வரும் பிப்ரவரி 12-ம் தேதி திரைக்கு வரவிருக்கும், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நடிகர் சித்தார்த் தயாரித்திருக்கும் ‘ஜில் ஜங் ஜக்’ திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.
முன்னதாக படத்தின் முன்னோட்டமும், பாடல்களும் திரையிடப்பட்டன. அவை மிகச் சிறந்த தொழில் நுட்ப நேர்த்தியோடு, இதுவரை பார்த்திராத வகையில்.. மிக வித்தியாசமாக உள்ளம் கவரும் வகையில் இருந்தன. ஏற்கெனவே ஹிட் ஆகிவிட்ட பாடல்கள் மிக சிறப்பாக படமாக்கப்பட்டு இருந்தன.
“எங்கள் படக் குழுவின் யூத் ஐக்கான்” என்ற அடைமொழியோடு சித்தார்த்தால் பேச அழைக்கப்பட்ட நடிகர் ‘டத்தோ’ ராதாரவி வழக்கம் போல தனது கலகலப்பான பேச்சால் விழாவை நகைச்சுவையால் அதிர வைத்தார்.
“பொதுவா நான் எதுக்கும் பயப்படாதவன். உங்களுக்கே நல்லா தெரியும். ஆனால் இந்த பெருமழையில் ஏற்பட்ட வெள்ளத்தைப் பார்த்து ரொம்ப பயந்துட்டேன். நம்ம சித்தார்த் இந்தப் பெருமழையில், எந்த விளம்பர வெளிச்ச எதிர்ப்பார்ப்பும் இல்லாமல், கடலூருக்கு தனி ஆளா போய் அவ்வளவு நிவாரண உதவிகள் செய்திருக்கிறார். அந்த மனசு யாருக்கு வரும்..? அதற்காக அவரை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.
நான், சித்தார்த்தை ஏதோ தெலுங்குப் பையன்னே நினைச்சுட்டு இருந்தேன். ஆனா அவரு நம்ம ஆளு என்று இப்போதான் தெரிந்தது. அதிலும் எனக்கு ரொம்ப சந்தோசம்.
பொதுவா நான் வருஷா வருஷம் ஏதாவது ஒரு நல்ல படத்துக்கு சம்பளம் வாங்காமல் வேலை செய்யறது வழக்கம். இந்தப் படத்துக்கு அப்படி செய்யலாம்னு பார்த்தேன். ஆனால் தம்பி சித்தார்த் வற்புறுத்தி சம்பளத்தை கைல கொடுத்துட்டார்.
இந்தப் படத்துல கதாநாயகியே இல்லை என்பது ஒரு குறையே இல்லை. ஹீரோயின் இல்லாமலேயே படம் பிரமாதமா வந்திருக்கு. இப்பல்லாம் கதாநாயகி இருந்தால்தான் பிரச்னையே. ஏன்னா, இந்த மாதிரி பிரஸ் மீட்டுக்கு கூப்பிடனும். அது வந்து கால் மேல கால் போட்டு உட்காரும். அதை ஒருத்தர் விவகாரமா போட்டோ புடிச்சு போடுவார். அதைப் பார்த்து மகளிர் சங்கங்கள் கொதிக்கும். கடைசியில சித்தார்த் வீட்டு வாசல்ல வந்து கோஷம் போடுவாங்க. தேவையா இது..? இப்ப அந்த பிரச்னை எல்லாம் வராது பாருங்க. அதுக்குச் சொல்றேன்..
இந்த படத்துல என்னை ஒரு பாட்டு பாட வச்சுட்டாங்க. நான் பாடலை. சும்மா படிச்சேன். அவ்ளோதான்.. அதை தம்பி விஷால் சந்திரசேகர் பாட்டா ஆக்கிட்டாரு.. இப்போ அதை பார்த்துட்டு ஒருத்தன் பம்பாய்ல இருந்து எனக்கு போன் பண்ணி, ‘யுவர் வாய்ஸ் ஈஸ் சோ சூப்பர். எனக்கு ஒரு பாட்டு பாடிக் கொடுங்க’ன்னு கூப்பிடறான். நானும் பாடப் போறேன். எங்க குடும்பத்துல எல்லாருக்கும் குரல் எப்படி இருக்கும்னு உங்க எல்லாருக்கும் தெரியும். ஆனா என்னையே இந்த படத்து ஆளுங்க, பாடகரா ஆக்கிட்டாங்க.
இதுவரைக்கும் 310 படங்கள்ல நடிச்சுட்டேன். 35 வருஷத்துக்கும் மேல நடிச்சுட்டு இருக்கேன். இப்போகூட ஓடிக்கிட்டு இருக்கும் ‘இறுதிச் சுற்று’, ‘அரண்மனை-2’ படங்கள்ல என்னோட நடிப்பை எல்லாரும் பாராட்டுறாங்க.
ஆனா இந்த ‘ஜில் ஜங் ஜக்’ படம் வந்த பிறகு நான் நடிச்சதுலேயே பெஸ்ட் படம் இதுதான்னு எல்லாரும் சொல்வாங்க. அந்த அளவுக்கு இது சிறப்பான படம்..” என்றார்.
அதையும்தான் பார்த்திருவோம்..!










