்லுகட்டாமல் பொண்ணைக் கொடுத்திருப்பதால் பக்குவமாக அவளது குடும்பத்தைப் பாதுகாக்கத் துடிக்கும் மாமனார் ராஜ்கிரணும் வாழ்ந்திருக்கிறார். ‘மூன்றரை அடி டன் உடம்பு’ என்று தன்னை மாப்பிள்ளை கிண்டல் செய்வதை கேட்டும் கண்டு கொள்ளாமல் போய் வருவதை சகஜமாக ஏற்றுக் கொண்டவர்.. தன் மகளை தாக்கியதைக் கண்டவுடன் மாப்பிள்ளையை அடிக்கப் பாயும் அந்த ரணகளத்தில் தியேட்டர் மரண அமைதியைக் காட்டியது. இப்படியொரு மாமனார் கிடைக்க வேண்டும் என்று நினைக்குமளவுக்கு ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறார் ராஜ்கிரண்.  

பார்த்தவுடன் காதல் வெறியைக் கிளப்பிவிடும் அளவுக்கு அழகியான லட்சுமி மேனன் இதில் இன்னும் கொஞ்சம் மெருகேறியிருக்கிறார். ‘பை பை’ போன்ற பாடல்கள் இதில் இல்லையென்றாலும் இருக்கின்ற டூயட்டுகளிலேயே பாவாடை, தாவணியில் சொக்க வைக்கிறார். கார்த்தியுடனான நெருக்கத்தில் கொஞ்சம் ஜில்.. ஜில்லைக் கூட்டியிருக்கிறார்.

சப்போர்ட்டிங் கலகலப்புக்கு தம்பி ராமையாவும், எடுத்தெரிந்து பேசும் மகனை விட்டுக் கொடுக்காமலும், அதே சமயம் கேள்வி மேல் கேட்கும் அம்மாவாக கோவை சரளா பின்னியிருக்கிறார்.  ராஜ்கிரணுடன் லட்சுமி அவர் ஊருக்கே கிளம்பியவுடன் தானும் செல்வதாகச் சொல்லி ஒரு வீர வசனத்தை உச்சரித்துவிட்டுப் போகும் அழகே.. அழகு..!

குண்டன் ராமசாமியாக சூப்பர் சுப்பாராயன் பயமுறுத்துகிறார். போதாக்குறைக்கு அவரது மகன்கள் இருவருமே பயங்கரமாக பயமுறுத்தியிருக்கிறார்கள். கிளைமாக்ஸில் இவர்களது அபார அட்டூழியத்துடன் ராஜ்கிரண் கருப்பசாமி வேடத்தில் ஊரைச் சுற்றி வர ஓடி வரும்போதும் அந்த அலற வைக்கும் பின்னணி இசையுடன் இவர்களது மோதலும் கலந்து கடைசி 25 நிமிடங்கள் படம் பரபர ஓட்டம்தான்..!

இவரது உயிரை எடுக்க குண்டன் தயாராய் இருக்க.. கேட்டதைக் கொடுக்கும் கருப்பசாமி வேடத்தில் இருக்கும் ராஜ்கிரண் ‘என் உசிர்தான வேணும். வந்து எடுத்துக்க..’ என்று சொல்லி கையை விரித்துக் காட்டி நிற்கும் காட்சியும், தண்ணீர்பட்டவுடன் பட்டென்று கருப்பசாமி நினைவுக்கு வந்து ராஜ்கிரண் ஈட்டியாய் பாய்ந்து செல்லும் காட்சியும் அபாரமான இயக்கம்..!

இதில்லாமல் காட்சிகளை வகைப்படுத்தியிருப்பதில் இயக்குநரின் பங்களிப்பை பாராட்டியே தீர வேண்டும். முத்தையாவின் அறிமுகக் காட்சியில் குல தெய்வக் கோவில் வழிபாட்டிற்கு அழைக்கும்போது, ‘அங்கே சாதியைத்தான் முன் நிறுத்துகிறீர்கள். நான் வர மாட்டேன்’ என்று மறுக்கும் காட்சியில் இவரது கதாபாத்திரச் சிறப்பு தெரிகிறது.

