நடிகர் நாசர் தான் படித்த அடையார் திரைப்படக் கல்லூரி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர். அக்கல்லூரி மாணவர்கள் மீது அக்கறை கொண்டு அங்கிருந்து வெளியில் வரும் இளைஞர்களை ஊக்குவிப்பவர். வருபவர்களையெல்லாம் “கமர்ஷியல் வட்டத்துக்குள்ள சிக்கிக்காதீங்க.. மொதல்ல உங்க பேரைச் சொல்ற மாதிரி தனித்துவமா ஒரு படம் எடுத்துக் காட்டுங்க.. மக்கள் விரும்புவாங்க.. விரும்ப வைங்க..” என்று கிளிப்பிள்ளைக்கு பேச்சு சொல்லிக் கொடுப்பது போல சொல்பவர்.
அதே சமயம் அந்தக் கல்லூரியின் இன்றைய நிலைமை பற்றியும் கவலை கொண்டுள்ளவர் நாசர். பல ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த அந்தக் கல்லூரி இன்றைக்கு மிகக் குறுகிய நிலப்பகுதிக்குள் அடக்கப்பட்டுவிட்டது. சுத்தம், சுகாதாரமெ்ல்லாம் இல்லவே இல்லை. அங்கேயிருக்கும் ஹாஸ்டலை பார்த்தால் ஏதோவொரு குக்கிராமத்தில் இருக்கும் பஞ்சாயத்து போர்டு ஸ்கூலுக்கானதாக இருக்கும்..
சென்ற மார்ச் 22-ம் தேதியன்று தான் படித்த திரைப்படக் கல்லூரிக்கு தற்செயலாகச் சென்ற நடிகர் நாசர். அங்கே படித்து வரும் மாணவர்களுடன் கலந்துரையாடியிருக்கிறார். “இங்கேயிருந்து வெளியில் வரும் மாணவர்கள் பெயர் சொல்ற மாதிரியே படங்களை இயக்குறதில்லை. அவர்களுடைய படங்கள் பேசப்படுவதுமில்லை.. அப்புறம் என்னதான் இங்க படிக்கிறீங்க..?” என்று உரிமையோடு கோபித்திருக்கிறார்.
ஹாஸ்டலை சுற்றிப் பார்த்தவர் அங்கேயிருந்த டாய்லெட்டுகளை பார்த்துவிட்டு இன்னும் அதிகமாகக் கோபப்பட்டிருக்கிறார். “நீங்க யூஸ் பண்ற டாய்லெட்டுகளையே சுத்தமா வைச்சுக்கத் தெரியலைன்னா நீங்கெள்லாம் என்ன செஞ்சு என்ன புண்ணியம்..?” என்று கேட்டவர் சட்டென்று அங்கேயிருந்து விளக்குமாற்றை எடுத்து டாய்லெட்டுகளை கழுவத் தொடங்கிவிட்டாராம்..
மாணவர்கள் பதறிப் போய் தடுத்தும் தன்னால் முடிந்த அளவுக்கு பல டாய்லெட்டுகளை கழுவிவிட்டுத்தான் திரும்பினாராம் நாசர். இதைப் பார்த்து சில மாணவர்களும் பதறியடித்து தாங்களும் இந்த கோதாவில் இறங்கி டாய்லெட்டுகளை கிளீன் செய்தார்களாம்..!
ஏதோ, அன்றைக்கு நாசரின் புண்ணியத்தில் திரைப்படக் கல்லூரி ஹாஸ்டல் டாய்லெட்டுகள் அனைத்தும் கிளீனாம்..!
எடுத்துக்காட்டாய் வாழ வேண்டியவர்கள் இல்லையெனில் நாட்டில் ஒரு மாற்றமும் நடக்காது என்பார்கள். தான் படித்த கல்லூரிக்கும், கோடம்பாக்கத்திற்கும் பெருமை சேர்ப்பவர் நடிகர் நாசர் என்பதில் சந்தேகமில்லை.