தியேட்டர் டிக்கெட் விலையை அதிக விலைக்கு விற்றால் நேரில் வந்து அடிப்பேன் – நடிகர் மன்சூரலிகான் ஆவேசம்..!

தியேட்டர் டிக்கெட் விலையை அதிக விலைக்கு விற்றால் நேரில் வந்து அடிப்பேன் – நடிகர் மன்சூரலிகான் ஆவேசம்..!

இப்போதெல்லாம் ஹீரோக்களைவிடவும் வில்லனான நடிகர் மன்சூரலிகான்தான் தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைகளை பற்றி மேடைகள் தோறும் முழங்கி வருகிறார்.

‘உன் காதல் இருந்தால்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் மன்சூரலிகான் வழக்கம்போல கொதிப்பாகவே பேசினார்.

இந்த முறை தியேட்டர்களில் அரசு நிர்ணயித்த கட்டணங்களைவிடவும் அதிகமாக வைத்து விற்பனை செய்பவர்களை ஒரு பிடிபிடித்தார். “அப்படி விற்பவர்களை நானே நேரில் வந்து அடித்து, உதைப்பேன்” என்று அதிரடியாய் அறிவித்தார் மன்சூரலிகான்.

இது தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் பேசும்போது, “மலையாளத்தில் இருந்து தமிழ் திரையுலகத்திற்கு வந்து இரு மொழிகளிலும் இந்த ‘உன் காதல் இருந்தால்’ என்ற படத்தைத் தயாரித்து இயக்கியிருக்கிறார் ஹாசிம் மரைக்கார். மம்முட்டி குடும்பத்திலிருந்து அவரது மகனும் மற்றும் தம்பி மகனும் சினிமாவிற்கு வந்துவிட்டார்கள். அதுபோல் அனைத்துத் துறைகளில் இருப்பவர்களும் சினிமாவிற்கு வரவேண்டும்.

7H7A8794

மம்முட்டியுடன் நடிப்பது என் லட்சியம். தமிழில் அவருடன் மூன்று படங்களில் நடித்துவிட்டேன். அனைத்தும் நூறு நாட்கள் படம். மலையாளத்தில் அவருடன் நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பது மிகப் பெரிய ஏக்கமாக உள்ளது.

சினிமா என்பது மொழி, இலக்கியம், நாடு ஆகியவற்றைக் கடந்த ஒன்று. அந்த வகையில் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து ஒரு படம் எடுக்கிறார்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான ஒரு பெரிய படத்திற்கு சரியான வசூல் இல்லை. ஏனென்றால் மக்களின் பணம் சூறையாடப்படுகிறது. இருந்தும் மக்களுக்கு சினிமா மீது இருக்கும் மோகத்தால் படங்களை பார்க்கத் தொடர்ந்து வருகிறார்கள்.

தயாரிப்பாளர்கள் இரண்டு வருடங்களாக தங்களிடம் இருக்கும் பணத்தைப் போட்டு படம் எடுக்கிறார்கள் என்றால் அதற்கு ஈடுசெய்யும் வகையில் வருமானம் வரவேண்டும்.

ஆனால், பெரிய படங்களுக்கு விடியற்காலை 4 மணி காட்சி, 5 மணி காட்சி என்று எதற்கு போடுகிறார்கள்…? அதிலும் ரூ.1000 முதல் ரூ.5000-வரை டிக்கெட் விற்கப்படுகிறது. அரசாங்கம் நிர்ணயித்த விலை என்ன?

7H7A8789 

எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் சரி, எத்தனை கோடி செலவழித்து எடுத்த படமாக இருந்தாலும் சரி ஒரு டிக்கெட்டின் விலை ரூ.60 முதல் ரூ.160 க்கும் மேல் யார் விற்கிறார்களோ, அவர்களை நானே நேரில் சென்று அடிப்பேன். என் ஏழை மக்களின் கோவணத்தை அவிழ்த்து டிக்கெட்டிற்கு பணம் வசூலிப்பவரை சும்மாவிட மாட்டேன். 

அதேபோல், ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்வதற்காக வசூலித்துக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் நிறுவனத்தையும் எதிர்க்கிறேன். ரூ.10க்கு மேல் வசூலிக்கக் கூடாது.

அரசியல் அரியாசனத்தில் அமர்ந்திருப்பவர்களின் தேவையைத் தீர்ப்பதல்ல சினிமா. சாமான்ய மக்களின் சட்டை பையில் இருக்கும் சிறிய தொகையில் சந்தோஷத்தைக் கொடுப்பதுதான் சினிமா.

இன்று டாஸ்மாக் இல்லாமல் அரசாங்கம் இல்லை. அந்த டாஸ்மாக்கில் ரூ.115க்கு விற்கப்படும் சரக்கை ரூ.200க்கு விற்றால் சும்மா விடுவார்களா? அதேபோல் டிக்கெட் விலையும் ரூ.160க்கு மேல் விற்கக்கூடாது.

எந்தத் திரையரங்கமாக இருந்தாலும் சரி இதை மீறி வசூலித்தால் என்னிடம் கூறுங்கள். நான் அவர்களை தண்டிக்கிறேன். உச்சத்தில் இருக்கும் ரஜினி, கமல், விஜய், விஷால், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களும் இதற்கு கோரிக்கை விடுக்க வேண்டும். இதற்கு ‘கில்டு’ அமைப்பில் இருப்பவர்களும் முன் வர வேண்டும். ஒருவரும் வராமல் இருப்பது மனக் குறைவாக இருக்கிறது.

ஏனென்றால், ஈழத் தமிழர்கள் 40 நாடுகளில் 20 லட்சம் பேர் வாழ்கிறார்கள். அவர்கள் எவ்வளவோக கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் படங்களைப் பார்ப்பதால்தான் இன்று பத்து கோடிக்கு மேல் வசூல் வருகிறது.

ஆகையால், யாரெல்லாம் அதிக விலைக்கு விற்கிறார்களோ அவர்கள் என் மீது FIR போட்டாலும் பரவாயில்லை. அவர்களை அடிப்பேன் என்று சவால் விடுகிறேன், அடி உதவுவது போல் யாரும் உதவமாட்டார்கள்.

தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்தி மக்களுக்கு சினிமா மீது போதையை உண்டாக்குகிறார்கள். மக்களும் எப்போது படம் வெளியாகும் என்று பணம் கையில் இல்லாமல் எதிர்ப்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

இன்றைக்கு இந்த நாடு ஒரு முதல்வரை கொலை செய்துள்ளது. ஒரு பிரதமர் நாட்டையே மார்வாடிகளுக்கும், குஜராத்திக்கும் விற்றுவிட்டார். சமீபத்தில் அடித்த கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் அரும்பாடுபட்டு வளர்த்த 2000 தென்னம்பிள்ளைகள் இழந்து நிற்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தீர்வை சொல்ல எந்த அரசும் முன் வரவில்லை…” என்று கொதித்தார்.

Our Score