மெகா இயக்குநர் ஷங்கர் இயக்கி 1994-ம் ஆண்டு வெளிவந்த ‘காதலன்’ படத்தில் ‘வைகைப் புயல்’ வடிவேலு பேசும் ‘ஜில் ஜங் ஜக்’ வசனம், அன்று இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதே ஷங்கரின் இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளிவந்த ‘பாய்ஸ்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சித்தார்த், இப்போது நடிக்கும் ஒரு படத்துக்கு ‘ஜில் ஜங் சக்’ என்று பெயர் வைத்திருப்பது எவ்வளவு பொருத்தம்..?
அதிலும் இந்த 2016-ம் ஆண்டு வெளியாகும் அந்தப் படத்தின் தயாரிப்பாளரே சித்தார்த்துதான் என்பது இன்னும் அழகு.
எட்டாக்கி எண்டர்டெயின்மென்ட் சார்பில் சித்தார்த் தயாரித்திருக்கும் இந்த ‘ஜில் ஜங் ஜக்’ படத்தில் அவரை கதாநாயகனாக நடித்திருக்கிறார். அவருடன் அவினாஷ் ரகுதேவன், சனந்த் ஆகிய இரு இளைஞர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
படத்தில் இடம் பெறும் நாஞ்’ஜில்’ சிவாஜி, ‘ஜங்’குலிங்கம், ஜாகுவார் ‘ஜக்’ ஆகிய மூன்று கதாபாத்திரப் பெயர்களின் சுருக்கமே இந்த ‘ஜில் ஜங் ஜக்’. இந்தப் படத்தில் கதாநாயகியே இல்லை என்பது குறிப்பிடத்தக்க, வித்தியாசமான விஷயம்.
இவர்களுடன் ‘ரோலெக்ஸ் ராவுத்தர்’ என்ற வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ‘டத்தோ’ ராதாரவி. தவிர ‘ஷூட் த குருவி’ என்ற பாடலின் சில வரிகளை ராதாரவி பாடியும் இருக்கிறார். படத்தின் பாடல்களை சித்தார்த், இசை அமைப்பாளர்கள் அனிருந், சந்தோஷ் நாராயணன், நடிகை ஆண்ட்ரியா என்று பல பிரபலங்கள் பாடி இருக்கிறார்கள்.
இசை – விஷால் சந்திரசேகர். ஒளிப்பதிவு – ஷ்ரேயாஸ் கிருஷ்ணா, படத் தொகுப்பு – கர்ட்ஸ் ஸ்நீடர். பல குறும் படங்களை இயக்கிய தீரஜ் வைத்தி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரும், பல முன்னணி நடிகர்கள் வெளியிட்ட இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களும் யூ டியூபில் லைக்குகளை அள்ளிக் குவித்துக் கொண்டு இருக்கின்றன.









