full screen background image

“ஜெயலலிதா மரணத்தில் மர்மம் – சசிகலா பதில் சொல்ல வேண்டும்..!” – நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசம்

“ஜெயலலிதா மரணத்தில் மர்மம் – சசிகலா பதில் சொல்ல வேண்டும்..!” – நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசம்

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் இன்று மதியம் தன்னுடைய வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசும்போது, “மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவே நான் நினைக்கிறேன்.

செப்டம்பர் 21-ம் தேதி நல்ல உடல் நலத்தோடு நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்.. மறுநாள் எப்படி இத்தனை சீரியசாக முடியும்.?

அப்படியே உடல்நலக் குறைவு ஏற்பட்டிருந்தாலும் அதை ஏன் ரகசியமாக வைக்க வேண்டும்..?

தமிழக கவர்னர், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி என பலரையும் பார்க்க விடாமல் தடுத்தது ஏன்..?

jj-death-photo-1

சாதாரண காய்ச்சல் என்றுதானே சொன்னார்கள். பின்னர் யாருமே பார்க்க முடியாத அளவுக்கு ரகசியம் காத்தது ஏன்..?

75 நாட்கள் அவரை மருத்துவமனையில் அடைத்து வைத்ததற்கு என்ன காரணம்..?

முதல்வர் கூடவே இருக்கும் மருத்துவக் குழு 22-ம் தேதி என்ன செய்தது..?

ஜெயலலிதா மருத்துவமனைக்கு பேசும் நிலையில் சென்றாரா… அல்லது நினைவிழந்த நிலையில் சென்றாரா..?

இதற்கான சி.சி டி.வி. காட்சிகள் வெளியிடப்பட வேண்டும். 

ஐ.சி.யு.வில் சேர்த்திருந்தாலும் கண்ணாடி வழியாக பார்க்க முடியுமே… அதையும் தடுத்தது ஏன்..?

முதல்வரின் அண்ணன் மகள் தீபாவையும் ஏன் தடுத்து நிறுத்தி விரட்டினார்கள்..?

அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்வதில் ஏன் இந்தனை அவசரம் காட்டினார்கள்..?

நான் பல முறை ஆஸ்பத்திரி போனேன். அவர்கள் சொல்வதை கேட்டுவிட்டு வந்தேன். இந்த சந்தேகத்தை அப்போதே அப்பல்லோ வாசலில் நான் ஏன் கேட்கவில்லை என்றால், ‘அம்மா குணமடைகிறார்… ஆப்பிள் சாப்பிடுகிறார். அரை இட்லி சாப்பிடுகிறார்’ என்று அப்போது அங்கே சொல்லிக் கொண்டே இருந்தார்கள். நான் அதை உறுதியாக நம்பினேன்.. எப்படியாவது அம்மா நலமாக திரும்பி விடுவார் என்றுதான் நானும் என்னைப் போன்ற கோடிக்கணக்கான தொண்டர்களும் அமைதி காத்தோம். 

அவரை பார்த்துக் கொண்ட உதவியாளரான சசிகலாதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும். எனக்கு ஸ்லோ பாய்சன் கொடுக்க பார்த்தார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அவர்களால் விரட்டப்பட்ட கூட்டம்தானே, அப்போது அவர் உடல் அருகே நின்றது.

இதே சசிகலாவை இதே குற்றச்சாட்டுகள் சொல்லிதானே தன் வீட்டைவிட்டு அம்மா விரட்டியடித்தார்..? எனவே முதல்வர் மரணத்தில் உள்ள சந்தேகத்தை மீடியாக்கள்தான் தீர்க்க வேண்டும்.

ஒரு மாநிலத்தின் முதல்வருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன..?

நானும் அ.தி.மு.க.வில் இருந்திருக்கிறேன். பல முறை போயஸ் வீட்டுக்கு குடும்பத்தோடு போய் அம்மாவை பார்த்திருக்கிறேன். குழந்தை மனசு அவர்களுக்கு. இப்போது வாட்ஸ்அப், பேஸ்புக்கில் வருகின்ற செய்திகளை பார்க்கிற போது நெஞ்சு பதறுகிறது.

அவருக்கு சாக வேண்டிய வயசே இல்லை. அவரை அடித்தார்கள், கீழே விழுந்துவிட்டார். தூக்கப் போன வேலைக்காரப் பெண்ணை தடுத்தார்கள் என்று என்னென்னவோ செய்திகள் வெளி வருகின்றன. 

இதை கேள்விப்பட்டு சில நாட்களாக எனக்கு தூக்கமே வரவில்லை. 75 நாட்கள் தனி அறையில் இருக்கும்போது தன்னை வந்து யாரும் பார்க்க மாட்டார்களா என்று அவர் ஏங்கியிருக்க மாட்டாரா..?

தமிழகத்தில் தெருத்தெருவாக போய் ‘நான் உங்களுக்காக என் வாழ்வையே அர்ப்பணம் செய்திருக்கிறேன்’ என்று சொல்லி, சொல்லி உழைத்துதானே இந்த பதவிக்கு வந்தார்கள்.

அப்படிப்பட்ட செல்வாக்குமிக்க என்னுடைய மரணம் எப்படி நிகழ்ந்தது என்று கேள்வி கேட்க ஒருவர் கூடவா இந்தத் தமிழகத்தில் இல்லை என்று அம்மாவின் ஆன்மா யோசிக்காதா…?

நான் கொஞ்சமாவது அவரின் உப்பை சாப்பிட்டிருக்கிறேன். எனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை வெளிப்படுத்திவிட்டேன். இனி இதற்கெல்லாம் அவரோடு உடனிருந்த சசிகலாவும், அப்பல்லோ மருத்துவமனை உரிமையாளர் பிரதாப் ரெட்டியும்தான் பதில் சொல்ல வேண்டும்.

‘சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் ஒலிக்க வேண்டும்’ என சுயமாக உத்தரவிட்ட நீதிமன்றம், நமது தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணத்தையும் சிறப்பு வழக்காக தாமாகவே முன்வந்து விசாரித்து தவறு செய்தவர்களுக்கு தண்டனை தர வேண்டும்.

ஒரு சாமானிய குடிமகனாக எனக்குள் எழுந்த சந்தேகங்களை எழுப்பியிருக்கிறேன்.

தேவைப்பட்டால் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து கேள்வி கேட்பேன். அதோடு சட்ட ரீதியாக வழக்கும் போடுவேன்…” என்றார் ஆவேசமாக..!

இந்த அளவுக்கு கேள்வியை கேட்கவாவது தமிழ்ச் சினிமாவுலகத்தில் இவருக்காச்சும் முதுகெலும்பு இருக்கே..? சந்தோஷம்..! இங்கதான் வில்லன்களெல்லாம் ஹீரோவா இருக்காங்க.. ஹீரோக்களெல்லாம் காமெடியன் மாதிரியே இருக்காங்க..!

Our Score