மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக மோகன்லால் மீண்டும் தேர்வாகிறார்..!

மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக மோகன்லால் மீண்டும் தேர்வாகிறார்..!

மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான ‘அம்மா’ அமைப்பின் தலைவராக மீண்டும் மோகன்லால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

மலையாள சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் அனைவரும் ‘அம்மா’ என்ற அமைப்பின் கீழ் செயல்படுகிறார்கள். இந்த அமைப்பிற்கு 3 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடப்பது வழக்கம்.

அந்த வகையில் கடந்த 2018-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம் இந்தாண்டு முடிவடைவதால் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் போட்டியிடுபவர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இதில் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவரான மோகன்லாலும், பொதுச் செயலாளர் பதவிக்கு தற்போதைய செயலாளரான எடவலா பாபுவும் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

இந்தப் பதவிக்கு வேறு யாரும் போட்டியிடாததால் இவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இதேபோல் பொருளாளர் பதவிக்கு சித்திக்கும், இணைச் செயலாளர் பதவிக்கு ஜெயசூர்யாவும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

ஆனால், மற்றைய பதவிகளுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

2 துணைத் தலைவர்கள் மற்றும் 11 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்குத்தான் அதிகப்படியான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

நடிகர் ஷம்மி திலகன் மூன்று பதவிகளுக்கு வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். ஆனால் மூன்றிலுமே அவர் கையெழுத்து இல்லாததால் அவரது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல் நடிகர் உன்னி சிவபாலின் வேட்பு மனு பூர்த்தி செய்யப்படாததால் நிராகரிக்கப்பட்டது.

நடிகைகள் ஆஷா சரத்தும், ஸ்வேதா மேனனும் துணைத் தலைவர்கள் பதவிக்குப் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர். இதே பதவிக்கு முகேஷ், ஜெகதீஷ், மணியம்பிள்ளை ராஜூ ஆகிய மூன்று பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

ஆனால் இந்த முறை இந்தத் துணைத் தலைவர் பதவிகளுக்கு பெண்களையே தேர்ந்தெடுக்கலாம் என்று மூத்த நடிகர்கள் மற்றும் நிர்வாகிகள் எண்ணுவதால் இந்த மூன்று நடிகர்களும் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவார்கள் என்று ‘அம்மா’ வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது.

இதேபோல் செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலிலும் அதிகப்படியாக இந்த முறை  பெண்களே விண்ணப்பித்துள்ளனராம்.

ஹனிரோஸ், லேனா, மஞ்சு பிள்ளை, ரச்சனா நாராயணன்குட்டி இந்த நால்வரும் செயற்குழு பதவிக்கு போட்டியிடுகின்றனர். மேலும் பாபுராஜ், நிவின் பாலி, சுதீர் கரமனா, டினி டோம், டொவினோ தாமஸ், உன்னி முகுந்தன், லால், விஜயபாபு, சுரேஷ் கிருஷ்ணா, நாசர் லதீப் ஆகியோரும் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இவர்களில் சிலர் கடைசி நேரத்தில் தங்களது வேட்பு மனுவை வாபஸ் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனுவை வாபஸ் வாங்க வரும் புதன்கிழமை கடைசி நாளாகும்.

நடிகர் எடவலா பாபு தொடர்ச்சியாக 21 வருடங்களாக இந்த அம்மா’ அமைப்பின் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Our Score