தமிழ் ஈழத்தில் விடுதலைபுலிகள் தனி அரசு நடத்திக் கொண்டிருந்தபோது அதன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் ஈழத்தைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான இசைப்பிரியா. தனது இனிமையான குரலினால் பல லட்சம் தமிழ் மக்களை ரசிகர்களாகக் கொண்டிருந்தார்.
முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதி போரில் சிங்கள ராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இசைப்பிரியா, ராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார்.
இவரை உயிருடன் பிடித்த வீடியோவும், சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இருந்த வீடியோவும் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்களை மிகுந்த துயரத்துக்குள்ளாக்கியது.
இப்போது இவருடைய இந்த சோக வாழ்க்கையை ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற பெயரில் தமிழில் சினிமாவாக எடுத்து வருகிறார்கள்.
பல கன்னட மொழி படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கணேசன் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜாதான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பூஜையின்போது மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, புலவர் புலமைப்பித்தன் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்தப் படத்தில் அனு என்ற புதுமுகம் இசைப்பிரியவாக நடித்து வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்புகள் வேகமாக நடந்து வரும் நிலையில் என் மகள் கதையை சினிமாவாக எடுக்க கூடாது என்று லண்டனில் வசிக்கும் இசைப்பிரியாவின் தாய் வேதரஞ்சனியும், அக்கா தர்ஷினியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது பற்றி இசைப்பிரியாவின் தாய் வேதரஞ்சனி அளித்திருக்கும் பேட்டியில்.. “இசைப்பிரியா எங்கள் குடும்பத்தில் செல்லப் பெண். கடைசிப் பெண். அவள் ஒரு போராளியாக வளர்ந்தாள். வாழ்ந்தாள். அவளது கொடூர மரணத்தின் சோகத்தில் இருந்து நாங்கள் இன்னமும் விடுபடவில்லை. இந்த நிலையில் அவளது கதையை சினிமாவாக எடுப்பதாக கேள்விப்பட்டோம். இணையத்தில் அது தொடர்பாக தேடியபோது அந்தப் படத்தின் விளம்பரங்கள் ஆபாசமாகவும், அரைகுறை உடையுடன் இருந்தது. இது எங்களை மேலும் வருத்தப்பட வைக்கிறது. தயவு எங்கள் இசைப்ரியாவின் வாழ்க்கையை கொச்சைப்படுத்தாதீர்கள். அவளை இன்னொரு முறை பலாத்காரம் செய்யாதீர்கள், இசைப்பிரியா பற்றி படம் எடுப்பதை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் சட்டரீதியான நடவடிக்கை எடுப்போம்…” என்று கூறியிருக்கிறார்.
ஆனால் படத்தின் இயக்குநர் கணேசனோ, “இசைப்பிரியாவை களங்கப்படுத்தும் ஒரு காட்சிகூட படத்தில் கிடையாது. போர்க்களத்தில் நடந்த ஆதாரத்துடன் வெளியான உண்மையைத்தான் படமாக எடுக்கிறோம். இலங்கையில் நடந்த கொடூரத்தை தமிழ் மக்கள் உணர வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் படத்தை மிகுந்த கஷ்டத்துக்கிடையில் எடுத்து வருகிறோம்..” என்கிறார்.
சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினரின் அனுமதியில்லாமல் ஒருவரின் வாழ்க்கைக் கதையைப் படமாக்க முடியாது என்பது இவர்களுக்குத் தெரியாததல்ல. ஒரு வரலாற்று ஆவணத்தை பதிவு செய்யும்போது அதனை மிகக் கவனமாக செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட தயாரித்து தரப்பினர் இசைபிரியாவின் குடும்பத்தினரின் ஆதரவையும், அனுமதியையும் பெறுவது மிக அவசியம்..