லட்சுமி ராஜ்கிரணுடன் ஊர் திரும்பிய பிறகு வீடு தேடி வரும் கார்த்தியை பற்றி லட்சுமி மேன்ன் ராஜ்கிரணுடன் பேசும்பேச்செல்லாம் பக்குவமான ஒரு மனைவியை படம் பிடித்துக் காட்டுவதை போல இருந்தது. இவர்களது சந்தை சண்டையை இந்தக் காட்சியின் இடையூடாக காட்டி திரைக்கதையின் வேகத்தைக் கூட்டியிருப்பதில் இயக்குநர் திரைக்கதை ஆக்கத் திறமையும் தெளிவாகிறது.

பொதுவாக தமிழ்ச் சினிமாவில் முதலிரவு காட்சியை மட்டும் ரசனையோடு படமாக்கித் தொலைவார்கள். ஆனால் இதில் இரண்டாவது நாள்தான் நடப்பதாக காட்சிப்படுத்தி வித்தியாசப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

வேல்ராஜின் அபாரமான ஒளிப்பதிவிற்கு அந்த கிளைமாக்ஸ் காட்சியே ஒரு சாட்சி. அந்த மண்ணின் மனம் மாறாமல், கலாச்சாரம் குறையாமல் கேமிராவில் படம் பிடித்திருப்பதெல்லாம் அந்த ஊரின் அழகைத்தான்..!

ஜி.வி.பிரகாஷின் இசையில் சந்தேகமேயில்லாமல் ‘கருப்பு நிறத்தழகி’ பாடல் சூப்பர்ஹிட். மேலும் ‘கம்பிக்கார வேட்டி’யும், ‘அப்பப்பா’ பாடலும் இன்னொரு பக்கம் ஒரு முறையேனும் கேட்க வைத்திருக்கின்றன. கிளைமாக்ஸ் காட்சியில் பின்னணி இசை அபாரம். அந்தக் காட்சியை தடதடக்க வைக்கும் அளவுக்கு கொண்டு போயிருப்பது ஜி.வி.பிரகாஷ்தான்.

இது இயக்குநர் முத்தையா வாழ்ந்து அனுபவித்த கதையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. வசனங்கள் அனைத்துமே அந்த மண்ணில் இருந்து சுரண்டி எடுக்கப்பட்டவையாகவே இருக்கின்றன. உன் மண்ணில் எது இருக்கிறதோ அதைத்தான் உன்னால் எடுக்க முடியும் என்பார்கள். அது போலவே யதார்த்தவாதமாக மனம் முழுவதும் ஒரு மூர்க்கத்தனத்தை தனக்குள் வைத்திருக்கும் ஒரு கூட்டத்தின் கதையை தோராயமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

இதில் நமக்கு இருக்கும் ஒரேயொரு வருத்தம்.. படத்தின் ஹீரோவான கொம்பன், தான் செய்யும் வன்முறை சார்ந்த செயல்கள் அனைத்துமே தவறானவை என்று ஒரு நொடிகூட நினைத்துப் பார்க்காத அளவுக்கு இருக்கும் திரைக்கதையும், வசனங்களும்தான். படத்தின் இறுதியிலாவது அது போன்ற காட்சிகள் வரும் என்று எதிர்பார்த்து ஏமாந்துவிட்டோம். இப்படியொரு சமூகம் தன்னை வருத்திக் கொண்டு தனது அடுத்த தலைமுறையையும் பாழ்படுத்தி வருகிறது என்பதை இயக்குநர் அழுத்தந்திருத்தமாகச் சொல்லியிருக்க வேண்டும்.  வன்முறையை எதற்காகவும், எப்படியும், யார் பயன்படுத்தினாலும் அது பயங்கரம்தான். இரண்டு பக்கமும பதம் பார்க்காமல் விடாது.

முன்னதான இவரது படமான ‘குட்டிப்புலி’ மகன்-அம்மா பாசக் கதை. இதில் அதே சமூகத்தைச் சேர்ந்த மாமனார்-மருமகன் பாசப் போராட்டம். இனிமேல் இது போன்று சமூகம் சார்ந்த கதைகளை முன்னிறுத்தாமல் நகரத்திற்கு வந்து எடுக்கப்படாமல் இருக்கின்ற கதைகளை எந்தவித அடையாளமும் இல்லாமல் எடுத்துக் காட்டி புகழடையும்படி இயக்குநரைக் கேட்டுக் கொள்கிறோம்.

எப்படியிருந்தாலும், இந்தக் கொம்பன் அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கிறான் என்பதில் சந்தேகமில்லை..!

Our Score