தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணிக்கு ஆதரவாக நாடக நடிகர்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பொன்வண்ணன், கருணாஸ், சரவணன், அஜய்ரத்னம், மனோபாலா உள்ளிட்டோர் நேற்று சேலம் வந்தனர்.
அவர்கள், சேலத்தில் உள்ள நாடக நடிகர் சங்க உறுப்பினர்களைச் சந்தித்து விஷால் அணிக்கு ஆதரவு தரும்படி கோரினர்.
அப்போது நடிகர் பிரகாஷ்ராஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.
அவர் பேசும்போது, “யாரையும் குறை கூற நான் இங்கு வரவில்லை. நடிகர் சங்கத் தேர்தல் மூலம் மாற்றம் வர வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால்தான் இந்த அணியில் இணைந்திருக்கிறேன்..
நடிகர் சங்கத் தேர்தலில் புரட்சி ஆரம்பிக்க இவ்வளவு ஆண்டுகள் ஆகியுள்ளது. மேலும், மாற்றத்துக்கான தேவையும் இப்போது ஏற்பட்டுள்ளது.
சரத்குமார் எனக்கும் நண்பர்தான். ஆனால், இப்போது அவர் தவறான இடத்தில் உள்ளார். எதிரணியினர் நடிகர் சங்கத்தில் அரசியல், சாதியைப் புகுத்துகின்றனர். கலைஞர்களுக்கு ஜாதி, மத பாகுபாடு கிடையாது.
‘தேர்தலுக்குப் பிறகு ஒற்றுமை இருக்காது’ என சரத்குமார் கூறுவது அநாகரிகமானது. நமக்குள் ஒற்றுமை இல்லாமல் வாழ முடியாது. மேலும், தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்கள் பொறுப்பில்லாமல் பேசக் கூடாது. அதேபோல, சங்க உறுப்பினர்களை பயமுறுத்தவும் கூடாது.
நடிகர் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு கேள்வி கேட்கும் உரிமை உண்டு. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இளைஞர்கள் கேள்வி கேட்கின்றனர். அப்படியானால், ஏதோ நடக்கிறது என்றுதானே அர்த்தம்..?
நான் யாருக்கும் பயப்படவில்லை. எனக்குப் பதவி வேண்டாம். ஆனால், நடிகர் சங்கத்தில் தவறு செய்தால் தட்டிக் கேட்பேன். இந்தத் தேர்தல், நடிகர் சங்கத்தை மாற்றக் கூடியது. அனைவரும் ஒன்று சேர்ந்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்..” என்றார்.